Pages

Thursday, April 16, 2009

வெளியே வந்ததும்....




இப்படியே பிரம்ம அனுபவத்திலேயே இருக்க முடியுமா?
அதுக்கு நேரம் வந்தாச்சுன்னா இருக்கலாம்.

ஆனா ஒத்தரோட வாசனைகள் அவ்வளோ சீக்கிரமா அதுக்கு விடாது. அதனால் வெளியே வருவாங்க. மனம் திருப்பி துளிர் விடும். வெளியே வந்ததும் அனுபவிச்சது ஒரு மாதிரி நினைவில் இருக்கும். அதே போல மீண்டும் அனுபவிக்க தவிப்பா இருக்கும்.
இந்த அனுபவம் கொடுத்தவர்கிட்டே அவனுக்கு என்ன மாதிரி உணர்வு இருக்கும்?
பூரண சரணாகதியா கால்லே விழ வேண்டியதுதான்.

85.
சுபாவ நிலை பெற்ற சீடன் பின்பு யாது செய்தான்?

அளிமக னெடும்போ திவ்வா றானபின் மனது மெள்ள
வெளியில்வந் திடவுணர்ந்தான் விமலதேசி கனைக்கண்டான்
துளிவிழி சொரியப்பா தந்தொழுது வீழ்ந்தெழுந்து சூழ்ந்தான்
குளிர்முகச் சுவாமிகேட்கக் கும்பிட்டு நின்றுசொல்வான்


அளிமகன் (பிரமாநந்தம் பெற்ற சீடன்) நெடும்போது (நெடு நேரம்) இவ்வாறான பின் (இப்படி சமாதியில் இருந்த பின்), மனது மெள்ள வெளியில் வந்திட, உணர்ந்தான்; விமல (அவித்தை, மாய ஆகிய அழுக்குகள் இல்லாத) தேசிகனை (ஆசிரியனை) கண்டான். [ஆநந்த கண்ணீர்] துளி விழி சொரிய, பாதம் தொழுது, வீழ்ந்து எழுந்து சூழ்ந்தான் (வலம் வந்தான்). குளிர் முக சுவாமி கேட்க, கும்பிட்டு நின்று சொல்வான்.

தாத்பர்யம்: சகசாநுபவம் வரும் பொருட்டு சமாதி அநுபவ ஸம்ஸ்காரத்துடன் (பண்புடன்) வெளியாகி சற்குருவை தரிசித்து வணங்கினான்.

86.
சீடன் தனக்கு அநுபவம் வரும்படி அநுக்கிரகம் செய்த ஆச்சாரியனை தோத்திரம் செய்தல்.
ஐயனே யெனதுள் ளேநின் றனந்தசன் மங்க ளாண்ட
மெய்யனே யுபதேசிக்கவெளிவந்த குருவே போற்றி
உய்யவே முத்திநல்குமுதவிக்கோ ருதவி நாயேன்
செய்யுமா றொன்றுங் காணேன்றிருவடி போற்றி போற்றி

ஐயனே, எனதுள்ளே நின்று அனந்த சன்மங்கள் ஆண்ட மெய்யனே, உபதேசிக்க வெளி வந்த குருவே போற்றி; உய்யவே (சனன துன்பத்திலிருந்து ஈடேற) முத்தி நல்கும் உதவிக்கு ஓர் உதவி நாயேன் செய்யுமாறு ஒன்றும் காணேன். திருவடி போற்றி போற்றி.

தாத்பர்யம்: தர்மார்த்த காமங்களை கொடாது கருணையால் பர மோட்சத்தை கொடுத்ததற்கு கைம்மாறு காணேன் என துதித்ததாம்.


1 comment:

Geetha Sambasivam said...

//தர்மார்த்த காமங்களை கொடாது கருணையால் பர மோட்சத்தை கொடுத்ததற்கு கைம்மாறு காணேன் என துதித்ததாம்.//

இது கொஞ்சம் தேவலை, புரியறாப்போல் இருக்கு. அதிலும் பூரண சரணாகதி என்பது நல்லாவே புரியுது.