Pages

Monday, August 31, 2009

சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறாங்களே?



117.
ஆத்மா ஆநந்த சொரூபமாய் தள்ளக் கூட்டப்படாததாய் இருக்கின்ற தன்னை வெறுப்பினால் நீக்குவரோ?

வேகின்ற கோபங்க ளாலென்னை நான்கொன்று விடுகிறே னென்று சிலபேர்
சாகின்ற படியினாற் றன்னையே தான்கொன்று சாவனெனல் சங்கை யலவே
தேகந்த னைக்கொல்லு மவனால்வி டப்பட்ட தேகமவ னல்லன் மகனே
ஆகந்த னிற்கோ பமலதுதனை யொருநாளு மான்மாவெ றுப்பதிலையே.

வேகின்ற கோபங்களால் என்னை நான் கொன்று விடுகிறேன் என்று சிலபேர் சாகின்ற படியினால் தன்னையே தான் கொன்று சாவன் எனல் சங்கை அலவே. தேகந்தனைக் கொல்லும் அவனால் விடப்பட்ட தேகம் அவனல்லன் மகனே. ஆகம் தனில் கோபம் அலது (தேகத்தின் மீது கோபம் வந்தது அல்லாது) தன்னை ஒரு நாளும் ஆன்மா வெறுப்பதிலையே.
[ஆத்மா சுகத்துக்கு ஏதுவாய் உள்ளபோது தேகத்தை பேணி, சுகத்துக்கு ஏது அல்லாத போது அதன் மீது வெறிப்படைந்து அதை விடுகிறது. விட்ட தேகம் அவனல்ல. எப்போதும் ஆன்மா தன்னை வெறுக்கவில்லை. அது சுக ரூபமே.]

சீடன் கேட்கிறான், ஏன் ஸ்வாமி சில பேர் வெறுப்பில தற்கொலை கூட செய்து கொள்கிறாங்களே? நீங்க என்னடானா ஆன்மாவை வெறுக்க முடியாது என்கிறீங்க?
குரு சொல்கிறார், ஆமாம்பா உண்மைதான். சில சமயம் சிலர் கொடிய வியாதி, மன சஞ்சலம் இதெல்லாம் வரும்போது தற்கொலை செய்து கொள்கிறங்கதான். ஆனா உன் கேள்வி தப்பு. அவங்க ஆன்மாவை விடலை. அவங்க தேகத்தைதான் விடறாங்க. அந்த உடம்பு அவங்க இல்லை. ஆன்மாவே தானாக இருக்கிறதால யாருமே அதை விடவும் முடியாது. கொள்ளவும் தேவையில்லை.

118.
தாகப் படும்பொருளி லும்மகன் பிரியமாந் தனயனிலு முடல்பிரியமாம்
ஆகத்தி லும்பிரிய மிந்திரிய மாங்கரண மதனிலும் பிரியமுயிராம்
ஏகப்பி ராணனிலும் வெகுபிரிய மான்மாவி லிந்தவான் மாமுக்கியம்
ஊகத்தி னாற்கெவுண மித்தைகர்த் தாமூன்று மோரொன்றி லதிகமகனே

தாகப்படும் (பிரியமாக சம்பாதிக்கும்) பொருளிலும் (பொருளை விட) மகன் பிரியமாம். தனயனிலும் (மகனை விட) உடல் பிரியமாம். ஆகத்திலும் (உடலிலும்) பிரியம் இந்திரியமாம். (புலன்கள்). இந்திரியங்களிலும் கரணம் (அந்தக்கரணம்) பிரியமாம். அதனிலும் பிரியம் உயிராம். (ஜீவனாம்) ஏகப் பிராணனிலும் வெகு பிரியம் ஆன்மாவில். இந்த ஆன்மா முக்கியம். [அதை காட்டிலும் பிரியமானது இல்லை]. ஊகத்தினால் கெவுணம் [செல்வம் முதலான ஆறு பிரியங்கள்] மித்தை கர்த்தா மூன்றும் ஓரொன்றில் அதிகம் மகனே.
--
ஸ்வாமி, ஆன்மாவே பிரிய வஸ்துன்னா காசு மேலே எல்லாருக்கும் ஆசை இருக்கு. தன் பிள்ளைகள் மேலே எல்லாருக்கும் ஆசை இருக்கு. இதை என்ன சொல்லறீங்க?
சாதாரணமா யாருக்கும் காசு மேல ஆசை இருக்கு. ஆனா தன் மாகனுக்கு ஒரு உடம்புன்னா காசு செலவழிச்சு வைத்தியம் பாக்க தயாரா இருக்காங்க. ஆனா தன் மகனை விட தன் உடம்பு மீதே ப்ரியம் அதிகம்; பல காரணங்களுக்காக தன் பிள்ளை மேலே கோபம் இருக்கும். தன் உடம்பு மேலே கோபம் வராது. அதுக்கு குளிர்ச்சியா இருக்க ஏ.சி என்ன பஞ்சு மெத்தை என்ன இந்த ரீதியிலே நிறைய உண்டு. உடலைவிட மனசு மேலே பிரியம் அதிகம். உடம்பு கொஞ்சம் சிரமப்பட்டாலும் மனசு சந்தோஷமா இருக்கும்ன்னா அதுக்கும் நாம தயாரா இருக்கோம். மனசை விட உயிர் மேலேதான் ஆசை அதிகம்.
டாக்டர் இனிமே இன்ன இன்ன விஷயங்களை விட்டுடனும்; இல்லைன்னா உயிருக்கே ஆபத்துன்னு சொன்னா சரின்னு அப்படியே செய்கிறோம், அதெல்லாம் இது வரைக்கும் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்ததா ஆனாலும்.


2 comments:

Geetha Sambasivam said...

அப்பாடா! இது பரவாயில்லை!

திவாண்ணா said...

அப்பாடா ஒரு ஓட்டு விழுந்தது!
:-)))