Pages

Tuesday, August 11, 2009

பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் மாயாச் சக்தி பிரமத்தை தவிர வேறாக இருக்குமா?



98.
பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் மாயாச் சக்தி பிரமத்தை தவிர வேறாக இருக்கும்.
சத்தி சத்தனைத் தவிரவே றன்றுகாண் சத்தனா மாயாவி
வித்தை காட்டிய விந்திர சாலம்பொய் வித்துவான் மெய்போலப்
புத்தி மைந்தனே சத்திமா னாகிய பூரண வான்மாவின்
வத்து நிண்ணயஞ் சொன்னதிட் டாந்தத்தின் வழிகண்டு தெளிவாயே

[இந்திர ஜால] சத்தி சத்தனைத் [இந்திர ஜாலக்காரனை] தவிர வேறன்று காண். சத்தனாம் (சக்தியுடைய) மாயாவி வித்தை காட்டிய இந்திர சாலம் பொய். வித்துவான் மெய் போல- புத்தி மைந்தனே, சத்திமானாகிய பூரண ஆன்மாவின் வத்து நிண்ணயம் சொன்ன திட்டாந்தத்தின் வழியாக கண்டு தெளிவாயே.
--
இந்திர ஜாலம் காட்டும் மாந்திரீகனை தவிர அவன் சக்தி வேறானதல்ல. அது அவனோட வெளிப்பாடேதான். அது போல மாயை பிரமத்துக்கு வேறானதல்ல. அதனால் வஸ்து ஒன்றே, இரண்டல்ல. மாந்திரீகன் செய்த காரியங்கள் பொய்யாகி அவன்மட்டும் மெய்யாக இருப்பது போல மாயையும் மாயா காரியங்களும் பொய்; பிரம்மம் மெய்.

மாயை, அவித்தை, ஆவரணம், விக்சேபம், அஞ்ஞானம், சத்தி, பிரகிருதி என்ற எல்லா சொற்களும் ஒன்றையே குறிக்கும். மாயையின் தொழில்கள் பல. ஆதலால் வேறு வேறு பெயர்கள் வந்தன. மாயைக்கு உற்பத்தின்னு ஒண்ணு இல்லை என்கிறதால அது அநாதி. அதுக்கு பல வெளிப்பாடுகள் இருந்தாலும் முக்கியமா இருக்கிறது ஆவரணமும் விட்சேபமும்தான்.

மாயை அநாதியானதால அதன் காரியமான பிரபஞ்சமும் அநாதி. எப்படி கானல் நீர் பொய்ன்னு உணர்ந்த பின்னாலும் அது தோன்றிகிட்டுதான் இருக்கோ அப்படி பிரபஞ்சம் மாயைன்னு தெரிஞ்ச பின்னும் அது தோன்றவே தோன்றும். கானல் நீர் சத்தியமில்லைன்னு எப்படி நமக்கு தெரியுமோ அதே போல பிரபஞ்சம் சத்தியமில்லைன்னு ஞானிக்கு தெரியுது.
இதனால பிரம்மம் மாதிரி மாயையும் நித்தியமேன்னு வாதிக்கிறவங்க உண்டு. ஏன்னா பிரம்மம் இருக்கிற வரை மாயையும் இருக்கும். ஆனால் ஒரு தனி சீவனைப்பொறுத்த அளவில இதை நீக்கிக்கொள்ளலாம். அந்த சீவனை பொறுத்த அளவில அது அநித்தியமே. ஞானியை பொறுத்த வரை மாயை இல்லை.

கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா அனுபவத்தில மாயை மனசைத்தவிர வேற ஒண்ணும் இல்லை.

மாயை யெனுமிவ் வுரைக்கருத்த
மதிக்கின் யாதொன் றிலாதததுவே
மாயை யெனலிப் படியிருக்க
மதிப்பரதனை இரு வகையாய்
மாயை மெய்யென் றுரைத்திடுவர்
மயக்கப்பட்டு தனைமறந்தோர்
மாயை பொய்யென் றுரைத்திடுவர்
மயக்க நீங்கி தனையறிந்தோர்
-அத்துவித உண்மை - குமாரத்தேவர்
மாயை யெனும் இவ்வுரைக் கருத்த மதிக்கின் யாது ஒன்று இலாதததுவே. மாயை எனல் இப் டியிருக்க, மதிப்பர் அதனை இரு வகையாய்.மாயை மெய் என்று உரைத்திடுவர் மயக்கப்பட்டு  தனை மறந்தோர். மாயை பொய் என்றுரைத்திடுவர் மயக்க நீங்கி  தனையறிந்தோர்.
-அத்துவித உண்மை - குமாரத்தேவர்

No comments: