Pages

Saturday, March 14, 2009

ஆவரணம்


¨அது கொஞ்சம் அப்படியே இருக்கட்டும் ஸ்வாமி! இன்னும் ஆவரணம் பத்தி சொல்லையே
¨சொல்றேன், சொல்றேன்!
தமஸிலே வந்த விக்ஷேபம் பத்தி இதுவரை பாத்தோம். அதுதான் நாம பாக்கிற ஏராளமான தோற்றங்களுக்கும் காரணம்.
அதே தமஸிலேந்து இதுக்கு எதிர்மறையா மறைப்பு சக்தியும் இருக்கு
¨அட, போகட்டுங்க என்ன இப்போ! அதான் நிறைய விஷயம் பாக்க இருக்கே! ஒண்ணு ரெண்டு குறைஞ்சா என்ன
¨பிரச்சினையே நாம யாரு என்கிற உண்மையான தோற்றத்தை இது மறைக்குது! அதான்

48.
தூடண தமத்தில் வந்த தோற்றமாஞ் சத்தி செய்யும்
ஏடணை விகாரஞ் சொன்னீ ரிரண்டுசத் திகளென் றீரே
மூடலாஞ் சத்தி செய்யு மோகமுஞ் சொல்லு மையா
கேடறக்குருவே யென்னக் கிருபையோ டருளிச் செய்வார்


தூடண (தூற்றத்தக்க) தமத்தில் (தம மூல பிரக்கிருதியில்) வந்த தோற்றமாஞ் சத்தி (விட்சேப சக்தி) செய்யும் ஏடணை (இச்சா ரூபமான பிரபஞ்ச) விகாரம் சொன்னீர். இரண்டு சத்திகள் என்றீரே, மூடலாஞ் சத்தி (ஆவரண சக்தி) செய்யும் மோகமும் (மயக்கத்தையும்) சொல்லும் ஐயா, கேடறக்குருவே! என்ன (என்று சொல்ல) கிருபையோடு அருளிச் செய்வார்.

நான் சின்ன பையனா இருந்தப்ப மழைக்காலம்ன்னா பேஜாருதான். இருட்டிகிட்டு வந்தா ஒண்ணுமே பாக்க முடியாது. காத்து சுழண்டு சுழண்டு அடிக்கும். ஒரு விளக்கும் இதுக்கு எதிரே எரிய முடியாது. பகல்லேயே இருட்டிகிட்டு வந்துடும். சோ ன்னு மழை பிடிச்சா ஒரு வாரம் பத்து நாள் கூட பெஞ்சுகிட்டே இருக்கும். அந்த மாதிரி மழைக்காலத்துலே வடக்கா தெற்கா, வானமா பூமியா ன்னு ஒண்ணுமே தெரியாது. இரவிலே ஒரே இருட்டுதான், ஒரு விஷயமும் வெளங்காது.

அந்த மாதிரி இருட்டு நம் சுய ரூபத்தை மறைக்குது என்கிறார் கைவல்லிய நவநீதம் எழுதின ஆசிரியர்.

இந்த இருட்டுக்குத்தான் ஆவரணம் என்று பேர் சொல்றாங்க.
இதுக்கு தப்பி பிழைச்சவங்க வெகு சிலர்தான்.
ஒண்ணு, யாருக்கு நிகரா அவரைத்தவிர வேறு யாரும் இல்லையோ அந்த ஈசன்.
ரெண்டாவது ப்ரம்மத்தை கண்டுகொண்ட ஞானிகள்.
இவங்களைத்தவிர எல்லாருக்கும் சுய ரூபம் மறந்து போயிடும்.

49.
தானிகர் தனக்கா மீசன் றனையுந்தங் களைத்தாங் கண்ட
ஞானிக டமையு மன்றி நாஸ்திநபாதி யென்னும்
ஊனிடை யுயிர்களுக்குள்ளத் துணர்விழி குருடாம் வண்ணம்
வானிலந் திசைகண் மூடு மழைநிசி யிருள்போன் மூடும்.

[பரி பூரண ஞானம், சர்வஞ்ஞத்வாதி குணங்களில்] தான் நிகர் தனக்காம் [எனும்படியான] ஈசன்தனையும், [உண்மையான] தங்களைத் (பிரமத்தை) தான் கண்ட ஞானிகள் தமையும் அன்றி, நாஸ்தி (பிரமமில்லை) நபாதி (பாநமாகவில்லை) என்னும் ஊனிடை உயிர்களுக்கு (உடலில் உடலே நாம் என்கின்ற சீவர்களுக்கு) உள்ளத்து உணர் விழி (அந்தக்கரணத்தின் ஞானவிழி) குருடாகும் வண்ணம் வான் நிலம் திசை கண் (ஆகாயம், பூமி அனைத்து திசைகளிலும்) மூடும் மழை[க்கால] நிசி (இரவு) இருள் போல் மூடும். [இதுவே ஆவரண சக்தியாம்]

{தாத்பர்யம்: ஆவரண சக்தியானது ஈஸ்வரனையும் தத்துவ ஞானிகளையும் தவிர மற்ற அனைத்து சீவர்களின் ஞான திருஷ்டியையும் மறைக்கும்.}


பிரம்மம் கூடஸ்தன். எங்கேயோ கேட்டோமோ? இன்னும் இல்லையா? சரி.
பிரம்மம் ஏற்கெனெவே பாத்ததுதான்.
கூடஸ்தன்னா இந்த பாக்கக்கூடிய உடம்புக்குள்ளே லிமிட் ஆகி இருகிற ப்ரம்மத்தோட துணுக்கு. இது பத்தி விரிவா அப்புறமா வரும்.

ஆவரண சக்தி என்ன செய்யுதுன்னா நாம ப்ரம்மத்தோட துணுக்கு; எனக்கு இருப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது; நான் ஜடமில்லை, சுத்த அறிவு மயன்; எனக்கு துக்கமில்லை, எப்போதும் ஆனந்தமா இருக்கிறவன். - இப்படி இருக்கிற உண்மையை மறைக்குது. அதனால் நாம் செத்து போயிடுவோமோ ன்னு பயப்படுகிறோம். ஒண்ணுமே புரியலையே ன்னு நினைக்கிறோம். துக்கம் வந்து போகுது. எப்பவும் சத்-சித் -ஆனந்தமா இருக்கிற வஸ்து மேலே அசத்-ஜட-துக்கத்தை ஏற்றி காட்டுகிறதே இந்த ஆவரண சக்தியோட வேலை. அதாவது நாம் பாக்கிறதுக்கும் உண்மைக்கும் இருக்கிற பேதம் - வித்தியாசத்தை தெரியவிடாமல் தடுக்குது. அதனால் எவ்வளோ பவர்புல் ன்னு ஊகிக்கலாம்.

இதோட விளைவாகதான் நாம் ஏதாவது வேலையை செய்து கர்மாவை மூட்டை கட்டிகிட்டு திருப்பி திருப்பி பிறக்கிறோம்.

50.
பூன்றமாம் பிரமத்துக்கும் புறத்துள விகாரங்கட்கும்
ஆன்ற கூடஸ்தனுக்கு மகத்துள விகாரங்கட்கும்
தோன்றிய பேதஞ்சற்றுந் தோன்றாமன் மறைத்துமூடும்
ஊன்றிய பவவியாதி யுண்டாகு முபாதியீதே

பூன்றமாம் (பரி பூரணமான) பிரமத்துக்கும் புறத்து உள (வெளியில் உள்ள) விகாரங்கட்கும் (35 தத்துவங்களுக்கும்), ஆன்ற (அறிவுருவமான) கூடஸ்தனுக்கும் அகத்து (உள்ளே) உள விகாரங்கட்கும் (28 தத்துவங்களுக்கும்) தோன்றிய பேதம் (சுபாவமாக காணப்பட்ட சச்சிதானந்த - அசத்து சட துக்கங்களை) சற்றும் (கொஞ்சமும்) தோன்றாமல் (உணர் விழிக்கு தோன்றாமல் ஒன்றின் இலட்சணத்தை ஒன்றின் மேலேற்றி) மறைத்து மூடும். ஊன்றிய (கெடாத) பவ (பிறப்பு) வியாதி உண்டாகும் உபாதி ஈதே. (இந்த ஆவரண சக்தியே)

{தாத்பர்யம்: அதிஷ்டான ஆரோபங்களின் பேதம் தெரியாமல் ஒருமைப்பாடாக மறைப்பது ஆவரண சக்தியின் தன்மை.}




1 comment:

Geetha Sambasivam said...

போன பதிவிலே தங்கம் பத்தி எழுதினீங்களா, இங்கே ஆவரணம்னதும் ஆபரணத்தைத் தான் எ.பி.யோனு நினைச்சுட்டேன், ஆவரணம் என்பது என்னனு புரியுது. இதுவும் பார்த்தால் கொஞ்சம் சுலபமாவே தெரியறது.