Pages

Friday, April 3, 2009

கடலோரத்திலே ஒரு அலை...



கடலோரத்திலே நிக்கிற போது ஒரு அலை வருது ... சுவாரசியமா பாக்கிறோம். அது மெதுவா ஒரு சின்ன அலைப்பா ஆரம்பிச்சு, பெரிசாகி, சீறிப்பாஞ்சு விழுந்து எழுந்து ஆர்பரிச்சு கரையை தொட்டு அடங்கிடும். பின் இன்னொரு அலை ஏற்கெனவே உண்டாகி வந்துகிட்டு இருக்கும். அது மேலே நம் கவனம். அதுவும் கடைசியிலே அடங்கும். ஆனா கடல் அலைகள் வந்துகிட்டேதான் இருக்கும்!

அது போல நாமும் பிறந்து ஆரவாரத்தோட வாழ்ந்து சர்வ நிச்சயமா அடங்கிப்போறோம்! இப்படி போகிற ஜன்மங்கள் எத்தனை எத்தனை!

அது போல ஸ்தூலம். சூக்ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்களும், சாக்கிரத், சொப்னம், சுசுப்தி ன்னு மூன்று அவஸ்தைகளும், இறந்த/நிகழ்/எதிர் ன்னு மூன்று காலங்களும் கடல் அலை போல வந்து வந்து போய்கொண்டே இருக்கும் அதுக்கு முடிவே கிடையாது.
அனுபவம் பெற்ற சீடனே, இத்தனையும் சாட்சியா இருந்து பாருப்பா!

72.
தூலசூக்கும வஞ்ஞானந் தோன்றுமூன்ற வத்தைதாமும்
காலமோர் மூன்றுஞ் சன்மக் கடலெழுங் கல்லோலங்கள்
போலவே வந்துவந்து போனவெத்தனை யென்பேனான்
ஆலமர் கடவுளாணை யவைக்கெலாஞ் சாட்சி நீயே

தூல சூக்கும அஞ்ஞானம் (ஸ்தூல சூஷ்ம காரண தேகங்களென மூன்று தேகங்களும்) தோன்றும் (தோன்றுகின்ற) [ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி ஆகிய] மூன்று அவத்தை தாமும், காலம் ஓர் மூன்றும் (இறந்த, நிகழ், எதிர் காலங்கள் ஆகிய மூன்றும்) சன்மக் கடல் (ஜன்மமாகிய கடலில்) எழுங் கல்லோலங்கள் (எழுகின்ற அலைகள்) போலவே வந்து வந்து போன நான் எத்தனை என்பேன். ஆல் அமர் கடவுள் (தக்ஷிணாமூர்த்தி) ஆணை, அவைக்கு எல்லாம் சாட்சி நீயே.
PG
செடி கொடி போன்ற தாவரங்களுக்கு ஸ்பரிச அறிவு மட்டுமே உண்டு. வேற ஏதும் அவற்றுக்கு புலனாகலை. இவைகளுக்கு சுழுத்தி ஒண்ணு மட்டுமே உண்டு.

நத்தை போன்ற சிலதுக்கு ஸ்பரிசம், ரசம் (ருசி) அறிவு ரெண்டும் உண்டு.
எறும்பு போல சிலதுக்கு ஸ்பரிசம், ரசம், கந்தம் (வாசனை) அறிவு மூணும் உண்டு.
வண்டு போல சிலதுக்கு ஸ்பரிசம், ரசம், கந்தம், ரூபம் (உருவம்) அறிவு நாலும் உண்டு.
ஏனைய மிருகங்கள் பட்சிகள் போலவற்றுக்கு ஸ்பரிசம், ரசம், கந்தம், ரூபம், சப்தம் அறிவு ஐந்தும் உண்டு.
இவைகளுக்கு எல்லாம் கனவு போலவே எல்லாம் நடக்கிறதாம். ஜாக்ரத் இல்லை. அதனால ஸ்வப்ன, சுசுப்தி ரெண்டு அவஸ்தைகளே உண்டு.
மனுஷர்களான நமக்கு ஜாக்ரத் சொப்ன சுசுப்தி மூணும் உண்டு.

தேவர்களுக்கு தூக்கம் இல்லை. நினைப்பே உண்டு. மறப்பு இல்லை.
மனிதர்கள் தவிர்த்து மேலே பாத்த மற்ற உயிரினங்களுக்கோ மறப்பே உண்டு. நினைப்பு இல்லை.
மனிதர்களுக்கு மட்டுமே மறப்பு நினைப்பு இரண்டும் கொடுத்து அவற்றை நீக்க உபாயமும் கொடுத்து இருக்கிறான் இறைவன். இப்படி நீக்கினாதான் முக்தி.

அப்ப மனிதர்கள் மட்டுமே முக்தி அடைய முடியும்.
தேவர்களும் முக்தி அடையனும்ன்னா செய்த புண்ணியம் போய் திருப்பி மனித ஜன்மம் எடுக்கணும்.
மற்ற சீவ ராசிகள் பரிணாம வளர்ச்சி அடைஞ்சு மனிதனாகணும்.

ஜாக்ரத் லேயும் சொப்பனத்திலேயும் நாம் வியவகாரம் செய்கிறோம். அது நமக்கே தெரியும்.
சுசுப்தியிலே அப்படி தெரியலையே? அதே போல தெரியலைதான். ஆனா கனவில்லாம தூங்கி எழுந்து அப்பாடா அருமையான ஆனந்தமான தூக்கம் ன்னு சொல்கிறோமே! அதை அனுபவிச்சு இருந்தாத்தானே அது தெரியும்?

ஒரு தங்க சங்கிலியை காணோம். வீடு முழுக்க தேடியாச்சு. கிணத்திலே விழுந்துடுத்தோன்னு சந்தேகம்.
ஒத்தரை கூப்பிட்டு கொஞ்சம் முழுகி தங்க சங்கிலி கிணதுல இருக்கான்னு பாருங்க என்கிறோம்.
அவரும் முழுகறார். கிணத்தில் தண்ணிக்குள்ளே இருக்கும் போது தங்க சங்கிலி இருக்கு இல்லைன்னு அவரால சொல்ல முடியலை. மேலே வந்த பிறகே சொல்கிறார். தங்க சங்கிலி கிடைச்சுடுத்துண்ணு. ¨ஏன்யா! இவ்வளோ பதட்டத்திலே இருந்தேனே! கிடைச்ச உடனே சொல்லையே?¨ன்னு கேட்கவா முடியும்? தண்ணிக்குள்ளேந்து பேச முடியாதுன்னு நமக்கே தெரியும். அப்படி சொல்ல கருவி இல்லை. மூச்சு எடுக்கவும் முடியாது பேச்சா அதை வெளியே விடவும் முடியாது.

அதே போல சுசுப்திலே இருக்கிறப்ப அதை சொல்ல முடியாது. அப்ப ஆன்மாவுக்கு கரணங்களோட உதவி இல்லை.


2 comments:

Geetha Sambasivam said...

கடல் அலை, தங்கச் சங்கிலி எல்லாம் மனசிலே நல்லா ஏறுகிறது. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை, புரிய ஆரம்பிச்சிருக்கு.

ஆல் அமர் கடவுள், இரண்டு நாள் முந்திதான் படிச்சேன், இன்னிக்கு நீங்க குறிப்பிட்டிருக்கீங்க இதே பெயரால்.

Thangamani said...

எவ்வளவு எளிமையான உதாரணங்களுடன்,
சுலபமாகப் புரிந்துகொள்ளும் விதமாக
தந்திருக்கும் பாங்கு மிகச் சிறப்பு!திவா!நன்றி!

அன்புடன்,
தங்கமணி.