Pages

Tuesday, March 31, 2009

பஞ்ச கோசங்கள் நான் இல்லையானால் நான் யார்?



பின்ன? பஞ்ச கோசங்கள் நான் இல்லையானால் நான் யார்? இந்த அஞ்சு உறையையும் விட்டு வெளியே வாப்பா! யார் நீன்னு உனக்கே புரியும். சொல்லி தெரிகிற சமாசாரம் இல்லை இது!

எப்பவும் இருக்கிறது, அறிவாக இருக்கிறது, ஆனந்தமா இருக்கிறது. விருப்பு வெறுப்பு போல ரெட்டைகளை கடந்து எப்பவும் சமமா இருக்கிறது, யாரும் எதுவும் அசைக்க முடியாம ஸ்திரமா இருக்கிறது, நடக்கிறதா மத்தவங்க சொல்கிற விஷயங்களுக்கு வெறும் சாட்சியா இருக்கிறது, உன்னைத்தவிர வேறு யாரும் இல்லாம நீ மட்டுமே இருக்கிறது, அழிவே இல்லாம இருக்கிறது - இப்படிப்பட்ட ஆன்மாதான்பா நீ! சடமாயும் அறிவில்லாமலும் துக்கம் நிறைந்ததுமா இருக்கிற இந்த அஞ்சு உறைகளையும் விட்டு நீ வெளியே வந்த உனக்கு இது புரியும்.

69.
சத்தொடு சித்தாநந்தஞ் சமந்திரஞ் சாட்சியேகம்
நித்தியம் வியாபியான்மா நீயதுவா வறிந்து
பொத்தொடு சடந்துக்காதி பொருந்து பேதங்களான
குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியிலாவாய்.

சத்தொடு சித்தாநந்தம் (சச்சிதானந்தமாய்) சமமாய், திரமாய், சாட்சியாய், ஏகமாய், நித்தியமாய் வியாபி[க்கும்] ஆன்மா நீ அதுவாக அறிந்து பொத்தொடு (பொய்யான) சட துக்காதி (துக்க முதலியதாய்) பொருந்து[கின்ற] பேதங்களான (ஆன்ம சுபாவத்துக்கு அன்னிய சுபாவங்களை உடையனவான) குத்திர (வஞ்சகமான) பஞ்ச கோசக் குகை விட்டு (பஞ்ச கோசங்களாகிய குகைகளில் ஆன்ம புத்தியை ஒழித்து) வெளியிலாவாய்.

PG
வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை
வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி
ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி
அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை
இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை

தாயுமானவர் -14. ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம் -18

மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் மேவும் அறிவு அறியாமைகள்தான் ஏது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் பிரிய மோத பிரமோதமேது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் மூட சட சூனியந்தாம் ஏது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் ஆதிக்கு உயர் சாக்ஷி நீயாம் காணே - பரமானந்த தீபம்
(முதல் வரி மனோ மய கோசத்தையும் இரண்டாவது ஆனந்த மய கோசத்தையும் மூன்றாவது கோசங்கள் நீங்க பாழை பார்ப்பதையும் குறிக்கின்றன. சரிதானே)

கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் அன்னியமாய் இருக்கையாலே
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் விக்ஷேபம் ஈன்றதாகும்
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் நீ அறிவாய் அது நீ அல்ல
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியும் உயர் சாக்ஷி நீயாம் காணே - -பரமானந்த தீபம்

பஞ்ச கோசத்தை பகுத்தறிந்தோருக்கு
நெஞ்ச மிறந்ததென் றுந்தீ பற
நிட்டைய தாகு மென் றுந்தீ பற – திருவுந்தியார்.



No comments: