Pages

Wednesday, June 24, 2009

சீவன் முத்தருக்கு சிரவணாதி தேவையில்லை



28
சீவன் முத்தருக்கு சிரவணாதி தேவையில்லை என்றது உறுதிபட வினா

குரவர்சிகா மணியேகேளீர் நீர்கூறிய வழியொக்கும்
பரமுடனிகமு மிழந்தவரன்றோ பழகுவர் மெய்ஞானம்
விரவு முயற்சியின் மீண்டவரதை யினிவேண்டுவரோ வேண்டார்
சிரவணமனனா திகள்வேண்டாவோ சித்த முறைத்திடவே

குரவர் சிகாமணியே கேளீர்! நீர் கூறிய வழி ஒக்கும் (ஒத்துப்போகும்). பரமுடன் இகமும் (இச்சை) இழந்தவர் அன்றோ மெய்ஞானம் பழகுவர்? [இகபரதொழில் சனன மரணம் தருவது என கருதி அதிலிருந்து] விரவு முயற்சியின் மீண்டவர் அதை இனி வேண்டுவரோ? வேண்டார். சித்தம் உறைத்திடவே (ஆத்ம சொரூபத்தில் மனது திடப்படும் பொருட்டு) சிரவண மனனாதிகள் (அவர்களுக்கு) வேண்டாவோ?

இத கேட்டு குருவுக்கு ரொம்ப சந்தோஷம்.

ஒளிருகிற மகனே கேளுப்பா! யார் ஞானத்தை தேடி பயிற்சி செய்யறாங்களோ அவங்களுக்குத்தான் இதெல்லாம் செய்ய தேவை இருக்கு. தான் பிரமம்ன்னு உணராதவங்கதான் கேட்டல் செய்யணும். யாருக்கு சந்தேகம் இருக்கோ அவங்கதான் மனனம் செய்யணும். யாருக்கு விபரீதப்பேய் என்கிற மலினமான வாசனை இருக்கோ அவங்கதான் நிதித்யாசனம் செய்யணும். ஆனா பிரம்ம சாக்ஷாத்காரம் அடைஞ்ச ஞானிக்கு இதெல்லாம் ஒண்ணுமே வேண்டாம்.

29.
உத்தரம்:
கிளர்மகனேகேள் தத்துவமறியார் கேட்டல்செயக் கடனே
தளர்வறு சிந்தித்தலின் முயல்வார்சிலர் சந்தேகங்களுளார்
தெளிதலினிற்பார் விபரீதப் பேய்தீரா வாதனையோர்
வெளியுருவா யறிவாய் நிறைவாயினர் வேண்டுவதொன்றுண்டோ

கிளர் மகனே (ஒளிரும் மகனே) கேள். [தான் பிரமம் என்று] தத்துவம் அறியார் (உணராதவர்) கேட்டல் செயக் கடனே. (சிரவணம் செய்தல் முறையே). தளர்வு அறு சிந்தித்தலில் முயல்வார் சிலர் (அவர்கள்) சந்தேகங்கள் உள்ளவர். விபரீதப் பேய் தீரா வாதனையோர் (காமம் முதலிய வாசனைகளால் சீவேஸ்வர ஜகத் ஆகிய பிசாசம் நீங்காத விபரீத பேத புத்தி நீங்காதவர்கள்) தெளிதலில் நிற்பார். (நிதித்யாசனம் செய்வர்). வெளியுருவாய் (பரா ஆகாசமாக) அறிவாய், நிறைவாயினர் (பரி பூரணமாக உள்ளவர்) வேண்டுவது ஒன்றுண்டோ? [இல்லை]

"சரி ஐயா. இன்னொரு சந்தேகம். தத்துவ ஞானிகூட மத்தவங்க மாதிரி நான் பாத்தேன், போனேன், செய்தேன்னு சொல்கிறங்களே! அப்படி சொல்லலாமா? இவருக்குத்தான் எல்லாம் போச்சே! நான் போயே போயிடுத்தே. நான் போகலைனா அவர் சீவன் முத்தரே இல்லையே! அப்புறம் என்ன நான் போனேன் வந்தேன்?" என்கிறான் சீடன்.


2 comments:

Geetha Sambasivam said...

//நான் போயே போயிடுத்தே. நான் போகலைனா அவர் சீவன் முத்தரே இல்லையே! அப்புறம் என்ன நான் போனேன் வந்தேன்?" என்கிறான் சீடன்.//

மனசை உறுத்தும் கேள்வி!

திவாண்ணா said...

//மனசை உறுத்தும் கேள்வி!//
:-))))