Pages

Monday, July 6, 2009

ஞானிகளுக்கு எதுக்கு சித்திகள்?



47
சித்திகளால் பயனில்லை என தெரிந்தும் ஏன் சில ஞானிகள் அதை விரும்பி வருத்தமுற்றார்கள்?

யோக ஞானமே முத்தியைத் தருமெனி லொழிந்த சித்திகள் வேண்டி
மோக மாயுடல் வருந்தினார் சிலசில முத்தர்களேனென்றால்
போக மாய்வரும் பிராரத்த கர்மங்கள் புசித்தன்றோ நசித்தேகும்
ஆகை யாலந்தச் சித்திகள் பிராரத்தமாகுமென் றறிவாயே

யோக ஞானமே முத்தியைத் தரும் எனில் ஒழிந்த சித்திகள் வேண்டி மோகமாய் உடல் வருந்தினார் சிலசில முத்தர்கள். ஏனென்றால் போகமாய் வரும் பிராரத்த கர்மங்கள் புசித்து அன்றோ நசித்து ஏகும்? ஆகையால் அந்தச் சித்திகள் பிராரத்தமாகும் என்று அறிவாயே.

பரமான்ம ஐக்கியத்தை தர ஞானமே மோக்ஷத்தை தரும்ன்னா சில முத்தர்கள் ஏன் சித்திகள் அடைய வேண்டி அதுக்காக தவம் செய்து வருத்தினாங்கன்னா அவரவர் பிராரத்த கருமத்தை அனுபவித்தே தீர்க்க வேண்டும் இல்லையா? அதனால அவர்கள் பிராரத்த கர்மாவால தூண்டப்பட்டு சித்திகள் அடைஞ்சாங்க. ஞானிகளுக்கு அதுகளாலே என்ன பிரயோசனம் இருக்கும்? ஒண்ணுமில்லை. இருந்தாலும் சித்திகள் பெற்றவங்க போகிற போக்கிலே சிலருக்கு இந்த சித்திகளால சில நல்லது செஞ்சுட்டு போவாங்க.

[அட்டமா சித்திகளும் அனைத்துள்ள பேறுகளும்- கட்டமாங் கதிகள் தரும் பரகதி காணக்கொடா - தேவிகாலோத்தரம்.]

ஐயா குருவே நிறைய விஷயங்களை தெளிவாக்கினீங்க! நிறைய மயக்கங்கள் நீக்கிட்டீங்க. கண்ணாடியை எவ்வளோ துடைச்சாலும் தப்பில்லையே! இன்னும் கேள்வி கேட்டு தெளிவாக்கிண்டாலும் தப்பில்லையே! இதே மாதிரி இன்னும் நிறைய கேக்க விரும்பறேன்.

48.
இலக்க மாயிரஞ் சுருதியா லூகத்தா லென்மன மசையாமல்
பெலக்க வேண்டுமென் றருள்குரு வேயகப் பிராந்தி போய்த் தெளிவானேன்
துலக்க மான கண்ணாடியை யடிக்கடி துலக்கினாற் பழுதன்றே
அலக்கண் மாற்றிய தேவரீ ரெனக்குரை யமிர்தங்க டெவிட்டாவே

இலக்கம் ஆயிரம் சுருதியால், (சுருதி பிரமாணங்களாலும்) ஊகத்தால், (யுக்தி அனுபவத்தாலும்) என் மனம் அசையாமல் பெலக்க (திடமாக அழுந்த) வேண்டுமென்று அருளும் குருவே, அகப் பிராந்தி* (அந்தக்கரணத்தில் இருந்த மயக்கம்) போய்த் தெளிவானேன். துலக்கமான (தெளிவான) கண்ணாடியை அடிக்கடி துலக்கினால் (துடைத்தால்) பழுது அன்றே. (தவறில்லையே) அலக்கண் மாற்றிய (மனம் ஞான நிலையினின்று சலியாதபடி ஆக்கிய) தேவரீர் எனக்கு உரை[க்கும்] அமிர்தங்கள் தெவிட்டாவே.

"நிறைய மயக்கங்கள்" அப்படின்னு சொன்னாரில்லே சீடன்?
அதையெல்லாம் வகைப்படுத்தி இருக்காங்க.

*= அஞ்ஞான தசையில் உள்ளோருக்கு அகப் பிராந்தி ஐந்து.

1. இது நித்தியம் இது அநித்தியம் என ஆராயாது இவ்வுலகம் நித்தியம் என நினைத்தல்.
2. கருவிக்கரணங்களை பிரித்து தனக்கு அன்னியமாக காணாது சடமாகிய தேகமே தான் என நினைத்தல்.
3. நான் சீவன்; கர்மங்களை செய்கிறேன்; போகங்கள் அனுபவிக்கிறேன் என நினைத்தல்.
4 ஆன்மாவுக்கு அன்னியமாய் கடவுள் இருக்கிறார் என நினைத்தல்.
5. தான் சச்சிதாநந்த சொரூபம் என உணராது சிறிதே வல்லமை உடைய நான் எப்படி சிவமாவேன் என மயங்குதல்.

இவை ஐந்தும் தன்னை அறிந்ததும் நீங்கும்.

அப்புறமா சீடர் கர்ம அனுபவத்தைப்பத்தி கேக்கிறார்.
சாத்திரங்கள் எப்பவும் உண்மையைதானே சொல்லும்? ஒத்தர் செஞ்ச கர்மாவெல்லாம் அனுபவிச்சே தீரணும்ன்னு சொல்லி இருக்கே! இல்லாட்டா ஒழியாதாமே! அப்புறமா மறு படி பல ஜன்மங்களிலே செஞ்ச பாபம் எல்லாம் ஞானத்தீயால சுட்டு எரிக்கப்படும்ன்னு சொல்லி இருக்கு. இந்த ரெண்டிலே எது உண்மை?


3 comments:

Geetha Sambasivam said...

கர்மாவை அனுபவிச்சே தீர்க்கணும். சரி, ஆனால் பாவத்தைச் சுட்டு எரிக்கிறதுன்னா??? கர்மாதானே பாவம்?? அல்லது கர்மாவினால் பாவம் விளையுதா?? மறுபடி குழப்பம்!! :((((((((((((
முதல்லே படிச்சப்போ புரிஞ்சாப்பல இருந்தது. மறுபடி படிச்சா, குழப்பமா இருக்கு! :((((

திவாண்ணா said...

அதானே!
அடுத்த பதிவு படிக்க இது ஒரு தூண்டில்.
:-))

திவாண்ணா said...

பாபம் வாங்கித்தர கர்மாவும் இருக்கு. கர்மாவே பாபத்தை செய்யவும் சூழ்நிலை அமைச்சு கொடுத்து தூண்டும். அப்ப நாம் என்ன செய்கிறோம்? அதான் விஷயம். சாதாரணமான ஜனங்கள் தூண்டுதலுக்கு கீழ் படிவாங்க. மேலே பாபம் சம்பாதிப்பாங்க. சிலர் புத்தியால எதிர்த்து நின்னு ஜெயிக்கிறப்ப விதியை மதியால மாத்துவாங்க!