Pages

Wednesday, September 9, 2009

அடிப்படையில ஒன்றே..



127.
நெய்யும் வெண்ணையு மிருபேர் களுமறி நினைவிற் பிறிவறி வினில்லை
செய்யுந் நனவினி லிறுகும் மனதொடு சேருஞ் சின்மய விஞ்ஞானன்
நையுந் துயர்மன நழுவும் பொழுதுணர் ஞானச்சுக முணுமாநந்தன்
பெய்யுந் துளிகளு நீருங் குளமொடு பாகும் போலிவர் பிறிவன்றே

நெய்யும் வெண்ணையும் இரு பேர்களும் அறிநினைவில் பிறிவு. அறிவினில் இல்லை. செய்யும் நனவினில் (ஜாக்ரத்தில்) இறுகும் (ஸ்தூலமான) மனதொடு சேரும் சின்மய விஞ்ஞானன் (விச்வன்), நையும் (வருத்தும்) துயர்மனம் நழுவும் பொழுது உணர் ஞானச் சுகம் உணும் ஆநந்தன்[இருவரும் ஒருவரே]. பெய்யும் துளிகளும் நீரும், குளமொடு (வெல்லத்துடன்) பாகும் போல் இவர் பிறிவன்றே.
--
வெண்ணை, நெய்ன்னு பெயர்கள் இரண்டானாலும் அவை அடிப்படையில ஒன்றேதான்.

விஞ்ஞானமயனும் ஆனந்த மயனும் அந்தக்கரண விருத்தி, அவித்தை ஆகியவற்றால பிரிவானாலும் இயக்கத்தால் வேறல்ல.

ஜாக்கிரத்தில் மனதுடன் கூடிய ஆன்மாவே மனம் ஒடுங்கிய போது ஆனந்தமயனாகிறான். மழை பெய்யுது. அதில இருக்கிற நீரும் குளத்தில இருக்கிற நீருக்கும் என்ன வித்தியாசம்? வெல்லத்துடன் பாகும் வேறாகாதது போல.


2 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

இங்க தான் மறுபடியும் ஸ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதம் சொல்லும், "யானையும் பிரம்மம், நானும் பிரம்மம்" கதை நினைவுக்கு வருகிறது.

உதாரணம் தான் என்றாலும், வெண்ணையும் நெய்யும் ஒண்ணுதான்றது stability என்ற ஒரு பண்பு அல்லது தகுதியிலேயே மாறுபட்டுப் போகிறதே!

வெண்ணெய், அப்படியே வச்சிருந்தாக் கெட்டுப் போயிடும்! காய்ச்சின வெண்ணெய் நெய்யா மாறும் போது, அதிக காலம் கெடாமல் இருக்கும்! அதே மாதிரி, பாலினுள் வெண்ணெய் வெளிப்படாமல் இருந்த காலத்துலயும், அது இருக்கத்தான் செய்கிறது!

கே.பாக்யராஜ் டைப்பிலதான் யோசிக்கத் தோணுது:

"வெல்லம், காய்ச்சினால் வெல்லப் பாகு ஆகலாம்!
ஆனா, வெல்லப் பாகு ஒருபோதும் வெல்லம் ஆக முடியாது"

:-))

திவாண்ணா said...

பேரு வேறேயா இருந்தாலும் எஸ்ஸென்ஷியலி ஒண்ணேதான் என்கிறார்.
வேற இடம் வேற ரூபம் குணம் இருந்தாலும்...

இங்கே ஆபீஸ்லே பாக்கிற மானேஜரேதான் சாயங்காலம் கோவில்ல பிரவசனம் செய்யறார். இங்கே அவர் தாட் பூட் ன்னு குதிக்கிறார்; வேலை வாங்கறார். அங்கேயோ சாந்த சொரூபியா இருக்கார். அமைதியா சாந்தமா இருன்னு உபதேசம் செய்யறார். இடம் பொருள் ஏவல் பொறுத்து வேஷம்.

ரெண்டு பேரும் வேற வேற மானிபெஸ்டேஷன் ஆனாலும் உண்மையில் ஒருவரே.

இதெல்லாம் ரொம்ப பூந்து பாக்கக்கூடாது!
:-))