Pages

Saturday, June 27, 2009

தேவ் சார் கேள்வி



/ஒரு ஜீவந்முக்தருக்கு ஸ்தூல தேஹம் தவிர, லிங்க தேஹம், காரண சரீரம் இரண்டுமே அழிந்து
விடுகின்றன என்று பொருள் கொள்ள வேண்டுமா ?
மனம் மாய்ந்து விடுகிறது என்றால் அதை ஒட்டிய அனத்துமே இல்லை என்றாக வேண்டும் அல்லவா?//
நல்ல கேள்வி கேட்டார் தேவ் சார்!
இது வரை பாத்ததின் பின்னணியிலே கொஞ்சம் இதை பாக்கலாம்.
நாம் ஒரு ஜீவன் ஞான சாதனை செஞ்சு மேலே மேலே போகிறதை பாத்து கொண்டு இருக்கோம்.
ஒரு பெரிய திருப்பு முனை ஞானம் உதிக்கிறது. ( அது புதுசா ஒண்ணும் உதிக்கலை. மாயை போய் உண்மை நிலை தெரியுது அவ்வளோதான்.) சாதகன் சந்தேகம், விபரீதம் போல இருக்கிற அபாயங்களை எல்லாம் தாண்டி ஸ்திரப்பட்டாச்சு. இது ஜீவன் முக்த நிலை. ஞானம் வந்தாச்சு; ஆனா இன்னும் இந்த ஸ்தூல சரீரம் விழலை. எப்போ விழும்? ஞானத்தீயிலே சஞ்சித ஆகாமி கர்மாக்கள் எரிஞ்சு போச்சு. மீதி இருக்கிற ஏற்கெனெவே ஆரம்பிச்சு விட்ட பிராரத்த கர்மா முடிஞ்சதும் சரீரம் விழுந்துடும்.
அது வரை?
சூக்கும சரீரம் கொஞ்சம் இருக்கும். அந்தக்கரணம் போச்சு. அதனால்தானே அஞ்ஞானம் போகும்? பிரம்மத்தையும் கூடஸ்தனையும் பிரிக்கிறது அதுதானே? பிராணன்கள், ஞான கர்மேந்திரியங்கள் இருக்கும். அதனாலதானே இன்னும் இந்த உடம்பு சிலதை "உணர்கிறது" ,"நடக்கிறது” "சாப்பிடுகிறது”.....?
ஆனா அந்தக்கரணம் போன பிறகு எதோட ஆதீனத்திலே இவை இருக்கும்? ரஜசும் தமசும் அழிஞ்சு போன நிலையிலே சத்துவ மனசு மட்டும் எஞ்சி இருக்கும் இல்லையா? அதோட ஆதிக்கத்திலே இருக்கும். அதான் மனசோட சொரூப நாசம்.
இந்த சத்வ மனசு பிரம்மத்தை தனித்தனியா அணு அணுவா பார்க்கும் நிலையிலே இருக்கிறது. இது சவிகற்ப சமாதி.
இதை சத்வ மனசோட ஆதீனம்ன்னு சொல்லாம ஈஸ்வரனோட ஆதீனத்திலேன்னும் சொல்கிறங்க. அந்தக்கரணம் போயிடுத்து. ஜீவாத்மா பரமாத்மாவோட ஐக்கியம் ஆயிடுத்து. ஆனா இந்த உடம்பு விழணுமே? அது வரை விவகாரம் நடக்கணுமே? ஒரு சைதன்யம் (தேவ் சார் இதைப் பத்தி இன்னும் மின்தமிழிலே எழுதலையே?!) - இயங்கு சக்தி - இல்லாம ஜடப்பொருள் எப்படி இயங்கும்? அதனால அது ஈஸ்வரனோட சக்தியிலே இயங்கும். அப்ப அது ஈஸ்வரனோட விளையாட்டுப்படி இயங்கும். சேஷாத்ரி ஸ்வாமிகள் மாதிரி சாப்பிடக்கொடுத்ததை வீசி எறிஞ்சாலும் எறியும்; பகவான் ரமணர் மாதிரி எல்லாத்தையும் மௌனமா சாட்சியா பாத்து கொண்டு இருந்தாலும் இருக்கும்; ஜட பரதர் போல மலத்திலேயும் சேற்றிலேயும் இருந்தாலும் ஒண்ணும் தெரியாம இருந்தாலும் இருக்கும். பல ஜீவன் முக்தர்கள் - இவங்க ஜீவன் முக்தர்ன்னே தெரியாமலே இருக்கிறவங்க – எப்படி இருந்தாங்களோ அதே போல வேஷம் போட்டுகிட்டு இருந்து நாடகம் ஆடிட்டுப்போனாலும் போகும்!
ஆச்சு. பிராரத்த கர்மா ஒருவழியா அனுபவிச்சு முடிஞ்சு போச்சு. மத்த கர்மா ஏற்கெனெவே போயிடுத்து. அந்தக்கரணம் போனப்பவே ஆணவமும் போச்சு. சரீர விவகார நடைமுறைக்கு கனவு போல எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மாயையும் போயிடும். இப்படி காரண சரீரம் அழிஞ்சு போனதாலே சூக்கும சரீரத்தை அடுத்த பிறவிக்கு கொண்டு போகிற ஏஜென்ட் இல்லாம சூக்கும சரீரம் எங்கிருந்து வந்ததோ அங்கேயே போய் ஒடுங்கிடும்.
பிரமத்தை தனித்தனியா அனுபவிச்ச சவிகற்ப சமாதி போய் விகற்ப சமாதியும் வந்துடும். அவ்வளோதான். ஜீவன் பிரம்மத்தோட கரைஞ்சு போகிற ப்ராசஸ் முழுமை ஆகிடும்.

இப்படித்தான் நான் புரிஞ்சு கொண்டு இருக்கேன்.
விமர்சனங்களை வரவேற்கிறேன்!


18 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

தேவ் ஐயா கேட்டிருப்பது, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, நல்ல கேள்வியாகத் தான் தோன்றுகிறது. இங்கேதோன்றுகிறது என்ற வார்த்தை ஏன் வந்ததென்றால், மனம் என்ற கருவியின் ஊடாகவே இன்னமும் பார்த்துக் கொண்டிருப்பதனாலேயே!

அதே மாதிரி,
//ஜீவன் பிரம்மத்தோட கரைஞ்சு போகிற ப்ராசஸ் முழுமை ஆகிடும்.//

கரைஞ்சு போகிறது என்று சொல்லும் போதே, கரைக்கிற இன்னொன்றும் இருக்கிறது என்றும் தோன்றுகிறதே?

கரைஞ்சு என்பதற்குப் பதிலாகக் கலந்து என்ற வார்த்தையை மாற்றிப் போட்டுக் கொண்டால், அப்போதும், இப்படிக் கலந்து இரண்டற்றதாய் சொல்லப் படுகிற ஒன்று, inertness என்ற சடத்தன்மையதாய்ப் போய் விடுகிறதே?

கேள்விகள், அலையலையாய் எழுந்துகொண்டே இருக்க, ஒரு அற்புதமான அனுபவத்தை எளிய தமிழில் தந்த முயற்சிக்கு, என்னுடைய பணிவான வணக்கங்களும், நன்றிகளும் உரித்தாகுக!

Geetha Sambasivam said...

அருமையான கேள்வி தேவ் சார் கேட்டது. பதிலும் எளிமை. என்னைப் போன்றவர்கள் கூடப் புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறதுக்கு நன்றி.
கரைந்தாலும், ஒன்றோடொன்று கலந்தாலும் எது ஆதாரமோ அதில் போய்ச் சேர்ந்துவிடுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி,மீண்டும், இவ்வளவு பெரிய விஷயத்தை ரொம்பச் சாதாரணமாய்ச் சொன்னதுக்கு! மற்றவர்களின் கருத்துக்களையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

திவாண்ணா said...

@ sri ki
மனசு இருந்துண்டேதானே இருக்கு நமக்கெல்லாம்!
இப்படி ஏதாவது கேள்வி வந்தால்தான் நம்மோட புரிதலையும் கொஞ்சம் சோதிச்சு பாக்க முடிகிறது.

//கரைஞ்சு போகிறது என்று சொல்லும் போதே, கரைக்கிற இன்னொன்றும் இருக்கிறது என்றும் தோன்றுகிறதே?//
கரைந்தோ இல்லை கலந்தோ...
என்ன சொன்னாலும் பெரியவங்க சொன்ன உதாரணத்துக்கு நிகரா சொல்ல முடியலை பாருங்க:

மண் பானை உடைய உள்ளிருக்கும் கட ஆகாசமும் வெளியே இருக்கிற மகா ஆகாசமும் ஒண்ணாயிடுவது போல அந்தக்கரணம் அழிய பிரம்மமும் ஜீவனும் ஒண்ணாகிடும்!

கேள்விகள் அலை அலையா வரட்டும். அப்பதான் முடிவில் தெளிவு வரும்!

திவாண்ணா said...

@ஸ்ரீமதி கீ
நன்னியோ நன்னி! உங்களைப்போல நானும் மத்தவங்க கருத்தை எதிர் பார்க்கிறேன். :-))

yrskbalu said...

Dear all,

this is simple .

for understanding you need clarity
in mind.

like this same we discussed my acharaya while stydying upanised.

firstly you understand brahman.
for brahman - no guna, rupa, nama etc. its expresed by sat-chit-ananda swaroopa.

ghani who attained or abide own self- he is brahma ghani. he came down from that stage for us. this is very much avastha for bramaghani. but for good god seekers , to continue gods work -he is in this world. he act in sakshi bhavana. thats all.

for example- adi sankara - he is brama ghani , how can able to write granda,upanised etc?
2. we seeing in ,studying ,analysing in mind level only.but brahman is in beyond mind.then how we attained or abide our own self?

you can refer kena upanised.
kena - conveying strong truths in just like that manner

R.DEVARAJAN said...

ப்ராரப்த கர்மாநுபவம் என்னும் ஒரு தடை ஜீவந்முக்தருக்கும் இருக்கும்
என்பதால், எப்படி ஸ்தூல தேஹம் அக்கர்மாநுபவம் முடியும்வரை விழாதிருக்குமோ அப்படியே மநோநாசமும் முழுக்க ஏற்படாது
என்று முடிவு கட்ட வேண்டியுள்ளது.
ப்ராரப்தத்தால் ஒரு மனக்கஷ்டத்தை
நுகர வேண்டும் என்றிருந்தால் மனம் என்னும் ஒன்று இருக்கத்தானே வேண்டும் ?
அதனால் அவர் கட்டாயம் பாதிப்படைய மாட்டார் என்பது வேறு விஷயம்.

தேவ்

R.DEVARAJAN said...

//கரைஞ்சு போகிறது என்று சொல்லும் போதே, கரைக்கிற இன்னொன்றும் இருக்கிறது என்றும் தோன்றுகிறதே?//

Limitations of language.
விளக்கம் என்று வந்துவிட்டால்
இருமையைத் தவிர்க்க இயலாது.
கரைகிறது, ஒன்றுகிறது,ஐக்யமாகிறது
இப்படி ஏதேனும் ஒரு க்ரியையைச் சொன்னால்தான் புரியும்; வேறு வழியில்லை.

தேவ்

திவாண்ணா said...

தேவ் சார் புரிதலும் என்னுடையதும் ஒன்றாகத்தான் இருக்கு! சொரூப நாசம் அடைஞ்சாலும் மனம்ன்னு ஒண்ணு இருக்கு.

R.DEVARAJAN said...

//சேஷாத்ரி ஸ்வாமிகள் மாதிரி சாப்பிடக்கொடுத்ததை வீசி எறிஞ்சாலும் எறியும்; பகவான் ரமணர் மாதிரி எல்லாத்தையும் மௌனமா சாட்சியா பாத்து கொண்டு இருந்தாலும் இருக்கும்;//

ஸஹஜ ஸ்திதி கைகூடியவர்கள் முன்பு அவர்களது ப்ரக்ருதி எப்படி இருந்ததோ அதேபடி இருக்கும்படி விட்டுவிடுவார்கள்.
Mannerism, கையெழுத்து,பேசும் முறை எதிலும் மாற்றம் இருக்காதாம்.
ஸ்வாமி ராம ஸுகதாஸ் கூறியது.

தேவ்

கிருஷ்ண மூர்த்தி S said...

//மண் பானை உடைய உள்ளிருக்கும் கட ஆகாசமும் வெளியே இருக்கிற மகா ஆகாசமும் ஒண்ணாயிடுவது போல அந்தக்கரணம் அழிய பிரம்மமும் ஜீவனும் ஒண்ணாகிடும்!//

// சொரூப நாசம் அடைஞ்சாலும் மனம்ன்னு ஒண்ணு இருக்கு//

ப்ரஹ்ம சத்யம்;ஜகன் மித்யா என்கிற மாயாவாதத்தில் இருக்கிற மிகப் பெரிய முரண்பாடே இது தான் அண்ணா! ஈருடலும் ஓருயிரும் என்பது போல ஐக்கியநிலை என்பதைப் பிரதானமாக எடுத்துக் கொள்வதில், தவறில்லை.அப்படி மெய் மறந்து போவதில், இருப்பதும் இல்லாதது மாதிரித் தான் தோன்றும் என்பதாலேயே இருப்பது இல்லாததாகி விடுமா?

பசு, பதி, பாசம் இந்த மூன்றுமே அநாதி, என்றும் உள்ளது என்கிறார் திருமூலர். பாசத்தைத் தாண்டி, பசு பதியுடன் கூடுவதென்பதும், இங்கே பசு, பதி, பாசம் என்பதெல்லாம் வெறும் மாயை, மாயை நீங்கினால் பதி மட்டும் இருப்பது புலனாகும் என்பதும் ஒன்றாகி விடுமா?

இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு சமாதானம் தான் சொல்ல முடிகிறது.
அத்வைதம், இரண்டறக் கலக்கிற பிரம்மானுபவம் என்பது ஒரு வித பாவனையே!

Geetha Sambasivam said...

//அத்வைதம், இரண்டறக் கலக்கிற பிரம்மானுபவம் என்பது ஒரு வித பாவனையே!//

பாவனையாகவாவது வராதானு தான் தோணறது! நல்ல அருமையான கருத்துக்களோடு எடுத்துக் கூறும் அனைவருக்கும் நன்றி.

yrskbalu said...

dear krishnamoorthy gi,

அத்வைதம், இரண்டறக் கலக்கிற பிரம்மானுபவம் என்பது ஒரு வித பாவனையே!

you are coming closer to truth.

there is no others.
you are finding yourself. your ownself
there is no mixing/ merging.

eshavasya upanised - clearly explained oneness priniciple.
you can refer.

yrskbalu said...

dear vasudevan gi,

சொரூப நாசம் அடைஞ்சாலும் மனம்ன்னு ஒண்ணு இருக்கு.

there is no mind really existing.

maya utilising mind through gunas.

you are seeing rope and snake.(wordly people seeing snake only)

pl change vision.

try to see rope,snake are brahman only.

pl deeply think.

you can refer eshavasya upanised

R.DEVARAJAN said...

”தனதான சத்துவமாய் *மனஞ்சே டித்துத்* தமசுரசசு கணசித்தல்
சொரூப நாசம்”

டாக்டர் சார்,
பாடல் தெளிவாகவே உள்ளது. மனம் வ்ருத்திகள் அடங்கி,ஸங்கல்ப – விகல்பங்கள் ஒடுங்கித் தன் ஸூக்ஷ்ம நிலையில் *சேடித்து* சேஷமாக எஞ்சி இருக்கும் நிலையை ஸ்வரூப
நாசம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வ்ருத்திகளின் நாசமே மநோநாசம் என்று கூறப்படுகிறது.
இப்போது ஐயம் நீங்கிவிட்டது.

தேவ்

கபீரன்பன் said...

//கரைஞ்சு போகிறது என்று சொல்லும் போதே, கரைக்கிற இன்னொன்றும் இருக்கிறது என்றும் தோன்றுகிறதே?//

இது உப்போ சர்க்கரையோ தண்ணீரில் கரைவது போலல்ல. ஏனெனில் அப்போது தண்ணீரின் குணம் மாற்றமடையும். ஆனால் பனிக்கட்டி ஒன்று தண்ணீரில் விழுந்தால் அதுவும் கரைதல் தான்(அல்லது கலத்தல்தான்). இங்கே மேற்கொண்டு எந்த மாற்றமும் இல்லை, பனிக்கட்டி கரைந்து நீரில் ஐக்கியமாவதைத் தவிர. தண்ணீர் பரமாத்மா,பனிக்கட்டி ஜீவாத்மா :)

திவாண்ணா said...

//பாவனையாகவாவது வராதானு தான் தோணறது! //
அதானே!
:-))

கபீரன்பன் வழக்கம் போல ஒரு நல்ல பார்வையை கொடுத்து இருக்கார்.ஸடில் ஆனாலும் முக்கியமானது.

Geetha Sambasivam said...

@கபீரன்பன், தெளிவான உதாரணம், பனிக்கட்டியை உதாரணமாய் எடுத்ததுக்கும், அது உருகுவதையும் நீரில் ஒன்றாவதையும் எடுத்துக் காட்டியதற்கும். பிரம்மத்துடன் பரிபூரணமாய்க் கலப்பதற்கு நாமும் அப்படி உருகவேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/இது உப்போ சர்க்கரையோ தண்ணீரில் கரைவது போலல்ல./

குடம், ஆகாசம் உதாரணத்தை விட, இந்த பனிக்கட்டி, தண்ணீர் உதாரணம் மிக அழகாக இருக்கிறது. உமேஷ் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்!

எல்லா விவகாரங்களும் ஓய்ந்து, ஒழிந்து போன பின்னாலும், சுத்த அகங்காரம் என்ற சக்தி வடிவம் அங்கே (இரண்டாவதாக) எஞ்சி நிற்கும் என்று பெரியவர்கள் உரைத்ததைப் படித்திருக்கிறேன்.

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும்,
தோய்விலன் புலனைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத,
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே.

என்கிறது திருவாய்மொழிப் பாசுரம் நீரே பனிக்கட்டியாக மாறி, மறுபடி நீரே ஆவதேன்பதும் ஒருவித பாவனை தான் இல்லையோ:-))

நானுமே, பள்ளிக்கூடத்தில் கெமிஸ்ட்ரி பாடப் புத்தகத்தில் படித்ததை அப்படியே இங்கு ஒப்பிக்கவில்லை. மொழிக்கு மட்டுமில்லை, புரிதலுக்கும் ஒரு எல்லை உண்டு என பொதுமைப்படுத்தும் விமரிசனத்தைத் தவிர்ப்பதற்காக, மறுபடி இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.