Pages

Tuesday, June 23, 2009

கிருத கிருத்தியன்



இன்னும் சந்தேகம் போகலை. கர்ம வினையால இந்த உடம்பு கிடைச்சு இருக்கு. பிராரத்தப்படி செயல்களை செய்கிறார்; உலக மக்களுக்கு தேவையானதை செய்யறார் ன்னா எல்லாத்தையும் செஞ்சு முடிச்சவர்ன்னு அவரை சொல்லறாங்களே, அதெப்படி?

26. கிருத கிருத்தியன் இலக்கணம் தெரியும் பொருட்டு வினா

மெய்யும் கொண்டு பிராரத்தத் தருவிதிவழி நின்றிடவும்
உய்யுங்கன்மிகளுக் கநுகுணமா வுறுதொழில் செய்திடவும்
செய்யுஞ்செய்கை முடிந்தவனென் றுரைசெப்புவதெப்படியோ
நையுந்துன்ப மகற்றிய குருவே நலமாவருள்வீரே.

மெய்யும் (உடலையும்) கொண்டு பிராரத்தம் தரும் விதி வழி நின்றிடவும், உய்யும் கன்மிகளுக்கு அநுகுணமாய் (அநுகூலமாய்) உறு தொழில் (பொருந்தும் கர்மாக்களை) செய்திடவும், செய்யும் செய்கை முடிந்தவன் (ஞானியானவன் கிருத கிருத்தியன்) என்று உரை செப்புவது எப்படியோ? நையும் துன்பம் அகற்றிய குருவே நலமாய் அருள்வீரே. [தொழில் உண்டாக்கும் தேகமும் பிராரத்த கர்மமும் உள்ள சீவன் முத்தர் விவகாரம் செய்ய எப்படி அவரை கிருத கிருத்தியன் எனலாம்?]

உலகத்தில மக்கள் அஞ்ஞானத்தில இருந்துகொண்டு செய்கிற செயல்கள் மூணு. முதல்ல உலக போகங்களை அனுபவிக்க உழவு, வியாபாரம், சேவகம் முதலியதை செய்கிறது. அவை லௌகீக தொழில்கள். ரெண்டாவது பரலோக போகங்களுக்காக செய்கிற தரும கைங்கரியங்கள், யாகங்கள், யக்ஞங்கள் முதலானவை. மூணாவதா ஞானத்தை விரும்பி செய்கிற சாத்திரங்கள் கேட்டல் மனனம் செய்தல் போன்றவை.

இதிலே முதல் இரண்டும் இந்த உலகத்திலேயும் அடுத்த உலகத்திலேயும் மகிழச்சியோட இருக்க செய்கிறவை. இதெல்லாம் மண், பெண், பொன் மேல ஆசை வெச்சவங்களுக்குதானே. நான், என்னுது என்கிற நினைப்பு இருக்கிறவங்களுக்குதானே. ஞானிக்கு இதால ஒரு பிரயோசனமும் இல்லை.
மூணாவதா பாத்ததோ எல்லாமே ஞானத்துக்காக செய்கிறது. இவனுக்குத்தான் ஞானம் வந்தாச்சே. அப்புறம் அதால என்ன பயன்?

27.
விடை:
ஆடவர் செய் தொழின்மூவகை யாகுமவித்தை வசத்துறுநாள்
ஏடணைமமதை யகந்தையுளார்க்கே யிகபர விவகாரம்
வீடணுகுவமெனு மிச்சையுள்ளார்க்கே வித்தை படிப்பதெல்லாம்
பாடன்மிகுந் தொழிலாற் பலனுண்டோ பரிபூரணமானால்

ஆடவர் செய் தொழில் (உழவு முதலியன, யாகம் முதலியன, கேட்டல் முதலியன) என மூவகையாகும். அவித்தை வசத்துறு (பொருந்தியுள்ள) நாள் (காலத்தில்) ஏடணை (ஆசை) மமதை அகந்தை உள்ளார்க்கே இக (உழவு முதலிய), பர (யாகம் முதலிய) விவகாரம். வீடு அணுகுவம் எனும் இச்சை உள்ளார்க்கே வித்தை படிப்பது (கேட்டல் முதலிய தத்துவ ஞானம் சம்பாதித்தல்) எல்லாம். பாடம் மிகுந் தொழிலால் (சிரவணாதி மோட்ச செய்கைகளால்) பலனுண்டோ பரிபூரணமானால்?

அது சரி! ஐயா, யாருக்கு இக பர போகங்களில விரக்தி வந்தாச்சோ அவங்க மெய் ஞானத்தை தேடறதாலே அவங்களுக்கு முதல் ரெண்டு வேலையும் வேண்டாம்தான். ஆனா ஞானம் வந்தாச்சுன்னா இவர் பிரம்ம அனுபவத்தில சித்தம் நிலையா இருக்க கேட்டல், (சாஸ்திர விசாரம்) மனனம், நிதித்யாசனம் எல்லாம் செய்ய வேண்டாமா? (அப்படி செய்தால் தொழில் இல்லாதவன் ஆக மாட்டானே)


No comments: