Pages

Tuesday, April 28, 2009

பிரம்ம வித்து



இது போன செவ்வாய்  கிழமை வெளியாகி இருக்கணும். ப்ளாகர் பூதம் செஞ்ச வேலைல வெளியாகலை. நானும் இது வரை கவனிக்கலை. இப்பவாவது சரி செய்யலாம்ன்னு....
மன்னிக்க.
-----------------------------

என்னங்க இது! இந்த உலகத்திலே நம்மளோட சேர்ந்து இருந்தா நம்மை மாதிரி வேலை எல்லாம் செய்யறப்ப கோபம் தாபம் எல்லாம் வராதா? அப்படி வந்தா செய்கிற வேலை மேலே ஒரு பற்றுதல் அது சரியா நடக்கணும் ன்னு ஆசை, நடக்கலேன்னா கோபம், நடந்ததுனா ஒரு பெரிமிதம்.... எதுக்குங்க இந்த வம்பெல்லாம்?

பிராரத்த கர்மாவால ஒருவேலையை செய்யறார். அப்ப கோபம் வருதுன்னு வெச்சுப்போம். அது ஒரு கணத்திலே மறைஞ்சுபோயிடும்.

எனக்கு தெரிஞ்ச ஒத்தர் பேசும்போது அவங்க உறவினர் ஒத்தரை பத்தி பேச ஆரம்பிச்சார். "என்னை இப்படி சொன்னார், அப்படி சொன்னார், இப்படி பண்ணார், அப்படி பண்ணார்ன்னு ஒரே புலம்பல். நிகழ்ச்சி நடந்து 30 வருஷம் ஆச்சு. பேசப்பட்ட நபர் ஊருக்கு போய் சேந்தும் 20 வருஷம் ஆச்சு! ஆனா இப்பவும் அதை நினைச்சு கோபம், வருத்தம் எல்லாம் வருது. நான் சொன்னேன் "அந்த நபர் ரொம்ப புத்திசாலி. ஊருக்கே போய் சேந்து கூட உன்னை இன்னும் வருத்தறார்!” என்ன சொல்ல வந்தேன்னா அப்ப கோப தாபங்களுக்கு காரணம் வெளியே இல்லே! நம்ம உள்ளேதான் இருக்கு! அதனால் பிரம்ம ஞானத்தை அடைஞ்சவர் கோப தாபங்களுக்கு ஆளாக மாட்டார்.

பிரம்மமா ஆன பிறகு எல்லாமே தெரியும்தானே? ஆனா இவர்கிட்டே பேசினா என்னமோ ஒண்ணுமே தெரியாதவர் போல இருப்பார். ஏதாவது சொன்னா ஒண்ணூமே தெரியாதவர் போல "ஓஹோ அப்படியா?" ம்பார்! இவர் பாண்டித்தியம் வெளியே வரவே வராது. ஏதேனும் தெரிஞ்சுக்கணும்ன்னா ரொம்ப கஷ்டப்பட்டுதான் வார்த்தையை வர வழைக்கணும்! உண்மையா தெரிஞ்சுக்க விரும்புறவங்களைதான் இவருக்கு அடையாளம் தெரியுமே! அவங்களுக்கு தேவையானது மட்டுமே சொல்லுவாங்க. எப்பவும் சந்தோஷமா இருப்பாங்க!

தாமரை இலை தண்ணீர்ன்னு அடிக்கடி கேள்வி படறோமே? அதுக்கு இலக்கணம் இவங்கதான்!

96.
அந்த பிரம வித்து கர்மம் செய்தால் காமம் முதலியன உண்டாகாதோ?

காமமாதிகள் வந்தாலுங் கணத்திற்போ மனத்திற்பற்றார்
தாமரை யிலைத்தண்ணீர் போற் சகத்தொடுங் கூடிவாழ்வார்
பாமர ரெனக்காண்பிப்பார் பண்டிதத் திறமைகாட்டார்
ஊமரு மாவாருள்ளத் துவகையாஞ் சீவன்முத்தர்.

காமமாதிகள் (காமம் முதலியன பிராரத்த வசத்தால்) வந்தாலும் கணத்தில் போம். மனத்தில் பற்றார். (அஞ்ஞானிகள் போல மனதில் அவற்றை வாசனையாக பற்ற மாட்டார்). தாமரை இலைத்தண்ணீர் போல் சகத்தொடும் (உலகத்துடன்) கூடி வாழ்வார். பாமரர் எனக்காண்பிப்பார்; பண்டிதத் திறமை காட்டார். ஊமரும் ஆவார். (மௌனமாகவும் இருப்பர்) உள்ளத்து உவகையாம் (என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டிருப்பார்கள்) சீவன்முத்தர்.
--
பிராரத்துவம் அனுபவித்து தீர இச்சை முதலியன ஒரு பொழுது ஏக தேசமாக உதித்தாலும் அவற்றின் அனாத்ம சுகத்தை உடனே நசித்தலாலும்; ஆகாயத்தில் தோன்றிய தூளியும் மேகமும் காற்றால் கலைவது போல, சத்துவ மனதில் காமாதி அசுத்த வாசனைகள் ஏகதேசமாய் தோன்றினாலும் முன் பழகிய வைராக்கியம் முதலான சுத்த வாசனைகளால் அக்கணமே நசித்தலாலும்; காற்று தனக்கு என்று துர்கந்தம் சுகந்தம் இல்லாது இருப்பினும் செல்லுமிடத்தில் அவற்றை பற்றி பின் விடுதல் போல ஞானிகள் காமாதிகள் சுபாவம் இல்லாது போனாலும் தொழில் செய்யுமிடத்தில் அவை உதிக்கில் அந்த அந்த கணத்தில் நீங்கிப்போகும்.

ஞானிகள் மனம் சகலத்தையும் பூரண ஆநந்தமாக தெளிந்து இருத்தலால் ஆகாயத்தில் சூரியனின் சூடும் சந்திரனின் குளிர்ச்சியும் பற்றாது போல காமாதிகளின் இன்ப துன்பம் தங்காது. (மனதில் பற்றார்)

தாமரையில் ஜலம் பொருதியும் பொருந்தாமலும் உள்ளது போல ஞானிகள் வாக்கு காயத்தால் சேர்ந்து மனதால் சேராது அதனை சொரூபத்தில் வைத்திருப்பார்.
யானையை குருடர் ஒவ்வோர் அவயத்தையும் ஒன்று ஒன்றாக தடவி இதுவே யானை என கூறினாலும் கண்ணுடையோருக்கு அது யானையாக பூரணமாக தெரிவது போல, எவரெவர் எப்படி வஸ்து நிச்சயம் கூறினாலும் அவையனைத்தும் தன் பரமார்த்த சுபாவத்துக்கு ஒத்ததால் அந்நிச்சயங்களை மறுத்து கண்டிப்பதால் தன் அனுசந்தானத்துக்கு விரோதமகையால் அவற்றை மறுக்க தெரியாத பேதையர் போல காட்டுவார். (பாமரர் என...)

முமுட்சுத்துவம் இல்லாதவற்கு தம் அநுபவத்தை அறிவித்தால் அவர்கள் புத்தியில் ஏறாது, இளைப்பே மிஞ்சும். ஆகவே பண்டித திறமை காட்டார். ஆநந்த அநுபவத்து தடை வராது இருக்கும் பொருட்டு ஊமரும் ஆவர். செய்ய வேண்டியது அனைத்தும் செய்து அடைய வேண்டியது அனைத்தும் அடைந்ததால் நித்திய சந்தோஷம் அடைவர்(- உள்ளத்து உவகையாம் ...)


No comments: