Pages

Tuesday, March 17, 2009

ஆரோபம் (ஆவரணம்- 2)




இப்படி ஆவரணத்தைப்பத்தி சொன்னதும் சீடனுக்கு ஒரு சந்தேகம் வருது.
ஆரோபம் எப்போ வரும்?
ஒரு விஷயம் முதல்ல இருக்கணும். இது ஆதாரம்.
இது மேலே இதோட உண்மை சொரூபம் தெரியாம ஒரு மறைப்பு இருக்கணும். இது ஆரோபம்.

ஆதாரமே இல்லைனா ஆரோபம் வர வாய்ப்பு இல்லையே! ஆதாரம் இல்லாம வேற எது மேலே வரும்?
ஆதாரம் அப்படியே இருக்குன்னா ஆரோபம் இல்லையே? ஏன்னா அதான் ஆதாரத்தை பாக்கிறோமே!
கயிறு இல்லைனா பாம்புன்னு நினைக்க என்ன அங்கே இருக்கு? கயிறு இருக்குன்னா பாம்புன்னு தோணாதே?
சீடன் கேட்கிறான் ¨எப்படி பாத்தாலும் உதைக்கிறதே? ஆதாரம் மறைபடும்போதும் மறைபடாதபோதும் ஆரோபம் தோன்ற வகையில்லையே?¨

நல்லாதானே யோசிக்கிறார்!
ம்ம்ம்ம்! குரு சாமான்யப்பட்டவரா? அதுக்கும் பதில் வெச்சு இருக்கார்.

ஆதாரம் ரெண்டு வகைப்பா. சமம், விசேடம் ன்னு.

எல்லா இடத்திலேயும் எப்பவும் இருக்கிறது சாமான்ய ஆதாரம்.
குறைந்த காலம் சில இடங்களிலே இருக்கிறது விசேஷ ஆதாரம்.

உருண்டு திரண்டு நெளி நெளியா ஏதோ இருக்கறது உண்மை. அரை குறை இருட்டோ/ வெளிச்சமோ இதை பாக்கிறோம். இது சாமான்ய ஆதாரம். இதை கயிறுன்னு நாம சொல்கிறோமே இது விசேஷ ஆதாரம். உருண்டு திரண்டு நெளி நெளியா இருக்கிறதும் இல்லாம கூடுதலா இருக்கிற சில விஷயத்தை வெச்சு - இது நகரலை, தேங்காநார்ல செஞ்ச மாதிரி இருக்கு இப்படி- இது கயிறுன்னு முடிவு செய்யறோம் இல்லையா? இது விசேஷ பாகம்.

அரை குறை வெளிச்சத்திலே நாம அதை நகருது போல இருக்கே, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு சத்தம் கேட்டாப்பல இருக்கே ன்னு சில கூடுதல் விஷயங்களை ஏத்தி இது பாம்பு ன்னு நினைக்கிறோம்.
ஆக விசேஷமா ஏத்தி பாத்ததுதான் மாறித்தே தவிர சாமான்ய பாகம் மாறலை! அதனால ஆதாரம் மறையாது. வேறா பார்க்கப்படும்.

51.
பேதத்தை மறைக்குமென்றதை சீடன் ஆதாரத்தை மறைக்கும் எனக்கருதி வினாவுதல்:

ஆதார மறைந்து போனா லாரோப மெங்கே தோன்றும்
ஆதார மறையா தாகி லாரோப மிலையே யென்றால்
ஆதாரஞ் சமம் விசேட மாமென விரண்டு கூறாம்
ஆதாரஞ் சமமா மெங்கு மாரோபம் விசேடமாமே

[காட்டு இருளில் கயிறு போன்ற பிரமமான] ஆதாரம் மறைந்து போனால் [பிராதி பாசிகமான பாம்பு போன்ற சீவேஸ்வர ஜகத்தின்] ஆரோபம் எங்கே தோன்றும்? [வெய்யிலில் கயிறு போன்ற பிரமமான] ஆதாரம் மறையாதாகில் [பிராதி பாசிகமான பாம்பு போன்ற சீவேஸ்வர ஜகத்தின்] ஆரோபம் இலையே? என்றால், ஆதாரம் சமம் (சாமான்யம்), விசேடமாம் என இரண்டு கூறாம். ஆதாரம் சமமாம் எங்கும் (அதிக காலம் அதிக இடங்களில் உள்ள ஆதாரம் சாமான்யமாம்.) ஆரோபம் விசேடமாமே. (குறைந்த காலம் குறைந்த இடங்களில் உள்ள) ஆரோபம் என்ற பெயர் கொண்ட ஆதாரம் விசேடம்.

கயிறாக தோன்றும் பிரமம் சாமான்ய ஆதாரம். பாம்பாக தோன்றும் கயிறு விசேட ஆதாரம்.

{தாத்பர்யம்: ஆதாரம் மறைபடும்போதும் மறைபடாதபோதும் ஆரோபம் தோன்ற வகையில்லையே என்ற சீடனை நோக்கி அந்த ஆதாரத்தை ஆதார அதிட்டானமாக பிரித்து ஆதாரம் சமம் எனவும் அதிட்டானத்தை விசேடம் என்றும் கூறினார்.}



No comments: