Pages

Wednesday, March 25, 2009

பிரம்மத்தின் 4 சைதன்ய வெளிப்பாடுகள்.



விண் என்கிற ஆகாயம் இருக்கு. இங்கே சொல்கிறது ஸ்கை ஆகாயம் இல்லை. ஸ்பேஸ் ஆகாயம்.
இதை பல விதமா சொல்லலாம்.
ஸ்பேஸ் ன்னு நமக்கு அறிவியல் மூலமா தெரிஞ்சது மஹா ஆகாசம்.
அண்ணாந்து பாக்கிறப்ப தெரியறது மேக ஆகாசம். ஒரு நீல கலரிலே குடை மாதிரி ஒரு தோற்றம் இருந்துகிட்டு இதுதான் ஆகாயம்ன்னு ஒரு அடையாளம் காட்டுது. முன்ன சொன்ன மகா ஆகாசம்தான் இதுக்கு இடம் கொடுத்து இருக்கு.

நம்ம முன்னாலே ஒரு குடம் இருக்கு. அந்த குடத்துக்குள்ளே இடம் இருக்கு. அதான் குடத்தில இருக்கிற ஸ்பேஸ்- குட ஆகாசம்.
பக்கத்திலே ஒரு குடத்திலே தண்ணீர் இருக்கு. இதிலே வானம் பிரதி பலிக்குது. நாம அண்ணாந்து பாத்தது இப்ப இங்க நிழலா தெரியுது. குட ஆகாசமும் இந்த நிழலான ஆகாசமும் சேந்து - இது ஜல ஆகாசம்.

இதே போல எங்கேயும் இருக்கிற பிரம்மம், ஈசன், கூடஸ்தன், சீவன் அப்படின்னு நாலு பிரிவா - சைதன்யமா- உணரலாம்.

65.
விண்ணொன்றை மகாவிண்ணென்று மேகவிண்ணென்றும் பாரின்
மண்ணொன்று கடவிண்ணென்று மருவிய சல விண்ணென்றும்
எண்ணுகற்பனைபோ லொன்றே யெங்குமாம் பிரமமீசன்
நண்ணுங் கூடஸ்தன்சீவ னான்குசைதன் னியமாமே

விண் (ஆகாயம்) ஒன்றை மகா விண் என்றும் மேக விண் என்றும் பாரின் (உலகில்) மண் ஒன்றும் (மண்ணால் ஆகிய) கட விண் (குடத்தால் பிரிக்கப்பட்ட ஆகாயம்) என்றும் மருவிய சல விண் (குடத்தில் உள்ள ஜலத்தில் ஆகாயம்) என்றும் எண்ணும் கற்பனை போல், ஒன்றே எங்குமாம் பிரமம் (என்றும்), ஈசன் (என்றும்), நண்ணும் கூடஸ்தன் (சரீரத்தில் வளைபட்டுள்ள பிரத்திய ஆத்மா என்றும்) சீவன் [என்றும்] நான்கு [வகை] சைதன்னியமாமே.

பிரம்மம்: மகா ஆகாசம் ப்ரம்மாண்டத்திலே உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து இருக்கிறது போல எங்கும் வியாபித்து இருக்கிறது பிரம்மம்.

ஈசன்: மேகத்துக்கு இடம் கொடுத்த ஆகாசமும் மேக ஜலத்திலே பிரதி பலிக்கிற ஆகாசமும் போல;
இடம் கொடுக்கிற பிரம்மமும் சுத்த, சத்வ மாயையிலே பிரபலிக்கிற பிரம்மத்தோட நிழலே ஈசன்.

எங்கும் நிறைந்து இருக்கிறது பிரமம்தான். ஈசன் இல்லை. ஆனா பல முறை வியவகாரிகத்திலே ஈசன் எங்கும் நிறைந்தவன்னு சொல்கிறப்ப பிரம்மத்தைதான் சொல்கிறாங்க.

கூடஸ்தன் - இந்த வார்த்தையை முதல்லேயே பாத்தோம். கூடஸ்தன்னாலும் ஜீவ சாட்சினாலும் ஒண்ணே. அந்தக்கரணம் ஸ்வச்சம் - அதான் க்ளியர் - ஆனது. அதனால ப்ரம்மத்தோட சாயை- நிழல் அதிலே பிரதிபலிக்கும்.

எப்படி மகா ஆகாசத்தில மாயையா ஒரு மேக ஆகாசம் தோன்றுமோ அது போல இந்த அந்தகரணத்தால பிரம்மத்தோட நிழல் ஜீவ சாட்சியா பிரிச்சு காட்டப்படும். பிரிச்சு காட்டின ஜீவசாட்சி மட்டுமே கூடஸ்தன். கட ஆகாசம் உதாரணத்தை பாருங்க. குடம் தனி. அது பிரிச்சு காட்டுகிற ஆகாசம் தனி. இந்த கட ஆகாசம் போல கூடஸ்தன்.

கூடஸ்தனை விட்டு அந்தக்கரணம் தனியா இருக்கு. ஒரு வேளை கூடஸ்தனில அந்தக்கரணம் சேந்துபோச்சுனா? அப்ப அதுக்கு ஜீவன் ன்னு பெயர். சேந்துபோச்சுனா ன்னு எந்த அர்த்தத்தில சொல்கிறோம்?

காகிதம் இருக்கு. இதுல நீலக்காகிதம் இருக்கலாம். இந்த நீலத்தன்மை காகிதத்துக்கு உள்ளே புகுந்தாச்சு. அந்த காகிதத்தை கருப்பு காகிதம் சிவப்பு காகிதத்திலிருந்து தனியா காட்டுது. இந்த நீலத்தன்மையையும் காகிதத்தையும் பிரிக்கிறது கஷ்டம்.


கூடஸ்தன் + அந்தக்கரணம் = ஜீவன்.

இன்னொரு உதாரணம் பாக்கலாமா?


காகிதம் என்கிற சைதன்யத்தில அந்தக்கரணத்தை தனியா லேமினேட் பண்ணா அது கூடஸ்தன்.

காகிதம் என்கிற சைதன்யத்தில அந்தக்கரணம் நீல வண்ணம் மாதிரி இரண்டறக்கலந்தா அது ஜீவன்.


PG சொரூபத்தில பிரவேசம் செய்யாம தனியா நின்னு பிரிச்சு காட்டினா அப்படி காட்டப்பட்டது உபகிதம். பிரிச்சுக் காட்டுவது உபாதி.
கூடஸ்தன் உபகிதம். அந்தக்கரணம் உபாதி.
சொரூபத்தில பிரவேசம் செய்து சேந்து நின்னா பிரிச்சு காட்டினா அப்படி காட்டப்பட்டது விசிட்டம். காட்டுவது விசேஷனம்.
ஜீவன் விசிட்டம். அந்தக்கரணம் விசேஷனம்.
---


ம்ம்ம்ம்ம்.... இப்ப யோசிச்சா ஒண்ணு புரியும். ஜீவனுக்கும் ஜீவ சாட்சியான கூடஸ்தனுக்கும் இருக்கிற ஒரே பாகுபாடு அந்தக்கரணம் விலகி இருக்கா இல்லை சேர்ந்து இருக்கா என்பதுதான். அந்தகரணம்தான் முக்கியமா மனதுன்னு தெரியுமே! மாயைதான் மனசை உண்டாக்குகிறதும். இந்த மனசு நின்னு போச்சுனா மாயை விலகும். ஜீவனுக்கும் ஜீவ சாட்சியான கூடஸ்தனுக்கும் வேறுபாடு ஒழியும். நிலையான ஜீவ சாட்சியா கூடஸ்தன் மட்டுமே நிக்கும்.


கூடஸ்தன்: சீவன்
இலக்கோண ஆராய்ச்சி இப்ப கொஞ்சம் பாக்கோணோம்.
வாச்சியம்: literal
இலட்சியம் : implied
தத் த்வம் அஸி என்கிறதுலே தத் - ஈசன், த்வம் - நீ = ஜீவன். இது வாச்சிய அர்த்தம். அதான் லிடரல்.
பிரமம், கூடஸ்தன் இது இலட்சிய அர்த்தம். அதாவது சொல்லப்பட்ட சொல் வேற ஒண்ணா இருந்தாலும் உத்தேசிச்சு சொன்னது இதைதான்.

ஈசனுக்கும் சீவனுக்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கிறது போல. எட்டிப்பிடிக்க முடியாது.

ஆனால் கூடஸ்தனுக்கும் பிரம்மத்துக்கும் இருக்கிற தொடர்பு பாலிலே மறைஞ்சு இருக்கிற நெய் போல. அது பால் என்கிற தன்மையை விட்டு நெய்யாக பிரிச்சு பாக்க முடியும். பிரம்மம் என்கிற பாலிலே இருந்து நெய்யை ஒரு ப்ராஸஸால கொண்டு வருவது போல சீவனாகிய நீ கூடஸ்தன் என்று புரிஞ்சு கொண்டு பிரமத்தோட ஐக்கியமாகலாம்.

எது இதை நடக்க விடாம தடுக்குது? அதான் கர்மா. கர்மா என்கிற தளைக்கட்டு- கர்ம பந்தம்.
எதால நடத்த முடியும்? முன்னேயே பாத்த கேட்டல் முதலான ப்ராஸஸால.



5 comments:

Geetha Sambasivam said...

கொஞ்சம் பெரிசா இருக்கு! இரண்டு முறை படிக்கவேண்டி இருந்தது.

குடம் உதாரணமும், காகிதம் உதாரணமும் இல்லைனா புரிஞ்சுக்க முடிஞ்சிருக்காது என்னாலே!

Geetha Sambasivam said...

//எங்கும் நிறைந்து இருக்கிறது பிரமம்தான். ஈசன் இல்லை. ஆனா பல முறை விவகாரிகத்திலே ஈசன் எங்கும் நிறைந்தவன்னு சொல்கிறப்ப பிரம்மத்தைதான் சொல்கிறாங்க.//

பிரம்மம் தான். ஆனால் ஈசன் என்று சொன்னால் கொஞ்சம் சுலபமாப் புரியறாப்போல் இருக்கு.

SUNDAR said...

தங்களின் புரிதல் அருமை!

பல அறிய கருத்துக்களை பதிந்துள்ளீர்கள்! எளிய உதாரணத்தின் மூலம் விளக்கியுள்ளீர்கள்

பரமாத்த்மாவை நோக்கி போகும் மனிதன் மேலான படிகளில் முன்னேருவதுபோல இழி நிலையில் வாழ்ந்தவர்கள் கீழான பாதாளம் நோக்கி செல்கின்றனர்!

பாதாளலோகம் பற்றிய தங்களின் கருத்துக்கள் ஏதாவது இருந்தால் பதிக்கவும்.

நன்றி!
SUNDAR

திவாண்ணா said...

//கொஞ்சம் பெரிசா இருக்கு! //
ஆமாம் அக்கா! புரியவைக்கணும்ன்னு...

//பிரம்மம் தான். ஆனால் ஈசன் என்று சொன்னால் கொஞ்சம் சுலபமாப் புரியறாப்போல் இருக்கு.//

ஆமாம். அது பழக்கமான வார்த்தையா இல்லாததாலே!

திவாண்ணா said...

//பாதாளலோகம் பற்றிய தங்களின் கருத்துக்கள் ஏதாவது இருந்தால் பதிக்கவும். //

நல்வரவு சுந்தர்!
நன்றீ.
பாதாள லோகம் பற்றி விரிவா எங்கும் படிக்கலை. இப்போதைய தொடரில் வர வாய்ப்பு இல்லை. எப்போதாவது படிக்க நேர்ந்தால் பொது பதிவாக இடுகிறேன்.