Pages

Thursday, May 21, 2009

சந்தேகம்?




கொஞ்ச நாள் போனதும் நிழல் மாதிரி தன்னை தொடர்ந்து வர சீடனைப்பாத்து குரு கேக்கிறார். என்னப்பா உன் சாதனை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு? சாட்சி மாத்திரமா இருக்கப் பழகிட்டியா? சந்தேகம் ஒண்ணும் இல்லியே? தெளிவா இருக்கியா? உன்னோட அனுபவம் என்ன சொல்லுங்கிறார். குருவுக்கு சீடனோட நிலை தெரியாமலா இருக்கும்? இருந்தாலும் சீடன் குரங்கு நியாயப்படி நடந்துக்கிறதால ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கிறார்.

3.
ஆசிரியர் சீடரை அனுபவம் வினாவுதல்.
சந்ததம் புருடன் றன்னைச் சாயைபோல் விடாமலன்பாம்
மைந்தனை நோக்கிச்சாட்சி மாத்திரமாய் நின்றாயோ
சிந்தையிலைய மெல்லாந் தீர்ந்தவோ தெளிவுனுள்ளே
அந்தரங் கலந்ததுண்டோ வநுபவமுரை செய்வாயே

சந்ததம் (எப்போதும்) புருடன் தன்னைச் சாயை (நிழல்) போல் விடாமல், (நடந்து வந்த) அன்பாம் மைந்தனை (சீடனை) நோக்கி சாட்சி மாத்திரமாய் நின்றாயோ? சிந்தையில் ஐயம் எல்லாம் தீர்ந்தவோ? தெளிவுனுள்ளே அந்தரம் (விபரீத பாவனை) கலந்ததுண்டோ (உதித்துள்ளதோ)? அநுபவம் உரை செய்வாயே (சொல்லுவாயே).

4
மூன்று கேள்விகளுக்கும் சீடன் விடையாக விண்ணப்பம் செய்தல்.
எனவுரைத் தருளுமாசா னிருபதம் வணங்கியெந்தாய்
சனனவன் காட்டின்மோகத் தமத்தெழு பேதப்பேய்கள்
உனதரு ளுதயவெற்பி லுபதேச வருக்கன்றோன்றி
மனவிழி தெரியஞான வான்கதிர் பரந்தாலுண்டோ.

என உரைத்து அருளும் ஆசான் இருபதம் வணங்கி எந்தாய் (என் தந்தையே) சனன (பிறவி என்னும்) அவன் (கடத்தற்கரிய) காட்டின் மோகத் தமத்து (தமத்தில்= அஞ்ஞானத்தில்) எழு(ம்) பேத (விபரீத) பேய்கள், உனது அருள் உதய வெற்பில் (உதய கிரியில்) உபதேச அருக்கன் (சூரியன்) தோன்றி மனவிழி தெரிய ஞானவான் (ஞானமாகிய) கதிர் பரந்தால் உண்டோ (இருக்குமோ?).

சீடன் கால்ல விழுந்து வணங்கி சொல்கிறான்: "ஐயா பிறவி என்கிற காட்டில இருந்தாலும் உங்களோட உபதேசம் என்கிற சூரியனோட வெளிச்சம் இருந்தா கவலை இல்லியே. உங்க உபதேசத்தாலே அஞ்ஞானமான இருட்டும் சந்தேகம் என்கிற நிழலும் போயிட்டுது. இருந்தாலும் பேயை ஓட்டின மந்திரவாதி திரும்ப பிரச்சினை வராம இருக்க யந்திரம் எழுதி கட்டுகிறாப்போல சத்துவத்திலேயே மனசு நிக்கிறாப்போல என் அனுபவம் நிலையா நிக்க சில சந்தேகங்களை நிவர்த்தி செய்தா நல்லது!”

5.
சகசானுபவம் வரத்தையாய் உள்ளது குறித்து வினாவுதல்
மந்திர மூர்த்திதன்னான் மாற்றிய பேய்போனாலும்
எந்திர மெழுதிக்கட்டி யினிவராவகை செய்வார்போல்
முந்தியுன் னுபதேசத்தான் மோகம்போனாலு மையா
புந்திநின் றுறைக்கவின்னம் புகலும்விண்ணப்ப முண்டே

மந்திர மூர்த்தி தன்னான் (மூர்த்தியினால்) மாற்றிய (நீக்கிய) பேய் போனாலும் எந்திரம் எழுதிக்கட்டி இனி [அந்த பேய்கள்] வராவகை (வராதபடி) செய்வார்போல் முந்தி உன் உபதேசத்தால் மோகம் போனாலும், ஐயா புந்தி (சத்துவ மனம்) நின்று உறைக்க (ஆத்ம ஸ்வரூபத்தில் நின்று நிலைக்க) இன்னம் (மேலும்) புகலும் விண்ணப்பம் உண்டே.


2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

படித்தவுடன் கோவிந்த பகவத்பாதர் - சங்கரர் சம்பாஷணை நினைவுக்கு வந்தது.

திவாண்ணா said...

ஆஹா! பகிர்ந்துகொள்ளுங்க!