Pages

Friday, August 7, 2009

கனவில பாத்ததை பொய்ன்னு சொல்கிறது தப்புன்னா...



குரு சொல்கிறார்: மகனே கனவில பாத்ததை பொய்ன்னு சொல்கிறது தப்புன்னா, அற்பமான மாயையில தோன்றிய சகத்தை பொய் என்கிறதும் தப்புதான். கனவில பாத்ததை பொய்ன்னு சொல்கிறது தப்பு இல்லைன்னா, மாயையால தோன்றிய சகத்தை பொய் என்கிறதும் தப்பு இல்லை.
வேதத்தோட ஞான காண்டத்தில பொய்ன்னு சொல்லப்பட்ட உருவங்கள் முதலானதை வழி பட்டவங்களை புண்ணியவான்கள்ன்னு புராணங்கள் சொல்லுதுங்க. அப்படி இருக்க வேதம் உண்மைன்னு சொன்னதை ஆமோதிக்கிற ஞானிக்கு குற்றம் யார் சொல்ல முடியும்? பெயர் உருவம் கொண்ட மாயா காரியங்கள் எப்பவுமே மித்தை. எங்கேயும் இருக்கிற சச்சிதானந்த சொரூபம் மட்டுமே சத்தியம்.

எப்படி நாம தூக்கத்திலேந்து முழிச்சதும் நாம் கண்டது கனவுன்னு ரொம்ப சுபாவமா தோணுதோ, அதே போல அவித்தை ஒழிஞ்ச ஞானிக்கு இந்த பிரபஞ்சம் பொய்ன்னு இயல்பா தோணுது. அதனால அவன் அப்படி சொல்கிறது குற்றம் இல்லை.

ஆனா இது அந்த பிரம்மஞானியைப்பத்தி சொல்கிறது மட்டுமே. நாம அப்படி இல்லையே! நான் சீவன் என்கிற நினைப்பு போகாமல், ஆத்ம தரிசனம் கிட்டாமல், அஞ்ஞானத்தில இருந்துகிட்டு, ஏதோ சிலதை படிச்சுட்டு, அதில ஆழ்ந்து போக பாக்காம; "எல்லாம் பொய்! கோவிலாவது, குளமாவது; அதில ஒண்ணும் இல்லை. எல்லாம் நமக்குள்ளே இருக்கு" ன்னு பிதற்றிக்கிட்டு திரியக்கூடாது. அப்படி செய்கிறது அவங்களையும் முன்னேற்றாது; மத்தவங்களையும் குழப்பும். இதனால அவங்களுக்கு நரக வேதனை கிடைக்குமாம்.

92.
சொற்ப னந்தனிற் கண்டதைப் பொய்யென்று சொல்வது பிழையானால்
அற்ப மாயையிற் றோன்றிய சகங்களை யசத்தெனல் பிழையாமே
சொற்ப னந்தனிற் கண்டதைப் பொய் யென்று சொல்லலாமெனிற் மைந்தா
அற்ப மாயையி றோன்றிய சகமெலா மசத்தியமெனலாமே

சொற்பனந்தனில் (கனவில்) கண்டதைப் பொய் என்று சொல்வது பிழையானால், அற்ப மாயையில் தோன்றிய சகங்களை அசத்து எனல் பிழையாமே. சொற்பனந்தனில் (கனவில்) கண்டதைப் பொய் என்று சொல்லலாம் எனில் மைந்தா, அற்ப மாயையில் தோன்றிய சகமெலாம் அசத்தியம் எனலாமே.

93.
பொய்யை மெய்யென்ற மூடர்புண்ணியரென்று புராணங் கூப்பிடுமானால்
மெய்யை மெய்யென்ற ஞானிக்குக் குற்றங்கள் விதித்தசாத் திரமுண்டோ
பொய்ய தேதெனி னாமரூ பங்களாம் பூதமா கியமாயை
மெய்ய தேதெனிற் சத்திதானா னந்தமாய் வியாபிக்கு மான்மாவே

பொய்யை மெய்யென்ற மூடர் புண்ணியர் என்று புராணம் கூப்பிடுமானால், மெய்யை மெய் என்ற ஞானிக்கு குற்றங்கள் விதித்த சாத்திரமுண்டோ? பொய்யது ஏது எனில் நாம ரூபங்களாம் பூதமாகிய மாயை. மெய்யது ஏது எனில் சச்சிதானானந்தமாய் வியாபிக்கும் ஆன்மாவே.
--
ஸ்ருதி முதலியவற்றால் ஞான காண்டத்தில் பொய் என்று தள்ளப்பட்ட சொரூபம் முதலியவற்றை சத்தியம் என்று வழி படுவோர்களை புண்ணியவான்கள் என புராணங்கள் கூறும். வேதம் சத்தியம் என்று கூறிய உண்மையை உண்மை என சாதிக்கும் ஞானிக்கு குற்றங்கள் விதிக்கும் சாத்திரம் ஏது? ஏதும் இல்லை. நாம ரூபங்கள் ஆகிய மாயா காரியங்கள் அனைத்தும் மித்தை. எங்கும் உள்ள சச்சிதானந்த சொரூபமே சத்தியம்.
--
உறங்கி விழித்தவன் கண்ட கனவு பொய் என உணர்வது போல பிரம்ம அனுபவம் கிடைக்கப்பெற்ற ஞானி எல்லாம் மித்தை என்கிறான். அது குற்றம் ஆகாது. ஆனால் அத்தகைய அனுபவம் இல்லாது புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு எல்லாம் பொய், கோவிலில் என்ன இருக்கிறது? எல்லாம் நமக்குள் இருக்கிறது என்று பேசி திரிபவர்கள் தானும் கெட்டு மற்றவரையும் கெடுப்பார்கள்.


4 comments:

Geetha Sambasivam said...

//ஆத்ம தரிசனம் கிட்டாமல், அஞ்ஞானத்தில இருந்துகிட்டு, ஏதோ சிலதை படிச்சுட்டு, அதில ஆழ்ந்து போக பாக்காம; "எல்லாம் பொய்! கோவிலாவது, குளமாவது; அதில ஒண்ணும் இல்லை. எல்லாம் நமக்குள்ளே இருக்கு" ன்னு பிதற்றிக்கிட்டு திரியக்கூடாது. அப்படி செய்கிறது அவங்களையும் முன்னேற்றாது; மத்தவங்களையும் குழப்பும். இதனால அவங்களுக்கு நரக வேதனை கிடைக்குமாம்.//

இது ரொம்பவே நல்லாப் புரியுது. :))))))

திவாண்ணா said...

/இது ரொம்பவே நல்லாப் புரியுது. :))))))//
அதானே! முன்னே பின்னே பதிவுகளை படிச்சுட்டீங்க போல இருக்கு.

Kavinaya said...

ஒண்ணுமே புரியலை :(

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்..
இதான் வாழ்க்கை.
புரிஞ்சதா ஒத்தர் சொன்னா இன்னும் ஒத்தர் புரியலைங்கிறாங்க!
:-))
என்ன புரியலைன்னு சொன்னா திருப்பி முயற்சி செய்யறேன்