Pages

Tuesday, March 31, 2009

பஞ்ச கோசங்கள் நான் இல்லையானால் நான் யார்?



பின்ன? பஞ்ச கோசங்கள் நான் இல்லையானால் நான் யார்? இந்த அஞ்சு உறையையும் விட்டு வெளியே வாப்பா! யார் நீன்னு உனக்கே புரியும். சொல்லி தெரிகிற சமாசாரம் இல்லை இது!

எப்பவும் இருக்கிறது, அறிவாக இருக்கிறது, ஆனந்தமா இருக்கிறது. விருப்பு வெறுப்பு போல ரெட்டைகளை கடந்து எப்பவும் சமமா இருக்கிறது, யாரும் எதுவும் அசைக்க முடியாம ஸ்திரமா இருக்கிறது, நடக்கிறதா மத்தவங்க சொல்கிற விஷயங்களுக்கு வெறும் சாட்சியா இருக்கிறது, உன்னைத்தவிர வேறு யாரும் இல்லாம நீ மட்டுமே இருக்கிறது, அழிவே இல்லாம இருக்கிறது - இப்படிப்பட்ட ஆன்மாதான்பா நீ! சடமாயும் அறிவில்லாமலும் துக்கம் நிறைந்ததுமா இருக்கிற இந்த அஞ்சு உறைகளையும் விட்டு நீ வெளியே வந்த உனக்கு இது புரியும்.

69.
சத்தொடு சித்தாநந்தஞ் சமந்திரஞ் சாட்சியேகம்
நித்தியம் வியாபியான்மா நீயதுவா வறிந்து
பொத்தொடு சடந்துக்காதி பொருந்து பேதங்களான
குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியிலாவாய்.

சத்தொடு சித்தாநந்தம் (சச்சிதானந்தமாய்) சமமாய், திரமாய், சாட்சியாய், ஏகமாய், நித்தியமாய் வியாபி[க்கும்] ஆன்மா நீ அதுவாக அறிந்து பொத்தொடு (பொய்யான) சட துக்காதி (துக்க முதலியதாய்) பொருந்து[கின்ற] பேதங்களான (ஆன்ம சுபாவத்துக்கு அன்னிய சுபாவங்களை உடையனவான) குத்திர (வஞ்சகமான) பஞ்ச கோசக் குகை விட்டு (பஞ்ச கோசங்களாகிய குகைகளில் ஆன்ம புத்தியை ஒழித்து) வெளியிலாவாய்.

PG
வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை
வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி
ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி
அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை
இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை

தாயுமானவர் -14. ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம் -18

மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் மேவும் அறிவு அறியாமைகள்தான் ஏது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் பிரிய மோத பிரமோதமேது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் மூட சட சூனியந்தாம் ஏது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் ஆதிக்கு உயர் சாக்ஷி நீயாம் காணே - பரமானந்த தீபம்
(முதல் வரி மனோ மய கோசத்தையும் இரண்டாவது ஆனந்த மய கோசத்தையும் மூன்றாவது கோசங்கள் நீங்க பாழை பார்ப்பதையும் குறிக்கின்றன. சரிதானே)

கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் அன்னியமாய் இருக்கையாலே
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் விக்ஷேபம் ஈன்றதாகும்
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் நீ அறிவாய் அது நீ அல்ல
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியும் உயர் சாக்ஷி நீயாம் காணே - -பரமானந்த தீபம்

பஞ்ச கோசத்தை பகுத்தறிந்தோருக்கு
நெஞ்ச மிறந்ததென் றுந்தீ பற
நிட்டைய தாகு மென் றுந்தீ பற – திருவுந்தியார்.



உடம்பு



ஆன்மா அழியாதது; அறிவே வடிவமானது; எப்பவும் ஆனந்தமா இருக்கிறது.

ஆனா அன்ன கோசமான இந்த ஸ்தூல உடம்பு பஞ்சீகிருதம் பண்ண பஞ்ச மகா பூதங்களிலேந்து வந்தது. என்னிக்காவது ஒரு நாள் அழிஞ்சே தீரும். அதனால அநித்தியம். மேலும் சடம். அதுக்கா ஒண்ணும் தெரியாது. ஆன்மா இருந்தாதான் அதால எதுவும் செய்ய முடியும். செத்து போன பிறகு ஆன்மா அந்த உடம்பை விட்டு போயிடும். அப்ப அதுக்கு ஒண்ணும் தெரியலை இல்லையா? ஒத்தர் இறந்த பிறகு ¨அப்பா எங்களை விட்டு போயிட்டியே¨ ன்னு அழலை? உடம்பு அங்கேயேதானே இருக்கு? அப்ப போய்விட்டது நாம், உடம்பு இல்லை. அதனால நாம் உடம்பு இல்லை. இந்த நாம் உடம்பை விட்டு போய் வேற உடம்பு எடுப்போம். ஒரு நாள் அதுவும் போய் இன்னொரு உடம்பு. இப்படி உடம்புகள் போகப்போக வேற உடம்பு கணக்கில்லாத வந்துண்டே இருக்கும்!

இதை என் உடம்பு ன்னு சொல்கிறப்பவே உடம்பு நானில்லைன்னு புரிஞ்சுடுத்து. குடத்தை பார்க்கிறவன் இருக்கும்போது அவன் குடம் ஆகமாட்டான் என்பது போலே தேகத்தை காண்கிறவன் தேகமாக ஆகமாட்டான்.

உடம்பு நானில்லை சரி, ஆனா உடம்பு என்னுதுதானா? :-))

அப்படி சொல்கிறது வியவகார சத்தியம்.
மண்ணிலேந்து வந்தது மண்ணுக்கே என்கிறபடி....
உடம்புக்கு சாத்திரங்கள் படி அக்னியோ பூமியோதான் சொந்தக்காரன். கொஞ்ச நாளுக்கு நம்ம இச்சையிலே விட்டு வெச்சு இருக்கு. உயிர் பிரிந்ததும் குல வழக்கப்படி புதைக்க அல்லது பெரும்பாலும் அக்னியில் எரிக்கத்தான் வேண்டும். இதனாலேயே உடல் உறுப்புகளை தானம் செய்கிறது சாத்திர சம்மதமில்லை.

தயானந்த சரஸ்வதிகள் சிரிச்சுண்டே தமாஷ் பண்ணுவார். இந்த உடம்பு என்னுதுன்னு நினைக்கிறோம். ஆனா இதிலே நாம மட்டும் இல்லையே? கோடானு கோடி பாக்டீரியாக்கள் இருக்கு. குடல் புழுக்கள், அமீபா.... அமீபாக்கள் சொல்கிறனவாம், ¨எத்தனை தலை முறை தலை முறையா நாங்க இங்கேயே இருக்கோம்! இந்த உடம்பு எங்களுக்கு சொந்தம்! ¨ :-))

மீதி 4 கோசங்களிலே பிராண, மனோ, விஞ்ஞான கோசங்கள் ஆன்மா அவ்வப்போது பிராணங்கள், அந்தக்கரணங்களோட கூடி நிற்கிற நிலைமைதான்.

அந்தக்கரணமோ சூக்ஷ்ம பூத சத்வ குண சமஷ்டி. அது நம் தினசரி வாழ்க்கையிலே தூங்குகிற போது இல்லாமலும் போகும். அப்ப அநித்தியம்தானே? பூரண அறிவோட பிரகாசம் இல்லாம இவற்றுக்கு ஒண்ணும் தெரியாது. அதனால இவை சடமே! மனதோட செயல்களும் புத்தியோட செயல்களும் பல சமயம் துக்கத்தை கொடுக்கின்றன.
ஆக இவையும் ஆன்மா ஆகாது.
ஆன்மாவால அறியப்படுகிற எதுவும் ஆன்மா ஆகாது.

கண்டனவல்ல வன்றே கழித்திடும் இறுதிக்கண்ணே
கொண்டது பரமானந்தக் கோதிலா முத்தியதால்....

உள்ளது மில்லது மாய்முன் - உற்ற
உணர்வது வாயுன் னுளங்கண்ட தெல்லாந்
தள்ளெனச் சொல்லிஎன் ஐயன் - என்னைத்
தானாக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி - சங்கர 8.

பாராதி பூதநீ யல்லை-உன்னிப்
பாரிந் திரியங் கரணநீ யல்லை
ஆராய் உணர்வுநீ என்றான் -ஐயன்
அன்பாய் உரைத்த சொல் லானந்தந் தோழி - சங்கர 9.
(தாயுமானவர்: 56. ஆனந்தக்களிப்பு)

இந்த அந்தக்கரணத்தை நாம அறிஞ்சு நீக்கணும். என் மனம் என் புத்தி என் சித்தம் ன்னு சொல்கிறதாலே இவை வேறதானே?

அந்தக் கரண மறிந்து துறப்பார்க்குப்
பந்த மிறந்ததென் றுந்தீபற
பாழ்வெளி யுள்ளதென் றுந்தீபற

மீதி இருக்கிறது ஆனந்தமய கோசம். அது காரண சரீரம். அனுபவத்தில அது தூக்கம். ஆழ் தூக்கத்திலே கருவி கரணங்கள் எல்லாம் அடங்கி ஆன்மா அவித்தையான அந்தகாரத்திலே அமிழ்ந்து கிடக்கும். (ignorence is bliss?) எப்படி ஆன்மா ஸ்தூல சூக்ஷ்ம உடல்களோட சம்பந்தப்பட்டு ஜாக்ரத், ஸ்வப்பன (கனவு) நிலைகளை அனுபவிக்கிறதோ அப்படி காரண உடலோட சம்பந்தப்பட்டு சுசுப்தி யை அனுபவிக்கும். இந்த சுசுப்தியே ஆனந்த கோசம். ஆக இதுவும் நாமில்லை.



Monday, March 30, 2009

இந்த உடம்பு நானா?



முதலிலேஇந்த உடம்பு (அன்ன மய கோசம்) நானா?”ன்னு கேக்கணும்.
இல்லை அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள வெறும் பஞ்சீகிருதம் செஞ்ச தமோ குண ஐம்பூதங்களால ஆனது ன்னு புரியும். (அப்பாடா! சுலபமா ஸ்தூல பஞ்ச பூதங்களால ன்னு சொல்லி இருக்கலாமோ?) அப்ப நான் அது இல்லை. இந்த உடம்பு பிணமாகி ஒரு நாள் அழிஞ்சு போயிடும்.

சரி, பிராண சக்திகள் இந்த உடம்பில ஓடுகிறதாலதானே நான் இருக்கேன்? (ப்ராண மய கோசம்) அப்ப அதான் நானா? இல்லை. அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள ராஜச குண சமஷ்டியா இருக்கிறது. அதனால அதுவும் நான் இல்லை.

மனசே நான். நான் நினைக்கிறேன். அதனால நான் இருக்கிறேன் ன்னு ஒருத்தர் சொன்னார். ஆனால் ஆராய்ஞ்சு பாத்தா நமக்கு தெரியும்- மனசு, புத்தி இப்படி இருக்கிறதெல்லாம் (மனோ மய கோசம், விஞ்ஞான மய கோசம்) அந்தக்கரணம்தான். அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள சூக்ஷ்ம பூத சத்வ குண சமஷ்டி.

ஆஹா! புரிஞ்சு போச்சு! மீதி இருக்கிறது ஆனந்த மய கோசம் ஒண்ணுதான். அதான் நான்! இல்லை, அதுவும் இல்லை!
அது அவித்தை அல்லது அஞ்ஞானமாகிய தமோ குணம்.
என்னப்பா இது எல்லாத்தையுமே இல்லை இல்லைனா என்ன பண்ணறது?

67.
வாச்சியார்த்தத்தை நீக்குவது எப்படி:

பிறிவதெப்படியென்றக்காற் பிணமாகுமுடனானென்னும்
அறிவினைக் கொல்லல் வேண்டு மைம்பூத விகாரமன்றோ
வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போலுன் மூக்கால்
எறிபிரா ணனுநீ யல்லை யிராசதகுணவி காரம்.

பிறிவதெப்படி என்றக்கால் (வாச்சியார்த்தத்தில் நின்று நான் வேறுபடுவது எப்படி என்றால்) பிணமாகும் உடல் (அன்னமய கோசத்தை) நான் என்னும் (பிராந்தி) அறிவினைக் கொல்லல் வேண்டும். [ஏனென்னில் அது] ஐம் பூத விகாரம் (பஞ்சீ கிருதம் செய்யப்பட்ட பஞ்ச பூதங்களால் ஆனது) அன்றோ. வெறியது (வெறுமையான) ஓர் துருத்தி மூக்கின் விடுவது போல் உன் மூக்கால் எறி[யும்] பிராணனும் (பிராணமய கோசம்) நீ அல்ல. [அது பஞ்சீ கிருதம் செய்யப்படாத பூதங்களின்] இராசத குண விகாரம். (காரியம்)

68
கரணமா மனது புத்தி கருத்தாவா மவையான் மாவோ
தரமுள விரண்டு கோசஞ் சத்துவ குணவி காரம்
வரமறு துயிலா னந்த மயனையு நானென் னாதே
விரவிய தமவஞ் ஞான விருத்தியின் விகார மாமே

கரணமா[கிய] மனது, கருத்தாவாம் (கர்த்தா = செய்பவன் ஆகிய) புத்தி அவை ஆன்மாவோ? தரமுள இரண்டு கோசம் (சங்கற்ப ரூபம், நிச்சய ரூபம் என தாரதம்மியம் உள்ள மனோமய, விஞ்ஞானமய கோசங்கள்) சத்துவ குண விகாரம்.
வரமறு (உயர்வில்லாத) துயில் ஆனந்த மயனையும் (சுழுத்தியில் உள்ள ஆனந்த மயனையும்) நான் என்னாதே. விரவிய (பொருந்திய) தம (தமோ ரூபமான) அஞ்ஞான விருத்தியின் விகாரமாமே.
(ஆக 5 கோசங்களையும் ஆன்மா அல்ல என நிராகரித்தார்.)

ஆன்மா அழியாதது; அறிவே வடிவமானது; எப்பவும் ஆனந்தமா இருக்கிறது.



Friday, March 27, 2009

ஈசன் - ஜீவன்


அப்ப ஆனந்தமே பிரம்மம்!
இப்படி ஒவ்வொண்ணா விசாரிச்சு இதுவே பிரம்மம்ன்னு முடிவுக்கு வருவதற்கு பார்கவீ வாருணீ வித்யைன்னு பெயர்.
இது தைத்திரீய உபநிஷத்திலே வருகிறது.
.....
இங்கே கூட விசாரம் பூர்த்தி ஆகலை.
பிரம்மத்தை அறியறதுல இது ஒரு படிதான். ப்ரம்மத்தை இதுதான்னு அறுதியிட்டு சொல்ல முடியாது. அது மனசையும் வாக்கையும் கடந்தது! ¨யதோ வாசோ நிவர்த்தந்தே; அப்ராப்ய மனசா சஹ¨ என்கிறது இதே உபநிஷத்.மனசும் வார்த்தைகளும் பிரம்மத்தை எட்டப்போய் முடியாமல் திரும்பிடறதாம்!

சரி நம்ம கேசுக்கு வரலாம்.
பிரம்மம் எதுன்னு தெரியாட்டாலும் எது இல்லைன்னு புரிஞ்சுக்கலாம்.

ஜீவனும் ஈசனும் மாய சம்பந்தமுடையவர்கள்.
ஈசன் சத்வ குண மாயை.
ஜீவன் ரஜோ குண மாயை. அதாவது அசுத்த மாயை.
ஈசன் மாயையை தன் வசப்படுத்தினவன். ஜீவன் மாயை வசப்பட்டவன். இரண்டு பேரும் மாயா சம்பந்தம் உடையவர்களே! ஈசனுக்கும் ஜீவனுக்கும் என்ன ஏணி வெச்சாலும் எட்ட முடியாது! அதாவது என்ன ஆன்ம முன்னேற்றம் கண்டாலும் ஈசனுக்கு ஜீவன் சமமா ஆக முடியாது. ஒப்பிடவே முடியாது! ஈசனுடைய சர்வத்துவம் கிட்ட அணுகக்கூட ஜீவனால் முடியாது!
ஜீவன் பிண்டத்திலே இருக்கன். ஈசன் அண்டத்திலே!
ஜீவன் காரிய உபாதி ஈசன் காரண உபாதி! (அதாவது ஈசன்தான் பிறப்பிக்கிறான்; உண்டாக்குபவன். சீவன் பிறக்கிறான்; உண்டாகிறவன்.)
ஜீவன் வியக்தி தேகம் உள்ளவன். ஈசன் சமஷ்டி தேகம் உள்ளவன்.
ஜீவன் அற்ப ஞானம் உள்ளவன். ஈசன் சர்வஞ்ஞன். எல்லாம் தெரியும்!

ஆனால் கூடஸ்தனும் பிரம்மமும் மாயா சம்பந்தமில்லாதவை. பாலில் இருக்கிற நெய் போல கலந்தே இருக்கும்.
நாம் அஞ்ஞானிகளாக இருப்பதால ஜீவனும் ஜீவ சாட்சியான கூடஸ்தனும் ஒண்ணேன்னு நினைக்கிறோம். அதனாலதான் மத்தால கடைஞ்சு நெய்யை தனியா எடுக்கிறாப் போல விவேகமாகிய மத்தால கடைஞ்சு உன்னை சீவ சாட்சியேன்னு அறிஞ்சு கொள்ன்னு ஆசிரியர் சொன்னார்.

திருமுறை 5. பதிகம் : 090 பொது: பாடல் எண் : 10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

பொழிப்புரை:

விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்.
அப்பர் சொன்னது!

மாயையான மனசோட இருக்கிறோம். ஆதனால சீவனா இருக்கோம். அது நம்மோட உண்மையா நிலை இல்லை. மனசை எப்போ அழிச்சு அல்லது பிரிஞ்சு மனசோட சேட்டைகளை பாக்கிறோமோ அப்ப கூடஸ்தனா இருப்போம். அதுவே நம்மோட உண்மையா சொரூபம். இதை பார்க்க கத்துக்கொண்டா நமக்குள்ள மறைஞ்சு இருக்கிற பரமாத்ம சொரூபம் தெரியும். அதை உணர முடியும்.

இது என்னவோ ரொம்ப கஷ்டம்ன்னு தோணினாலும் உண்மையில் அவ்வளவு கஷ்டமில்லை.
ஒரு இடத்தில சௌகரியம் போல உக்காருங்க. ஆழந்த மூச்சு எடுத்து விடுங்க - நாலஞ்சு தரம்.
இப்ப மனசை கவனியுங்க! அது என்ன நினைக்குது? எங்கே போகுது? எங்கிருந்து வந்தது? வேடிக்கை பாருங்க.
மனசு கொஞ்ச கொஞ்சமா நின்னுடும்!

அட! இவ்வளோ சுலபம்னா ஏன் நிறைய ஞானிகள் இல்லை?
ஏன்னா நம்மாலே இதை அப்படியே நிறுத்த முடியாது. மனசு கொஞ்ச கொஞ்சமா நின்னுடும்- அப்படி சொன்னேன் இல்லையா? இப்ப ¨அட! மனசு நின்னுடுச்சு¨ன்னு ஒரு எண்ணம் வரும்!
நம்மையே அறியாம இன்னொரு எண்ணம் கிளர்ந்து மனசை ஆக்கிரமிச்சுடும்! இல்லை, எந்த எண்ணத்தை பாத்தோமோ அதை தொடர்ந்தே இன்னொன்னு வந்துடும். வேடிக்கை பாக்கிறதே இன்னொரு எண்ணத்தை தோற்றுவிக்கும். அதான் வாசனைகளோட சக்தி! விலகி நின்னு நெடு நேரம் மனசை பாக்கிறதை ரொம்ப நாள் பயிற்சிக்கு அப்புறம் செய்ய முடியுமோ என்னவோ!
ஆனா ஒண்ணு. இதை பண்ணிப்பாத்தா மனசு வேற நாம் வேறன்னு புரிஞ்சுடும்!

இந்த தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை சரியா புரிஞ்சுக்கணும்.
இது நீயே கடவுள் ன்னு சொல்லலை. (சமீப சினிமா ஒண்ணுக்கு பெயரிலே அப்படி அர்த்தம் பண்ணி போட்டு இருக்காங்க; அஹம் பிரம்மாஸ்மி- நான் கடவுள்).

சரியான பொருள் என்ன?

¨நீ பிரம்மத்தின் ஒரு அம்சமே. பிரம்மத்தைப்போல சத் சித் ஆனந்தம் உள்ளவனே! அதாவது ஒரே இனமே. ஆகயால் நான் பிரம்மமே என்ர திடமான சித்த்தோட அந்த பரம் பொருளிலே கலந்து நான் என்கிற நினைப்பை நீக்கினால் அந்த அகண்டமான சொரூபம் உன்னை தன் வயப்படுத்திக்கும். அதாவது தானாக்கிக்கும். நீயும் பிரம்மமா ஆவாய்.¨

இந்த ¨நான்¨ ஒழிந்து எப்போ நான் பிரம்மம் ன்னு திடசித்தம் வருமோ அது வரை முக்தி இல்லை.
PG:
தானே சிவன்சிவனை நானென்று நாடி வெறுந்
தானாகி நின்றநிலை தானன்றோ- வானாப்
பவசலதி நீந்திவரும் பண்புடைய மாணா
சிவலோக மென்றே தெளி
(உபதேச மாலை- சிவயோகம்)

சிவத்தோ மசியுண்ணி னைந்துசிவ யோகநிட்டை
சவுக்கியதா னத்தேறித் தான் (சித்தாந்த தரிசனம்- சிவ யோகவியல்)
சிவம் தோம் அசி (நீ சிவமாய் இருக்கிறாய்) உள் நினைந்து சிவ யோகநிட்டை....

சீவனத்தால் சீவனென்னல் சீலகிறந்தாலிந்தச் சீவனே யந்த சிவம்
அந்த சிவநம்மை யன்றியிலை யென்றேர்தலுந்துஞ் சிவயோக மோர் (சித்தாந்த தரிசனம்- பாப விமோசனவியல்)

சிவன் வேறு, சீவன் வேறு என்று இரண்டாய்ச் செப்பும்
அவன் சிவனை என்றும் அறியாதான் -தவமில்லா
உள்ளத்தார்க்கு எய்துமோ ஊர்குருவி ஆகாசம்
எள்ளப் பறந்து அறியுமே. (சிந்தனை வெண்பா -தக்ஷிணா மூர்த்தி துதி)

அதுவே நீயாம் என்று அரு மறைகள் சொல்லும்.
எதிர் சிவனே நீயானாய் என்னும் முது சைவம்.
வேறோ வேறன்றோ சொல் வேதியனே! விண் விசும்பும்
வேறோ வேறன்றோ விளம்பு (சிந்தனை வெண்பா)

Thursday, March 26, 2009

ஞான விசாரணை



கையினால் பிரிக்க முடியாத நெய்யை மத்தால் கடைந்து எடுப்பது போல, வாச்சியார்தத்தில் (சீவனில்) கலந்து கர்ம பந்தத்தினால் பிரிக்க முடியாது உள்ள இலட்சியார்த்த சொரூபத்தை (ஆத்மா) சிரவணம் (கேட்டல்) முதலானவற்றால் பிரித்து அறிய வேண்டும்.



தத்
வாச்சிய அர்த்தம் : மாயை, மாயைக்கு அதிஷ்டான சேதனத்துடன் உள்ள ஆபாச ரூபமான ஈசன்
இலட்சிய அர்த்தம் : அதிஷ்டான சேதனமான பிரமம்.

த்வம்
வாச்சிய அர்த்தம் : அவித்தை, அவித்தைக்கு அதிஷ்டான சேதனத்துடன் உள்ள ஆபாச ரூபமான சீவன்
இலட்சிய அர்த்தம் : அதிஷ்டான சேதனமான கூடஸ்தன்.

தாத்பர்யம்: தத்பத த்வம் பத வாச்சியார்த்தம் பர சீவர்கள், இலட்சியார்த்தம் பிரம கூடஸ்தர்கள். அத்தியாசத்தால் (மயக்கத்தால்) இரண்டு வாச்சியார்த்தங்களும் இரண்டு லட்சியார்த்தத்தில் கலந்து இருக்கும். இதில் வாச்சியார்த்தத்தை நீக்கி இலட்சியார்த்தத்தை அறிய வேண்டும்.

சீவனாகிய நீ கூடஸ்தன் என்று புரிஞ்சு கொண்டு பிரமத்தோட ஐக்கியமாகலாம். இப்படி முதல்லேயே பாத்தோம். இப்ப விவரமா பாக்கலாம்.
ஞான விசாரணையாலதான் இது நடக்கும்.

ப்ருகு ன்னு ஒத்தர் இருந்தார். (இவர்தான் பிருகு மகரிஷியான்னு கேட்டக்கூடாது. ஒரே பேரிலே பலர் இருந்திருப்பாங்க இல்லையா?) அவர் வருணன் என்பவரோட புத்திரன். (அதே. வருணன் தேவர்கள்ல ஒத்தரா இருக்கிறவரா இல்லாம இருக்கலாம்.)

அவர் அப்பாகிட்டே போய் ப்ரம்மம் னா என்ன உபதேசம் பண்ணுங்க ன்னார்.

வருணன் சொன்னார். அப்பா நல்ல கேள்வி கேட்டே! ரொம்ப சந்தோஷம். அன்னம், பிராணன், கண், காது, மனசு, பேச்சு இதெல்லாமே பிரம்மம் ன்னார். ப்ருகுவுக்கு ஒண்ணும் புரியலை. குழம்பி போயிட்டார்.

சரின்னு வருணன் சொன்னார். குழந்தாய், எதுலேந்து உயிரினங்கள் எல்லாம் தோன்றித்தோ, எதனால எல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கோ, எதில எல்லாம் ல‌ய‌மாகி முடிவ‌டையுமோ அது எதுன்னு கண்டு பிடி. அதுவே ப்ரம்மம். போய் தபஸ் பண்ணு ப்ரம்மன்னா என்னன்னு புரியும் னார்.

ப்ருகுவும் போய் தபஸ் பண்ணார். தபஸ்னா? மனசையும் புலன்களையும் கட்டுப்படுத்தி விசாரணை பண்ணார். வெகு காலம் பண்ணிவிட்டு ¨அட நான் அன்னத்தாலதான் நான் உருவானேன், வளந்தேன், ஜீவித்து இருக்கேன். செத்துப்போனா உடம்பை நிலத்திலே புதைக்கவோ எரிச்சு சாம்பலை நிலத்திலேயே போட்டு விடவோ செய்வாங்க. அது திருப்பியும் அன்னமா விளையும். அதனால அன்னம்தான் பிரம்மம்.

போய் அப்பாகிட்டே சொன்னார். வருணன் தப்பு சரின்னு ஒண்ணுமே சொல்லலை. தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.

வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
ப்ராணன்தான் பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

குழந்தை பிறந்து ப்ராணனை உள்ளே இழுத்தாத்தான் ஆஹா குழந்தை பிறந்தாச்சு என்கிறோம். மூச்சு உள்ளவரை நாம இருக்கோம். எப்ப ப்ராணன் போயிடுத்தோ அப்ப நாம இல்லை. அதனால ப்ராணனே பிரம்மம்.

போய் அப்பாகிட்டே சொன்னார். வருணன் தப்பு சரின்னு ஒண்ணுமே சொல்லலை. தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.
வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
மனசே பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

மனசு இருக்கறதால்தான் நாம் இருக்கோம். மனசு நாம சாப்பிடுற உணவை வைச்சு வளருது. ஏதாவது நினைச்சு கொண்டேதானே இருக்கோம். கொஞ்ச நேரமாவது ஏதேனும் எண்ணம் இல்லாம இருக்கோமா? எப்ப மனசு நிக்கிறதோ அப்போ நாம் போயிடுவோம்.
அதனால மனசே பிரம்மம்.
போய் அப்பாகிட்டே சொன்னார். ¨ப்ரம்மம் னா என்ன? உபதேசம் பண்ணுங்க!¨ வருணன் சொன்னார்: தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.

வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
புத்திதான் பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

அறிவே உசந்தது. அறிவுன்னு ஒண்ணாலதான் இந்த உலகத்தை என்னன்னு தெரிஞ்சுக்கிறோம். அதாலதான் நம்ம வாழ்க்கையை சுகமா அமைச்சுக்கிறோம்; வாழ்கிறோம். கடைசில அறிவிலேயே - எல்லாத்தைவிட பெரிய புத்தியிலேயே ஒடுங்கிடுவோம்.

அதனால புத்தியே பிரம்மம்.
போய் அப்பாகிட்டே சொன்னார். ¨ப்ரம்மம் னா என்ன? உபதேசம் பண்ணுங்க!¨ வருணன் சொன்னார்: தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.
வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.

ஆனந்தமே பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

பிறக்கிறப்பவே ஆனந்தத்தோட பிறக்கிறோம். குழந்தை பிறந்தாச்சுன்னா எவ்வளொ பேர் சந்தோஷப்படறாங்க. சம்பந்தம் இருக்கோ இல்லையோ எந்த குழந்தை பிறப்பை கேட்டாலும் யாரும் சந்தோடப்படுவாங்க இல்லையா? இப்பதான் பிறந்த குழந்தையை பாருங்க. எவ்வளோ சந்தோஷமா தூங்குது! ஆதுக்கு என்ன உலக அனுபவம் இருக்கு ஆனந்தப்பட? சந்தோஷத்தையே தேடிதான் வாழ்கிறோம். யாரான சந்தோஷமா இருக்க வேண்டாம்ன்னு நினைக்கிறாங்களா? சிலருக்கு என்ன இருக்கோ இல்லையோ சந்தோஷம் இருந்தா போதும் ன்னு புரிஞ்சு நிறைவா வாழறாங்களே! வாழ்க்கையிலே ஆனந்தம் இல்லைனா சீ என்ன வாழ்க்கை இது என்கிறோம். கடைசியிலே போகும்போது அப்பாடா இந்த தொல்லை பிடிச்ச வாழ்க்கை முடிஞ்சதுன்னு ஆனந்தமா போறோம்!
அப்ப ஆனந்தமே பிரம்மம்!

இப்படி ஒவ்வொண்ணா விசாரிச்சு இதுவே பிரம்மம்ன்னு முடிவுக்கு வருவதற்கு பார்கவீ வாருணீ வித்யைன்னு பெயர்.
இது தைத்திரீய உபநிஷத்திலே வருகிறது. [கொஞ்சம் சொந்த சரக்கும் இருக்கு இதிலே!]

இங்கே கூட விசாரம் பூர்த்தி ஆகலை.





Posted by Picasa

Wednesday, March 25, 2009

பிரம்மத்தின் 4 சைதன்ய வெளிப்பாடுகள்.



விண் என்கிற ஆகாயம் இருக்கு. இங்கே சொல்கிறது ஸ்கை ஆகாயம் இல்லை. ஸ்பேஸ் ஆகாயம்.
இதை பல விதமா சொல்லலாம்.
ஸ்பேஸ் ன்னு நமக்கு அறிவியல் மூலமா தெரிஞ்சது மஹா ஆகாசம்.
அண்ணாந்து பாக்கிறப்ப தெரியறது மேக ஆகாசம். ஒரு நீல கலரிலே குடை மாதிரி ஒரு தோற்றம் இருந்துகிட்டு இதுதான் ஆகாயம்ன்னு ஒரு அடையாளம் காட்டுது. முன்ன சொன்ன மகா ஆகாசம்தான் இதுக்கு இடம் கொடுத்து இருக்கு.

நம்ம முன்னாலே ஒரு குடம் இருக்கு. அந்த குடத்துக்குள்ளே இடம் இருக்கு. அதான் குடத்தில இருக்கிற ஸ்பேஸ்- குட ஆகாசம்.
பக்கத்திலே ஒரு குடத்திலே தண்ணீர் இருக்கு. இதிலே வானம் பிரதி பலிக்குது. நாம அண்ணாந்து பாத்தது இப்ப இங்க நிழலா தெரியுது. குட ஆகாசமும் இந்த நிழலான ஆகாசமும் சேந்து - இது ஜல ஆகாசம்.

இதே போல எங்கேயும் இருக்கிற பிரம்மம், ஈசன், கூடஸ்தன், சீவன் அப்படின்னு நாலு பிரிவா - சைதன்யமா- உணரலாம்.

65.
விண்ணொன்றை மகாவிண்ணென்று மேகவிண்ணென்றும் பாரின்
மண்ணொன்று கடவிண்ணென்று மருவிய சல விண்ணென்றும்
எண்ணுகற்பனைபோ லொன்றே யெங்குமாம் பிரமமீசன்
நண்ணுங் கூடஸ்தன்சீவ னான்குசைதன் னியமாமே

விண் (ஆகாயம்) ஒன்றை மகா விண் என்றும் மேக விண் என்றும் பாரின் (உலகில்) மண் ஒன்றும் (மண்ணால் ஆகிய) கட விண் (குடத்தால் பிரிக்கப்பட்ட ஆகாயம்) என்றும் மருவிய சல விண் (குடத்தில் உள்ள ஜலத்தில் ஆகாயம்) என்றும் எண்ணும் கற்பனை போல், ஒன்றே எங்குமாம் பிரமம் (என்றும்), ஈசன் (என்றும்), நண்ணும் கூடஸ்தன் (சரீரத்தில் வளைபட்டுள்ள பிரத்திய ஆத்மா என்றும்) சீவன் [என்றும்] நான்கு [வகை] சைதன்னியமாமே.

பிரம்மம்: மகா ஆகாசம் ப்ரம்மாண்டத்திலே உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து இருக்கிறது போல எங்கும் வியாபித்து இருக்கிறது பிரம்மம்.

ஈசன்: மேகத்துக்கு இடம் கொடுத்த ஆகாசமும் மேக ஜலத்திலே பிரதி பலிக்கிற ஆகாசமும் போல;
இடம் கொடுக்கிற பிரம்மமும் சுத்த, சத்வ மாயையிலே பிரபலிக்கிற பிரம்மத்தோட நிழலே ஈசன்.

எங்கும் நிறைந்து இருக்கிறது பிரமம்தான். ஈசன் இல்லை. ஆனா பல முறை வியவகாரிகத்திலே ஈசன் எங்கும் நிறைந்தவன்னு சொல்கிறப்ப பிரம்மத்தைதான் சொல்கிறாங்க.

கூடஸ்தன் - இந்த வார்த்தையை முதல்லேயே பாத்தோம். கூடஸ்தன்னாலும் ஜீவ சாட்சினாலும் ஒண்ணே. அந்தக்கரணம் ஸ்வச்சம் - அதான் க்ளியர் - ஆனது. அதனால ப்ரம்மத்தோட சாயை- நிழல் அதிலே பிரதிபலிக்கும்.

எப்படி மகா ஆகாசத்தில மாயையா ஒரு மேக ஆகாசம் தோன்றுமோ அது போல இந்த அந்தகரணத்தால பிரம்மத்தோட நிழல் ஜீவ சாட்சியா பிரிச்சு காட்டப்படும். பிரிச்சு காட்டின ஜீவசாட்சி மட்டுமே கூடஸ்தன். கட ஆகாசம் உதாரணத்தை பாருங்க. குடம் தனி. அது பிரிச்சு காட்டுகிற ஆகாசம் தனி. இந்த கட ஆகாசம் போல கூடஸ்தன்.

கூடஸ்தனை விட்டு அந்தக்கரணம் தனியா இருக்கு. ஒரு வேளை கூடஸ்தனில அந்தக்கரணம் சேந்துபோச்சுனா? அப்ப அதுக்கு ஜீவன் ன்னு பெயர். சேந்துபோச்சுனா ன்னு எந்த அர்த்தத்தில சொல்கிறோம்?

காகிதம் இருக்கு. இதுல நீலக்காகிதம் இருக்கலாம். இந்த நீலத்தன்மை காகிதத்துக்கு உள்ளே புகுந்தாச்சு. அந்த காகிதத்தை கருப்பு காகிதம் சிவப்பு காகிதத்திலிருந்து தனியா காட்டுது. இந்த நீலத்தன்மையையும் காகிதத்தையும் பிரிக்கிறது கஷ்டம்.


கூடஸ்தன் + அந்தக்கரணம் = ஜீவன்.

இன்னொரு உதாரணம் பாக்கலாமா?


காகிதம் என்கிற சைதன்யத்தில அந்தக்கரணத்தை தனியா லேமினேட் பண்ணா அது கூடஸ்தன்.

காகிதம் என்கிற சைதன்யத்தில அந்தக்கரணம் நீல வண்ணம் மாதிரி இரண்டறக்கலந்தா அது ஜீவன்.


PG சொரூபத்தில பிரவேசம் செய்யாம தனியா நின்னு பிரிச்சு காட்டினா அப்படி காட்டப்பட்டது உபகிதம். பிரிச்சுக் காட்டுவது உபாதி.
கூடஸ்தன் உபகிதம். அந்தக்கரணம் உபாதி.
சொரூபத்தில பிரவேசம் செய்து சேந்து நின்னா பிரிச்சு காட்டினா அப்படி காட்டப்பட்டது விசிட்டம். காட்டுவது விசேஷனம்.
ஜீவன் விசிட்டம். அந்தக்கரணம் விசேஷனம்.
---


ம்ம்ம்ம்ம்.... இப்ப யோசிச்சா ஒண்ணு புரியும். ஜீவனுக்கும் ஜீவ சாட்சியான கூடஸ்தனுக்கும் இருக்கிற ஒரே பாகுபாடு அந்தக்கரணம் விலகி இருக்கா இல்லை சேர்ந்து இருக்கா என்பதுதான். அந்தகரணம்தான் முக்கியமா மனதுன்னு தெரியுமே! மாயைதான் மனசை உண்டாக்குகிறதும். இந்த மனசு நின்னு போச்சுனா மாயை விலகும். ஜீவனுக்கும் ஜீவ சாட்சியான கூடஸ்தனுக்கும் வேறுபாடு ஒழியும். நிலையான ஜீவ சாட்சியா கூடஸ்தன் மட்டுமே நிக்கும்.


கூடஸ்தன்: சீவன்
இலக்கோண ஆராய்ச்சி இப்ப கொஞ்சம் பாக்கோணோம்.
வாச்சியம்: literal
இலட்சியம் : implied
தத் த்வம் அஸி என்கிறதுலே தத் - ஈசன், த்வம் - நீ = ஜீவன். இது வாச்சிய அர்த்தம். அதான் லிடரல்.
பிரமம், கூடஸ்தன் இது இலட்சிய அர்த்தம். அதாவது சொல்லப்பட்ட சொல் வேற ஒண்ணா இருந்தாலும் உத்தேசிச்சு சொன்னது இதைதான்.

ஈசனுக்கும் சீவனுக்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கிறது போல. எட்டிப்பிடிக்க முடியாது.

ஆனால் கூடஸ்தனுக்கும் பிரம்மத்துக்கும் இருக்கிற தொடர்பு பாலிலே மறைஞ்சு இருக்கிற நெய் போல. அது பால் என்கிற தன்மையை விட்டு நெய்யாக பிரிச்சு பாக்க முடியும். பிரம்மம் என்கிற பாலிலே இருந்து நெய்யை ஒரு ப்ராஸஸால கொண்டு வருவது போல சீவனாகிய நீ கூடஸ்தன் என்று புரிஞ்சு கொண்டு பிரமத்தோட ஐக்கியமாகலாம்.

எது இதை நடக்க விடாம தடுக்குது? அதான் கர்மா. கர்மா என்கிற தளைக்கட்டு- கர்ம பந்தம்.
எதால நடத்த முடியும்? முன்னேயே பாத்த கேட்டல் முதலான ப்ராஸஸால.



Tuesday, March 24, 2009

ஞானம் -மறதி போதல்



63.
புண்ணிய பதிகன் பின்னும் புருடரொன் பதின்மர் தம்மை
எண்ணுநீ தசமனாவை யென்னவே தன்னைக் காணல்
கண்ணினிற் கண்டஞானங் கரைதல்போ வதுநோய்போதல்
திண்ணிய மனதி லையந் தெளிதலா நந்த மாமே

புண்ணிய பதிகன் பின்னும் (மீண்டும்) புருடர் ஒன்பதின்மர் தம்மை எண்ணு; நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல் கண்ணினில் கண்ட ஞானம். (அபரோட்ச ஞானம்) கரைதல் (அழுதல்) போவது நோய் போதல். திண்ணிய (திடமான) மனதில் ஐயம் தெளிதல் ஆநந்தமாமே.

இதுல கவனிக்க வேண்டியது இவனுக்கு புதுசா ஒண்ணும் கிடைக்கலை. அவனோட அறியாமைதான் பிரச்சினை. உண்டான அனர்த்தமெல்லாம் மூடத்தனமான மறதியால வந்தது.

ஒத்தர் கணினியிலே நிறைய படங்கள் சேத்து வெச்சு இருந்தார். ப்ளாக்ல போட ஆசை ஆசையா சேத்தது. ஒரு நாள் குறிப்பிட்ட ஆனை படத்தை தேடினா காணோம். எங்கே சேமிச்சோம்னு நினைவுக்கு வரலை. செர்ச்சில் *.ஜேபெக், *.பிஎம்பி ன்னு தேடித்தேடி பாத்து கிடைக்கலை. கடைசியா பார்மாட் செய்தப்ப போயிடுச்சோன்னு வருத்தப்பட்டார். சில நாட்கள் கழிச்சு வேற எதோ தேடறப்ப எதேச்சையா இது கிடைக்குது. அட! அத பத்திரமா இருக்கனும்ன்னு தனியா ஒரு அடைவில டிஃப் பார்மேட் ல சேமிச்சோம். மறந்தே போயிடுத்து இப்ப கிடைச்சதேன்னு ஒரே சந்தோஷம்!

அது கணினியிலேதான் இருந்தது. காணாம போகலை. ஆனா மறதியால இல்லைன்னு நினைச்சார். மறதி போனதும் மகிழ்ச்சி வந்தது.

இதே போலத்தான் நாமும் நாம் உண்மையில யார் என்கிறதை மறந்து போகிறோம். ஞானம் அடைகிறவங்க புதுசா ஒண்ணையும் அடையலை. அஞ்ஞானம் போனதால நாம் யாருன்னு விளங்கிடும்.


¨ ஹிஹிஹி! படத்தை நானேதான் அங்க சேமிச்சேன். மறந்துட்டேன்!¨ னு அவசி க்கிற மாதிரி ஞானம் வந்தவங்க ¨அட! இதான் நான். இல்லைன்னு நினைச்சது அறியாமைன்னு சிரிப்பாங்க. மேலும் நம்மோட மன மயக்கத்தாலேதானே இந்த நிலையாத பொருளை எல்லாம் - நித்தியமில்லா உலக தொல்லைகளை எல்லாம் நிஜம்ன்னு நம்பினேன்; படாத பாடுபட்டேன். ஆகா! அதே போல இப்பவும் எத்தனைப்பேர் நாம் இத்தனைக்காலம் இருந்தது போல அதே மயக்கத்திலே சிக்கி கஷ்டப்படுறாங்க! இது பெரிய வேடிக்கையே¨ ன்னு நினைப்பாங்க.

தூங்கி, கெட்ட கனவு கண்டவன் அலறி எழுந்து ¨ச்சே! கனவுதானா¨ ன்னு அ.வ.சிரிச்சுப்பானோ அதே போல ஞானியும் உலகை பொய் தோற்றம் ன்னு புரிஞ்சு அதனால் பாதிப்பு இல்லாம இருப்பார்.

ம்ம்ம்ம்ம்..அங்கே சிலர் ஒரு கேள்வி கேக்கிறது புரியுது!

கனவு கண்டபோது ரொம்பவே உண்மை போல இருந்தது ஒத்துக்கறேன். ஆனா தூக்கத்திலேந்து எழுந்த பிறகு அது கனவு புரிஞ்சுடும். அப்ப அந்த கனவுக்காட்சிகள் தென் படாதே! ஆனா உலகம் அப்படி இல்லையே! கனவு போல் உலகம்ன்னு புரிஞ்சாக்கூட அந்த உலகம் தென்படாம இருக்காதே. அப்படித்தானே சொல்கிறாங்க? இல்லைனா எந்த ஞானியும் இந்த உலகத்திலே நடமாட முடியாதே?
அருமையான கேள்விங்க. எப்படி பாராட்டறதுன்னே புரியலை! :-))

நல்ல வெயில் காலம் வந்தாச்சு. ரோட்டிலே போறோம். அட ரோட்டிலே தண்ணி ன்னு நினைக்கறோம். அட இல்லை இதுதான் கானல் நீர் ன்னு தெளிகிறோம். அப்ப அந்த பொய்யான கானல்நீர் தெரியுதா இல்லையா? தெரியும். ஆனாலும் அதே நேரம் அது பொய் ன்னும் தெரியும்!
அப்படி ஞானிக்கு இந்த உலகங்களும் தெரியும். அதே நேரம் அதெல்லாம் பொய் ன்னும் தெரியும்! அதனால நடக்கிற விஷயங்களேந்து விலகி நின்னு பாக்க முடியும்.
---

சீடன் இப்ப டக்குன்னு பிடிச்சுகிட்டான்.
¨சாமி! பத்தாவது ஆளை பாருன்னு வழிப்போக்கன் காட்டி துக்கம் நிவிருத்தி பண்ணினா மாதிரி என்னை - என் நிஜ ரூபத்த - எனக்கு காட்டி என் துக்கத்த போக்குங்களேன்!¨ அப்படிங்கறான்.

பையன் ரெடியாயிட்டான்னு உணர்ந்து குரு அவனுக்கு மகா வாக்கிய உபதேசம் செய்யப்போறார்.
ஸாம வேத மஹா வாக்கியமான தத் துவம் அஸி என்பதை உபதேசிக்கிறார்.
தத் என்பது பிரம்மத்தை குறிக்கிறது.
த்வம் என்கிறது நீ. இந்த இடத்திலே கூடஸ்தனை குறிக்குது.
இந்த ரெண்டுத்தையும் அஸி என்கிறது ஒண்ணா சேக்குது.
அது நீயாக இருக்கிறாய்!

64.
தன்னை தரிசிப்பிக்க வேண்டுமென்று சீடன் வினவியதற்கு விடை:

தசபுமான் றனைக்கண்டாற்போற் சற்குரு மூர்த்தியேயென்
நிசவடிவினை யான்காண நீர்காட்டல் வேண்டுமென்றான்
சுசிபெறு மிலட்சியார்த்தந் துவம்பதந் தற்பதங்கட்
கசிபத வைக்கியஞ் செய்யுமது செயுமுண்மை கேளாய்

தசபுமான்தனை கண்டால் போல், சற்குரு மூர்த்தியே, என் நிச வடிவினை யான் காண நீர் காட்டல் வேண்டுமென்றான். "துவம்" பதம் "தத்" பதம் (ஸாம வேத மஹா வாக்கியமான த்வம் (நீ) தத் (அது) பதங்களின்) சுசி பெறும் இலட்சியார்த்தங்கட்கு (சுத்தம் பொருந்திய இலட்சிய அர்த்தங்களான கூடஸ்த பிரமங்கட்கு) அசி பதம் (இருக்கிறாய் என்ற சொல்) ஐக்கியம் செய்யும். (ஐக்கிய சொரூபத்தை இலட்சணையால் போதிக்கும்) அது செயும் உண்மை (அவ்வாக்கியம் அப்படி போதிக்கும் உண்மையை) கேளாய்.



Monday, March 23, 2009

பத்தாவது ஆள் - கதை




60.
தத்துவ விசாரஞ் செய்து சகலசந் தேகமும் போய்
அத்துவி தந்தா னாதலப ரோட்ச ஞானமாகும்
கர்த்தனாஞ் சீவ பேதங் கழிவதே துக்கம் போகல்
முத்தனா யெல்லாஞ் செய்து முடித்தா னந்தமாமே

இதை விளக்க ஒரு கதை வருது.

பத்து பேர் ஒண்ணா ஜாலியா பேசிகிட்டு போறாங்க. வழில ஒரு ஆறு வருது. அதை கடக்க வழியில்லை. ஆத்திலேயோ தண்ணி வேகமா நிறைய போகுது. கடந்து போக கொஞ்சம் பயமானாலும் வேற வழியில்லை. சரின்னு மெதுவா தண்ணில இறங்கி ஆறை தாண்டறாங்க. அக்கரைக்கு போனதும் அத்தனை பேரும் பத்திரமா கடந்தாச்சான்னு சந்தேகம். அவர்கள்ள ஒத்தன் எவ்வளோ பேர் இருக்கோம் ன்னு எண்ணிப்பாக்கிறான். ¨அட! ஒன்பதுதானே இருக்கு? ஒரு ஆளை காணோம்¨ ன்னு பயம் வந்தாச்சு. ¨அட! உனக்கு எண்ணவே தெரியாதேடா! நாண் எண்ணறேன்¨ ன்னு இன்னொருத்தன் எண்ணிப்பாக்கிறான். அவனுக்கும் ஒன்பதுதான் எண்ணிக்கை வருது. ¨யாருடா காணோம்?¨ ன்னு கேட்டா எல்லாரும் முழிக்கறாங்க. எல்லாரும் அழ ஆரம்பிச்சுடறாங்க.

அப்ப அங்க ஒரு வழிப்போக்கன் வரான். ¨என்னப்பா எல்லாரும் அழறிங்க? என்ன விஷயம்?¨ ன்னு கேட்டான். ¨ஐயா நாங்க பத்து பேர் ஆத்தை கடந்தோம். ஒத்தனை காணோம். யாருன்னும் தெரியலை¨ ன்னாங்க.

வழிப்போக்கன் எண்ணிப்பாத்தான். பத்து பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சது. என்ன விஷயம்ன்னு புரிஞ்சுடுத்து. ¨நீங்க பத்து பேர் இருக்கீங்கடா¨ன்னான். பசங்களுக்கும் இவர் சொல்கிறது சரியாதான் இருக்கும்ன்னு தோணித்து. ¨ஏண்டா! அவங்க அவங்க எண்ணினீங்க. தன்னை எண்ணாம மத்தவங்களை எண்ணினா எப்படிடா பத்து வரும்?¨ ன்னு கேட்டுட்டு போயிட்டான். ¨அட ஆமா! நம்பளையே எண்ணிக்காம விட்டுட்டோமே¨ ன்னு எல்லாரும் அ.வ.சி பண்ணிட்டு போய் சேந்தாங்க.

61.
இதுநினக் கறியும்வண்ண மிப்படி யொருதிட்டாந்தம்
புதுமையாங் கதைகேள் பத்துப்புருடரோ ராற்றை நீந்தி
உதகதீ ரத்திலேறி யொருவனொன் பதுபே ரெண்ணி
அதனொடு தசமன்றானென் றறியாமன் மயங்கி நின்றான்

இது நினக்கு (உனக்கு) அறியும் வண்ணம் இப்படி ஒரு திட்டாந்தம் புதுமையாம் கதைகேள். பத்து புருடர் ஓர் ஆற்றை நீந்தி உதக (நீர் அதாவது நதி) தீரத்தில் ஏறி, [அவற்றில்] ஒருவன் ஒன்பது பேர் எண்ணி அதனொடு தசமன் (பத்தாவது நபர்) தான் என்று அறியாமல் மயங்கி நின்றான்.

ஆத்தை தாண்டினதும் ஆளுங்களை எண்ணின ஆசாமி ஒன்பது பேரை எண்ணிட்டு பத்தாவதா தன்னை எண்ணாதது அஞ்ஞானம்.
பத்தாவது ஆசாமி காணோம் ன்னு தீர்மானிச்சது பிறியாத (அபரோட்ச ஞானம் வரும் வரை நீங்காத) ஆவரணமாகும்.
காணோமேன்னு துக்கத்தில அழுகிறது விட்சேபம்.
வழிப்போக்கன் பத்தாவது நபர் உண்டு, நிற்கின்றான் ன்னு சொன்னதை உண்மையா இருக்கும்னு எண்ணுவது பரோட்ச ஞானம்.
வழிப்போக்கன் ¨திருப்பி எண்ணிப்பாருப்பா ஆளுங்க ஒன்பது பேர் இருக்கீங்க. நீதான் பத்தாவது ஆள்¨ ன்னு சொல்லவே, எண்ணிப்பாத்து தன்னைக் காணல் கண்ணினில் கண்ட ஞானம். (அபரோட்ச ஞானம்).
ஒத்தன் இறந்துட்டான்னு இருந்த பயம் போகிறது - அழுதல் போவது நோய் போதல்.
மனசுல சந்தேகம் போய் எல்லாரும் இருக்கோம் என்கிற திடமான நிம்மதி - தெளிதல் - ஆநந்தமாமே.

62.
அறியாத மயலஞ் ஞான மவனில்லை காணோ மென்றல்
பிறியாவா வரணமாகும் பீழைகொண் டழல்விட் சேபம்
நெறியாளன் றசம ணுடு நிற்கின்றா னென்ற சொல்லைக்
குறியாக வெண்ணிநெஞ்சிற் கொள்வது பரோட்ச ஞானம்

அறியாத மயல் (9 பேரை கண்டும் பிராந்தியினால் தன்னை பத்தாவதாக அறியாத மயக்கம்) அஞ்ஞானம். அவனில்லை காணோம் என்றல் பிறியாத (அபரோட்ச ஞானம் வரும் வரை நீங்காத) ஆவரணமாகும். பீழை (துக்கம்) கொண்டு அழல் விட்சேபம். நெறியாளன் (வழிப்போக்கன்) தசமன் (பத்தாவது நபர்) உண்டு, நிற்கின்றான் என்ற சொல்லை குறியாக (உண்மையாக) எண்ணி நெஞ்சில் கொள்வது பரோட்ச ஞானம்.

63.
புண்ணிய பதிகன் பின்னும் புருடரொன் பதின்மர் தம்மை
எண்ணுநீ தசமனாவை யென்னவே தன்னைக் காணல்
கண்ணினிற் கண்டஞானங் கரைதல்போ வதுநோய்போதல்
திண்ணிய மனதி லையந் தெளிதலா நந்த மாமே

புண்ணிய பதிகன் பின்னும் (மீண்டும்) புருடர் ஒன்பதின்மர் தம்மை எண்ணு; நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல் கண்ணினில் கண்ட ஞானம். (அபரோட்ச ஞானம்) கரைதல் (அழுதல்) போவது நோய் போதல். திண்ணிய (திடமான) மனதில் ஐயம் தெளிதல் ஆநந்தமாமே.


Friday, March 20, 2009

ஏழு அவஸ்தைகள்



இப்ப மாயையால சீவன்களுக்கு ஏற்படக்கூடிய இருப்பு நிலைகளை வரிசையா சொல்கிறார்.

ஏழு அவஸ்தைகள் உண்டாகுமாம். என்ன அவஸ்தைப்பா இது?
அதான் இருப்பு நிலைன்னு முன்னாலேயே சொன்னேன். படிக்க படிக்க புரியும்.

அந்த ஏழு அவத்தை:
1. அஞ்ஞானம்,
2.மூடல் (ஆவரணம்),
3.முளைத்தல் (விட்சேபம்), இது வரை இதெல்லாம் பாத்தாச்சு.
4.காணாத (பரோட்ச) ஞானம். ஞானம் இருக்கு; ஆனா தெளிவா இல்லை.
5.சந்ததம் கண்ட ஞானம் - தெளிவான ஞானம்.
6.தழல் கெடல் (துக்க நிவர்த்தி), தழல் கெடல். ஆஹா! என்ன வார்த்தை பிரயோகம் பாருங்க! துக்கத்தை தழல் - நெருப்பு என்கிறார்.
7.குளிர்மையாதல் (தடையற்ற ஆநந்தம்) நெருப்பு குளிர்ந்து போச்சு. அதாவது நீங்கிவிட்டது. துக்கம் போனால் நம்மோட இயல்பான நிலையான அனந்தம் வெளிப்படும்.

58.
ஜீவாத்மாக்களுக்கு இவ்விரு விதமான மாயையால் சப்தாவத்தைகள் வரும் வழி, அவற்றின் பெயர்கள்:

இந்தமா யையினாற் சீவர்க் கேழவத்தைக ளுண்டாகும்
அந்தவே ழவத்தை தம்மையடைவினின் மொழியக்கேளாய்
முந்தவஞ் ஞானமூடன் முளைத்தல் காணாதஞானம்
சந்ததங் கண்டஞானந் தழல்கெடல் குளிர்மையாதல்.

இந்த மாயையினால் சீவர்க்கு ஏழு அவத்தைகள் உண்டாகும். அந்த ஏழு அவத்தை தம்மை அடைவினில் (கிரமமாக) மொழியக் கேளாய். முந்த (முதலில்) அஞ்ஞானம், மூடல் (ஆவரணம்), முளைத்தல் (விட்சேபம்), காணாத (பரோட்ச) ஞானம், சந்ததம் கண்ட ஞானம், தழல் கெடல் (துக்க நிவர்த்தி), குளிர்மையாதல் (தடையற்ற ஆநந்தம்)

நீங்க பாட்டுக்கு லிஸ்ட் போட்டா? என்ன அதெல்லாம்ன்னு சொல்லுங்கன்னா:

1.பிரமமாம் தனை மறந்த பேதமையே அஞ்ஞானம்.
2.பரன் (பிரம்மம்) இல்லை, காணோம் என்று பகர்தல் ஆவரண மூடல்.
3.நரன், ஒரு கருத்தால் சீவன் நான் என முளைத்தல் (நான் மானுடன், கர்மா செய்பவன், பலன்களை புசிப்பவன் என்ற எண்ணத்தால் சீவன் என உண்டாதல்) தோற்றம் (விட்சேபமாம்).
4.குரவன் (குரு) வாக்கியத்தால் [பரமாத்மாவான] தன்னை [உண்டு என] குறிக்கொளல் (அறிதல்) [பிரமமில்லை எனும் அசத்தான ஆவரணத்தை நீக்கும்] பரோட்ச ஞானம்.

59. அந்த அவத்தைகளின் தன்மை:

பிரமமாந் தனைமறந்த பேதமையே யஞ்ஞானம்
பரனிலை காணோமென்று பகர்தலா வரணமூடல்
நரனொரு கருத்தாற்சீவ னானென முளைத்தறோற்றம்
குரவன்வாக் கியத்தாற்றன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம்.

மேலே?
5.தத்துவ விசாரம் செய்து சகல சந்தேகமும் போய் அத்துவிதம் (அத்வைத, ஐக்கிய சொரூபம்) தான் ஆதல் அபரோட்ச ஞானமாகும். பிரமம் இல்லை என்னும் ஆவரணத்தை நீக்கும் பிரத்தியட்ச ஞானமாகும்.
6.கர்த்தனாம் சீவ பேதம் (கூடஸ்தனிடம் ஆரோபித்த நான் செய்பவன் என்ற சீவ பாவனை) கழிவதே துக்கம் போகல்.
7.முத்தனாய் எல்லாம் செய்து முடித்தது (சகல பந்தங்களில் இருந்தும் விடுபட்டது) ஆனந்தமாமே. (தடையற்ற ஆனந்தமாம்.)


Thursday, March 19, 2009

மாயையில் இருந்து வருவது மாயை இல்லையா?




சந்தேகத்துக்கு மேலே சந்தேகம் எழுகிறது சீடனுக்கு. அதுதானே நல்ல சீடன் லட்சணம்? சந்தேகமே இல்லைனா ஒண்ணுமே புரியலையோன்னு சொல்கிறவருக்கு சந்தேகம் வந்துடும். :-))
குரு புத்திசாலி! அதனாலே சீடனுக்கு வர சந்தேகத்தை அவன் வாய்விட்டு கேக்கிறதுக்கு முன்னாலேயே தானே சொல்லி விடையும் சொல்கிறார். கேள்வி கேக்க கூச்சப்படுவான்னு சந்தேகமோ என்னமோ!

எதுலேந்து ஒண்ணு வந்ததோ அதோட குணம்தானே புதுசா தோன்றினதுக்கும் அடிப்படையிலே இருக்கணும்? கசப்பு பாகல் காயிலேந்து இனிப்பா ஒண்ணும் செய்ய முடியாதே? சர்க்கரை போட்டு காரமா ஒண்ணும் செய்ய முடியாதே?
சிப்பில வெள்ளியை பாக்கிறது ஆரோபம், அது மித்தை (மாயை) என்கிறீங்க! சரி. அது போல பிரம்மத்தில விட்சேப சக்தியால ஆரோபமாகி இந்த உலகம் எல்லாம் இருக்கு. இது மித்தைன்னு சொல்கிறீங்க; ஒத்துக்கிறேன். ஆனா அப்படினா அதே விட்சேப சக்தியால வந்த குரு, சாத்திரம் இதன் உதவியால கிடக்கிற மோட்சம் எல்லாமே மாயையாதானே இருக்கணும்?

செம லாஜிக்!

குரு சொல்கிறார்: அப்பனே அப்படி நீ நினைச்சா, இப்படி யோசிச்சு பாரு. ஒரு கனவு காண்கிறாய். அது மாயைதான் ன்னு கனவு கலைஞ்சதுமே நமக்கே தெரியுது.
கனவுல ஒரு சிங்கம் வந்தது. அது பாஞ்சு வந்து உன்னை தாக்கறா மாதிரி கனவு காண்கிறாய். அப்ப என்ன ஆகும்? கனவு கலைஞ்சுடும். திடுக்குன்னு முழிச்சுகிட்டு ¨ அப்பாடா, கண்டது கனவுதானா¨ அப்படின்னு நினைப்பாய். கண்டது கனவுதான். கனவில பாத்த சிங்கம் மாயைதான். ஆனா விளைவு என்ன ஆச்சுன்னு பாத்தியா? விழிப்பு வந்துடுத்து. கனவான சின்ன மாயை விழிப்பை கொடுத்தது.
அதே போல குரு, சாத்திரங்கள் போல  ஞான சாதனமா இருக்கிற விஷயங்கள் உண்மையிலே மாயைதான் ஆனாலும் அவை நல்லதே பண்ணும். அவற்றோட உதவியால கிடைக்கிற முத்தி -நிர்வாண நிலை மாயை இல்லை; உண்மையே!

56.
மித்தையான விட்சேபத்தால் வெளிப்படும் முத்தியும் மித்தையாம் எனில்:

சுத்தியில் வெள்ளிபோலத் தோன்றிய தோற்றமான
சத்தியும் பொய்யேயென்றாற் சத்திசா தனமாவந்த
முத்தியும் பொய்யேமென்னின் மோகநித்திரை விலங்கால்
நித்திரை தெளியுமாபோ னிருவாண நிலைமெய்யாமே

சுத்தியில் (சிப்பியில் ஆரோபமான) வெள்ளி போல, தோன்றிய தோற்றமான சத்தியும் (பிரமத்தில் ஆரோபமான விட்சேப சக்தியும்) பொய்யே என்றால் சத்தி சாதனமாக வந்த முத்தியும் (விட்சேப சக்தியால் தோன்றிய குரு, சாஸ்திரம் முதலான சாதனங்களால் கிடைத்த மோட்சமும்) பொய்யே என்னின், மோக நித்திரை விலங்கால் (சிங்கத்தால்) நித்திரை தெளியுமா போல் (தூக்கம் நீங்கி விழிப்பு ஏற்படுவது போல) நிருவாண நிலை மெய்யாமே.
+++++++++++++++

 அப்பப்ப ஆஸ்பத்திரிக்கு விஷம் குடிச்சுட்டு  கேஸ் வரும் இல்லையா? பூச்சி மருந்து, குவளைக்காயை அரைச்சு குடிக்கிறது... நிறைய இருக்கு. அதுக்கு என்னடா மாத்து மருந்துன்னு பாத்தா அதுவே ஒரு விஷமா இருக்கும். ஏற்கெனவே விஷம் இருக்கிறதால இதனால் விஷ விளைவு வராது. அதயே தனியா சாப்பிட்டா ஆள் காலி!

அதே போல இரும்பு துண்டை இன்னொரு இரும்பு துண்டால்தான் வெட்டுவாங்க; இல்லை அறுப்பாங்க. சோப்பு இல்லாத முன் காலத்திலே துணில இருக்கிற அழுக்கை உவர் மண் ன்னு ஒரு மண்ணை போட்டு தேச்சு எடுப்பாங்க.

இதே போல மாயையை மாயையாலேயே நீக்கலாம்.

சுடு காட்டுக்கு போய் பாத்தா சவத்தை எரிக்கிறப்ப ஒரு தடி வெச்சு இருப்பாங்க. நெருப்பு சுடுறப்ப தசைகள் எல்லாம் ப்ரோடீன் இறுகி பட் பட்டுன்னு வளையும். அப்ப கை கால் உதறுகிற மாதிரி இருக்கும். இதனால்தான் திரும்பி பாக்காம போங்கன்னு விரட்டி விடுவாங்க. அறியாமையிலே உசிர் இன்னும் போகலையோன்னு நினைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா? இந்த மாதிரி கை கால் உதறுகிற போது சிதை அடுக்கி அங்கேயே மீதம் இருக்கிற ஒரு சவுக்கு கட்டையை எடுத்து பட் பட்ன்னு உதறுகிற கை கால் மேலே போட்டு சிதையிலேயே தள்ளுவாங்க. நெருப்பு அணைகிற மாதிரி இருந்தா இந்த கட்டையாலேயே கிளறிவிடுவாங்க. ஒவ்வொரு முறை கிளறுகிற போதும் அதுவும் கொஞ்சம் எரியும் இல்லையா? கடைசியிலே எரியாம மீதி இருக்கிறதையும் எறியாம சிதையிலே போட்டுடுவாங்க. அதுவும் முழுக்க எரிஞ்சு போகும்.

மாயையிலும் நல்ல மாயை (நல்லது செய்கிற மாயை) கெட்ட மாயைன்னு வகைப்படுத்தி பாக்கலாம். இந்த நல்ல மாயை மோக்ஷத்துக்கு சாதனமானது. மோக்ஷத்துக்கு இழுத்து போய் ஞானம் வருகிற போதும் இதுவும் ¨சவம் சுடு தடி போல¨ மறைஞ்சு போகும்!


57.
இம்பரி னஞ்சைநஞ்சா லிரும்பினை யிரும்பா லெய்யும்
அம்பினை அம்பாற்பற்று மழுக்கினையழுக்கான் மாய்ப்பர்
வம்பியன் மாயைதன்னை மாயையான் மாய்ப்பர் பின்னைத்
தம்பமா மதுவுங்கூடச் சவஞ்சுடுதடி போற்போமே

இம்பரில் (இவ்வுலகில்) நஞ்சை நஞ்சால் (அதன் பிரதி கூலமான நச்சாலும்) இரும்பினை இரும்பால், (அதன் பிரதி கூலமான இரும்பு அரத்தாலும்), எய்யும் அம்பினை அம்பால், [துணியில்] பற்றும் அழுக்கினை அழுக்கால் (உவர் மண்ணாலும்) மாய்ப்பர். வம்பியல் (நழுவும் சுபாவமுள்ள) மாயைதன்னை மாயையால் மாய்ப்பர். பின்னை தம்பமாம் அதுவும் கூடச் சவஞ் சுடு தடி போல் போமே.

தாத்பர்யம்: தினமும் குறைந்து வருகின்ற படியால் நழுவுதல் சுபாவமான அஞ்ஞானமும் மறைப்பாயும், பெண்ணாதி, பொன்னாதி, மண்ணாதி, அன்னாதியாயும் இருக்கும் அசுத்த மாயையைச் சிரவணாதி சுத்த மாயை கெடுத்து பின் சவத்தை சுட பயன்படுத்திய தடியை முடிவில் அத்தீயிலேயே போட்டு எரிப்பது போல தானும் நீங்கும்.


Wednesday, March 18, 2009

ஆவரணம் விட்சேபத்தை விட ஏன் மோசம்?





விட்சேப சக்தி நம்மை மாதிரி மக்களுக்கு வேற மாதிரி உலகத்தை காட்டி பிரச்சினை பண்ணுகிறது உண்மைதான். வித விதமா தெரிகிற உலகத்தை பாத்து மயங்கி போய் அது மேல ஆசை வந்து வலுப்பட்டு....... ஆனா அதே சமயம் இதே விட்சேப சக்திதான் நல்லவங்கண்ணு காட்டி அவங்களோட சத்சங்கத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை சீரமைச்சுக்க ஒரு வழியும் காட்டுது.சாத்திர நூல்களை காட்டுது. குருவை காட்டுது. இந்த உலகத்தில சாரம் இல்லை. இது நீ இல்லை. உன்னை புரிஞ்சுக்கன்னு சொல்லி புரிஞ்சுக்க வழிகளையும் காட்டுறது இதே விட்சேப சக்தி தான்.
இப்படி ஆன்மீக நாட்டம் வந்தவங்களுக்கு விட்சேப சக்தி நல்லதே செய்யும். மத்தவங்களுக்கு கெடுதல் செய்யும்.
ஆனா ஆவரணமோ எல்லாருக்குமே கெடுதல்தான் பண்ணும்.

54.
விட்சேப சக்தி ஆவரண சக்திகளின் நன்மை தீமை கூறல்:
தோற்றமாஞ் சத்திதானுந் துன்பமாம் பவமானாலும்
ஆற்றலான் முத்திசேர்வார்க் கநுகூல மாகுங்காணீ
ஊற்றமாம் பகற் காலம்போ லுபகார நிசியினுண்டோ
மாற்றமென் றுரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல்லாதே

தோற்றமாம் சத்திதானும் (விட்சேப சக்தியும்) [அஞ்ஞானிகளுக்கு] துன்பமாம் பவமானாலும் (சம்சாரத்தை கொடுப்பதானாலும்) ஆற்றலான் [சிரவணாதி முயற்சியால்] முத்திசேர்வார்க்கு (முத்தியடைய விரும்பு முமூட்சுகளுக்கு) அநுகூலமாகும் காண் நீ. ஊற்றமாம் பகற் காலம் போல் (அஞ்ஞானிகள், முமூட்சுகள் இருவருக்கும் நித்திரை சோம்பல் முதலியவற்றைப் போக்கும் பகல் வேளை போல்) உபகாரம் நிசியில் (இரவில்) உண்டோ? மாற்றம் (வேறு பதில்) என் உரைப்பேன் மைந்தா? மறைப்பது (மறைக்கும் ஆவரண சக்தி) மிகப்பொல்லாதே.


தாத்பர்யம்: விட்சேப சக்தி அஞ்ஞானிகளுக்கு துன்பமும் முமூட்சுகளுக்கு மோட்ச இன்பமும், ஆவரண சக்தி இருவருக்கும் துன்பத்தையும் தரும்.

தினமும் தூங்குக்கிறோம். சாப்பிடாம கூட இருந்துடலாம். ஆனா மனுஷனால தூங்காம இருக்க முடியாது. இப்படி தூங்குகிறப்ப நாம் பாக்கிற இந்த உலகம் எல்லாமே காணாமத்தான் போகுது. சுழுத்தில கனவு கூட இல்லை. அதாவது விட்சேப சக்தியோட விளைவு அத்தனையும் காணாம போயிடும்.
ஆனா இதனாலா யாருக்கான முக்தி கிடைச்சு இருக்கா என்ன?
போதிய அளவு தூங்கினதும் நம் வாசனைகள் நம்மை எழுப்ப திருப்பி இந்த உலகத்துக்கு வரோம்.
ஆக விட்சேபம் ஒழியறதுனால நமக்கு ஒரு பிரயோசனமும் இல்லை- மனசு ரிஃப்ரெஷ் ஆகிறதை தவிர.
மாறா இந்த ஆவரண சக்தி இருக்கிற வரை மோட்சம் கிட்டவே கிட்டாது. ஆவரணம் போனா உடனே மோட்சம்தான்!

55.
அநுபவத்தால் ஆவரணத்தின் கொடுமை காட்டல்:
சுழுத்தியிற் பிரளயத்திற் றோற்றமாஞ் சகங்கண்மாண்டும்
அழுத்திய பவம் போய்முத்தி யடைவரொரு வருண்டோ
முழுத்தவிட் சேபமெல்லா முத்தியிற் கூட்டுகிற்கும்
கொழுத்த வாவரணமுத்தி கூடாமற் கெடுத்தகேடே

சுழுத்தியில் (தினப்பிரளயத்தில்) பிரளயத்தில் (பிரமப் பிரளயத்தில்) தோற்றமாம் சகங்கள் மாண்டும் (விட்சேபமான சகங்கள் நசிந்து) [துன்பத்தில்] அழுத்திய பவம் (பிறவி) போய் முத்தி அடைவர் ஒருவர் உண்டோ? (எவருமில்லை) [ஆகவே,] முழுத்த விட்சேபம் எல்லாம் (உடல் முதலான விட்சேப சக்தியின் விளைவெல்லாம்) முத்தியிற் கூட்டுகிற்கும். (பரம சுகம் தர வல்லது). கொழுத்த (பலமான) ஆவரணம் முத்தி கூடாமற் கெடுத்தகேடே (முக்தி அடையாமல் கெடுதல் மட்டும் செய்யும்)

தாத்பர்யம்: அறிவு விளங்கும் விட்சேபம் முத்தியின்பத்துக்கு சாதனமாகும். அறிவு விளங்காத ஆவரணம் பிறவி துன்பத்துக்கு காரணமாகும். இது அநுபவம்.


Tuesday, March 17, 2009

மேலும் ஆவரணம் பற்றி




52.
இப்ப மேட்டருக்கு வரார் குரு.

அப்பனே உருண்டு திரண்டு இருக்கிறது தெரியுது ஆனா தேங்கா நாரால பண்ண கயிறா இல்லை, உயிர் இருக்கற பாம்பான்னு தெரியாதது போல ¨நான் இருக்கேன்¨ ன்னு தெரியும். அது எல்லாருக்குமே சர்வ சாதாரணமா தெரியும். ஆனா அந்த நான் யார்? தான் பிரம்மம் என்கிறது தெரியாம தன்னை வேறயா - சீவன் ன்னு நினைச்சுக்கிறது ஆவரணத்தாலே என்கிறார்!

ஆதார அதிட்டானத்தில் ஆவரண சக்தி ஆதாரத்தை தெரிய ஒட்டாது மறைக்குமே தவிர ஆதாரத்தையே மறைக்காது என திருஷ்டாந்தம் மூலம் தெரிவித்தல்:

சகமதி லிதுவென் சுட்டாஞ் சமானந்தான் மறைந்தி டாது
மிகவிது கயிறா மென்னும் விசேடந்தான் மறைந்து போகும்
அகமெனுஞ் சமானந் தன்னை யஞ்ஞான மறைத்திடாது
பகர்விசே டமதாஞ் சீவன் பரமெனு மதனை மூடும்.

சகமதில் (உலகில்) இதுவென்று சுட்டால் ( [இருட்டில் கயிறை பாம்பு என] காட்டும்போது) சமானந்தான் மறைந்திடாது (சாமானிய ரூபம் இல்லாது போகாது). இது கயிறாம் என்னும் விசேடந்தான் (விசேட ரூபமே) மறைந்து போகும். அகம் எனும் (நான் இருக்கிறேன் என்ற சத்தான) சமானந் தன்னை (சாமான்யமான ஆதாரமான பிரமத்தை) [ஆவரண சக்தியான] அஞ்ஞானம் மறைத்திடாது. பகர் (வெளி) விசேடமதாம் சீவன் பரம் எனும் அதனை (அதிட்டானத்தை) மூடும்.

சீடன் விடாம யோசிக்கிறது குருவுக்கு தெரியுது. சீடன் மனசில ஓடறதை உணர்ந்து மேலே சொல்கிறார்:

திட்டினா விட்சேப சக்தியை தானே திட்டணும்? அதுதானே சும்மா கிடந்த பிரம்மத்தின் தமஸ் பகுதியை நாம் பாக்கிற இத்தனை விஷயங்களா காட்டி இது வேற ன்னு தோண வெச்சது? பிரம்ம நிலை மட்டுமே இருந்து வேறு ஒண்ணும் இல்லைனா இப்படி குழப்பம் வந்து இருக்காதே? நீங்க பாட்டுக்கு ஆவரணம்தான் மறைச்சதுன்னு குத்தம் சொல்லறீங்களே! விட்சேப சக்தி பிரச்சினை பண்ணலியா? இப்படி நினைக்கிறாய் இல்லையா? கேளு!

53.
ஆத்ம ஞானத்தை விட்சேப சக்தியானது அன்னமய கோசம் முதலியனவாகத் தோன்றி மறைத்ததே அன்றி ஆவரணமெங்கே மறைத்தது?
கேவல நிலைதோன் றாமற் கெடுத்தது பஞ்ச கோசம்
சீவனுஞ் சகத்து மாகிச் செனித்தவிட்சேப மன்றோ
ஆவர ணந்தா னேபா ழனர்தமென் றுரைத்த தேதோ
மேவருங் குருவேயென்று வினாவிடின் மகனே கேளாய்

பஞ்சகோசம் சீவனும் சகத்தும் ஆகி செனித்த (உண்டாகிய) விட்சேபம் [சக்தி] அன்றோ கேவல நிலை (பிரம ஆன்ம ஐக்கிய நிலை) தோன்றாமல் கெடுத்தது.
ஆவரணந்தானே (ஆவரண சக்திதானே) பாழ் [என்றும்] அனர்தம் [என்றும்] உரைத்தது (செய்தது) ஏதோ? (என்ன காரணத்தாலோ?) மேவரும் (கிடைத்தற்கரிய) குருவே என்று வினாவிடின், மகனே கேளாய்.


ஆரோபம் (ஆவரணம்- 2)




இப்படி ஆவரணத்தைப்பத்தி சொன்னதும் சீடனுக்கு ஒரு சந்தேகம் வருது.
ஆரோபம் எப்போ வரும்?
ஒரு விஷயம் முதல்ல இருக்கணும். இது ஆதாரம்.
இது மேலே இதோட உண்மை சொரூபம் தெரியாம ஒரு மறைப்பு இருக்கணும். இது ஆரோபம்.

ஆதாரமே இல்லைனா ஆரோபம் வர வாய்ப்பு இல்லையே! ஆதாரம் இல்லாம வேற எது மேலே வரும்?
ஆதாரம் அப்படியே இருக்குன்னா ஆரோபம் இல்லையே? ஏன்னா அதான் ஆதாரத்தை பாக்கிறோமே!
கயிறு இல்லைனா பாம்புன்னு நினைக்க என்ன அங்கே இருக்கு? கயிறு இருக்குன்னா பாம்புன்னு தோணாதே?
சீடன் கேட்கிறான் ¨எப்படி பாத்தாலும் உதைக்கிறதே? ஆதாரம் மறைபடும்போதும் மறைபடாதபோதும் ஆரோபம் தோன்ற வகையில்லையே?¨

நல்லாதானே யோசிக்கிறார்!
ம்ம்ம்ம்! குரு சாமான்யப்பட்டவரா? அதுக்கும் பதில் வெச்சு இருக்கார்.

ஆதாரம் ரெண்டு வகைப்பா. சமம், விசேடம் ன்னு.

எல்லா இடத்திலேயும் எப்பவும் இருக்கிறது சாமான்ய ஆதாரம்.
குறைந்த காலம் சில இடங்களிலே இருக்கிறது விசேஷ ஆதாரம்.

உருண்டு திரண்டு நெளி நெளியா ஏதோ இருக்கறது உண்மை. அரை குறை இருட்டோ/ வெளிச்சமோ இதை பாக்கிறோம். இது சாமான்ய ஆதாரம். இதை கயிறுன்னு நாம சொல்கிறோமே இது விசேஷ ஆதாரம். உருண்டு திரண்டு நெளி நெளியா இருக்கிறதும் இல்லாம கூடுதலா இருக்கிற சில விஷயத்தை வெச்சு - இது நகரலை, தேங்காநார்ல செஞ்ச மாதிரி இருக்கு இப்படி- இது கயிறுன்னு முடிவு செய்யறோம் இல்லையா? இது விசேஷ பாகம்.

அரை குறை வெளிச்சத்திலே நாம அதை நகருது போல இருக்கே, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு சத்தம் கேட்டாப்பல இருக்கே ன்னு சில கூடுதல் விஷயங்களை ஏத்தி இது பாம்பு ன்னு நினைக்கிறோம்.
ஆக விசேஷமா ஏத்தி பாத்ததுதான் மாறித்தே தவிர சாமான்ய பாகம் மாறலை! அதனால ஆதாரம் மறையாது. வேறா பார்க்கப்படும்.

51.
பேதத்தை மறைக்குமென்றதை சீடன் ஆதாரத்தை மறைக்கும் எனக்கருதி வினாவுதல்:

ஆதார மறைந்து போனா லாரோப மெங்கே தோன்றும்
ஆதார மறையா தாகி லாரோப மிலையே யென்றால்
ஆதாரஞ் சமம் விசேட மாமென விரண்டு கூறாம்
ஆதாரஞ் சமமா மெங்கு மாரோபம் விசேடமாமே

[காட்டு இருளில் கயிறு போன்ற பிரமமான] ஆதாரம் மறைந்து போனால் [பிராதி பாசிகமான பாம்பு போன்ற சீவேஸ்வர ஜகத்தின்] ஆரோபம் எங்கே தோன்றும்? [வெய்யிலில் கயிறு போன்ற பிரமமான] ஆதாரம் மறையாதாகில் [பிராதி பாசிகமான பாம்பு போன்ற சீவேஸ்வர ஜகத்தின்] ஆரோபம் இலையே? என்றால், ஆதாரம் சமம் (சாமான்யம்), விசேடமாம் என இரண்டு கூறாம். ஆதாரம் சமமாம் எங்கும் (அதிக காலம் அதிக இடங்களில் உள்ள ஆதாரம் சாமான்யமாம்.) ஆரோபம் விசேடமாமே. (குறைந்த காலம் குறைந்த இடங்களில் உள்ள) ஆரோபம் என்ற பெயர் கொண்ட ஆதாரம் விசேடம்.

கயிறாக தோன்றும் பிரமம் சாமான்ய ஆதாரம். பாம்பாக தோன்றும் கயிறு விசேட ஆதாரம்.

{தாத்பர்யம்: ஆதாரம் மறைபடும்போதும் மறைபடாதபோதும் ஆரோபம் தோன்ற வகையில்லையே என்ற சீடனை நோக்கி அந்த ஆதாரத்தை ஆதார அதிட்டானமாக பிரித்து ஆதாரம் சமம் எனவும் அதிட்டானத்தை விசேடம் என்றும் கூறினார்.}



Saturday, March 14, 2009

ஆவரணம்


¨அது கொஞ்சம் அப்படியே இருக்கட்டும் ஸ்வாமி! இன்னும் ஆவரணம் பத்தி சொல்லையே
¨சொல்றேன், சொல்றேன்!
தமஸிலே வந்த விக்ஷேபம் பத்தி இதுவரை பாத்தோம். அதுதான் நாம பாக்கிற ஏராளமான தோற்றங்களுக்கும் காரணம்.
அதே தமஸிலேந்து இதுக்கு எதிர்மறையா மறைப்பு சக்தியும் இருக்கு
¨அட, போகட்டுங்க என்ன இப்போ! அதான் நிறைய விஷயம் பாக்க இருக்கே! ஒண்ணு ரெண்டு குறைஞ்சா என்ன
¨பிரச்சினையே நாம யாரு என்கிற உண்மையான தோற்றத்தை இது மறைக்குது! அதான்

48.
தூடண தமத்தில் வந்த தோற்றமாஞ் சத்தி செய்யும்
ஏடணை விகாரஞ் சொன்னீ ரிரண்டுசத் திகளென் றீரே
மூடலாஞ் சத்தி செய்யு மோகமுஞ் சொல்லு மையா
கேடறக்குருவே யென்னக் கிருபையோ டருளிச் செய்வார்


தூடண (தூற்றத்தக்க) தமத்தில் (தம மூல பிரக்கிருதியில்) வந்த தோற்றமாஞ் சத்தி (விட்சேப சக்தி) செய்யும் ஏடணை (இச்சா ரூபமான பிரபஞ்ச) விகாரம் சொன்னீர். இரண்டு சத்திகள் என்றீரே, மூடலாஞ் சத்தி (ஆவரண சக்தி) செய்யும் மோகமும் (மயக்கத்தையும்) சொல்லும் ஐயா, கேடறக்குருவே! என்ன (என்று சொல்ல) கிருபையோடு அருளிச் செய்வார்.

நான் சின்ன பையனா இருந்தப்ப மழைக்காலம்ன்னா பேஜாருதான். இருட்டிகிட்டு வந்தா ஒண்ணுமே பாக்க முடியாது. காத்து சுழண்டு சுழண்டு அடிக்கும். ஒரு விளக்கும் இதுக்கு எதிரே எரிய முடியாது. பகல்லேயே இருட்டிகிட்டு வந்துடும். சோ ன்னு மழை பிடிச்சா ஒரு வாரம் பத்து நாள் கூட பெஞ்சுகிட்டே இருக்கும். அந்த மாதிரி மழைக்காலத்துலே வடக்கா தெற்கா, வானமா பூமியா ன்னு ஒண்ணுமே தெரியாது. இரவிலே ஒரே இருட்டுதான், ஒரு விஷயமும் வெளங்காது.

அந்த மாதிரி இருட்டு நம் சுய ரூபத்தை மறைக்குது என்கிறார் கைவல்லிய நவநீதம் எழுதின ஆசிரியர்.

இந்த இருட்டுக்குத்தான் ஆவரணம் என்று பேர் சொல்றாங்க.
இதுக்கு தப்பி பிழைச்சவங்க வெகு சிலர்தான்.
ஒண்ணு, யாருக்கு நிகரா அவரைத்தவிர வேறு யாரும் இல்லையோ அந்த ஈசன்.
ரெண்டாவது ப்ரம்மத்தை கண்டுகொண்ட ஞானிகள்.
இவங்களைத்தவிர எல்லாருக்கும் சுய ரூபம் மறந்து போயிடும்.

49.
தானிகர் தனக்கா மீசன் றனையுந்தங் களைத்தாங் கண்ட
ஞானிக டமையு மன்றி நாஸ்திநபாதி யென்னும்
ஊனிடை யுயிர்களுக்குள்ளத் துணர்விழி குருடாம் வண்ணம்
வானிலந் திசைகண் மூடு மழைநிசி யிருள்போன் மூடும்.

[பரி பூரண ஞானம், சர்வஞ்ஞத்வாதி குணங்களில்] தான் நிகர் தனக்காம் [எனும்படியான] ஈசன்தனையும், [உண்மையான] தங்களைத் (பிரமத்தை) தான் கண்ட ஞானிகள் தமையும் அன்றி, நாஸ்தி (பிரமமில்லை) நபாதி (பாநமாகவில்லை) என்னும் ஊனிடை உயிர்களுக்கு (உடலில் உடலே நாம் என்கின்ற சீவர்களுக்கு) உள்ளத்து உணர் விழி (அந்தக்கரணத்தின் ஞானவிழி) குருடாகும் வண்ணம் வான் நிலம் திசை கண் (ஆகாயம், பூமி அனைத்து திசைகளிலும்) மூடும் மழை[க்கால] நிசி (இரவு) இருள் போல் மூடும். [இதுவே ஆவரண சக்தியாம்]

{தாத்பர்யம்: ஆவரண சக்தியானது ஈஸ்வரனையும் தத்துவ ஞானிகளையும் தவிர மற்ற அனைத்து சீவர்களின் ஞான திருஷ்டியையும் மறைக்கும்.}


பிரம்மம் கூடஸ்தன். எங்கேயோ கேட்டோமோ? இன்னும் இல்லையா? சரி.
பிரம்மம் ஏற்கெனெவே பாத்ததுதான்.
கூடஸ்தன்னா இந்த பாக்கக்கூடிய உடம்புக்குள்ளே லிமிட் ஆகி இருகிற ப்ரம்மத்தோட துணுக்கு. இது பத்தி விரிவா அப்புறமா வரும்.

ஆவரண சக்தி என்ன செய்யுதுன்னா நாம ப்ரம்மத்தோட துணுக்கு; எனக்கு இருப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது; நான் ஜடமில்லை, சுத்த அறிவு மயன்; எனக்கு துக்கமில்லை, எப்போதும் ஆனந்தமா இருக்கிறவன். - இப்படி இருக்கிற உண்மையை மறைக்குது. அதனால் நாம் செத்து போயிடுவோமோ ன்னு பயப்படுகிறோம். ஒண்ணுமே புரியலையே ன்னு நினைக்கிறோம். துக்கம் வந்து போகுது. எப்பவும் சத்-சித் -ஆனந்தமா இருக்கிற வஸ்து மேலே அசத்-ஜட-துக்கத்தை ஏற்றி காட்டுகிறதே இந்த ஆவரண சக்தியோட வேலை. அதாவது நாம் பாக்கிறதுக்கும் உண்மைக்கும் இருக்கிற பேதம் - வித்தியாசத்தை தெரியவிடாமல் தடுக்குது. அதனால் எவ்வளோ பவர்புல் ன்னு ஊகிக்கலாம்.

இதோட விளைவாகதான் நாம் ஏதாவது வேலையை செய்து கர்மாவை மூட்டை கட்டிகிட்டு திருப்பி திருப்பி பிறக்கிறோம்.

50.
பூன்றமாம் பிரமத்துக்கும் புறத்துள விகாரங்கட்கும்
ஆன்ற கூடஸ்தனுக்கு மகத்துள விகாரங்கட்கும்
தோன்றிய பேதஞ்சற்றுந் தோன்றாமன் மறைத்துமூடும்
ஊன்றிய பவவியாதி யுண்டாகு முபாதியீதே

பூன்றமாம் (பரி பூரணமான) பிரமத்துக்கும் புறத்து உள (வெளியில் உள்ள) விகாரங்கட்கும் (35 தத்துவங்களுக்கும்), ஆன்ற (அறிவுருவமான) கூடஸ்தனுக்கும் அகத்து (உள்ளே) உள விகாரங்கட்கும் (28 தத்துவங்களுக்கும்) தோன்றிய பேதம் (சுபாவமாக காணப்பட்ட சச்சிதானந்த - அசத்து சட துக்கங்களை) சற்றும் (கொஞ்சமும்) தோன்றாமல் (உணர் விழிக்கு தோன்றாமல் ஒன்றின் இலட்சணத்தை ஒன்றின் மேலேற்றி) மறைத்து மூடும். ஊன்றிய (கெடாத) பவ (பிறப்பு) வியாதி உண்டாகும் உபாதி ஈதே. (இந்த ஆவரண சக்தியே)

{தாத்பர்யம்: அதிஷ்டான ஆரோபங்களின் பேதம் தெரியாமல் ஒருமைப்பாடாக மறைப்பது ஆவரண சக்தியின் தன்மை.}




Thursday, March 12, 2009

அபவாதம் - 3



ஒரு சிலர் இப்ப ஒரு லாபகரமான தொழில் செய்யறாங்க. அதுவும் வீட்டிலேயே செய்யலாம்.
பழைய துணி வாங்க வேண்டியது. டெய்லர் வெட்டி போட்ட துணி துண்டுகள் கூட போதும். ஒரு மிஷின் இருக்கு. அதில துணியை கொடுத்தா அது நூல் நூலா பிரிச்சு கொடுத்திடும். எடை போட்டு பாலிதீன் பாகிலே அடைச்சு கார் ஸ்கூட்டர் துடைக்கிற வேஸ்ட் ன்னு விக்கலாம்.

ஒரு துணியை துணியாவும் பாக்கலாம்; நூலாவும் பாக்கலாம். ரெண்டுமே சரிதான். பேர் வேற; உருவமும் வேற. அவ்ளோதான்.
இதிலே முதல்ல இருந்ததும் கடைசியா இருக்கிறதும் நூல்தான்! இதை காரணம் என்கிறங்க. துணி உருவாகி வந்தது, அப்புறமா அழிஞ்சும் போயிடும். இதை காரியம் என்கிறாங்க.

இதே போலத்தான் தங்கமும். அம்பி மாதிரி தங்க நகையா வாங்காம கடையிலே தங்கக்கட்டியா கூட வாங்கிக்கலாம். அது எப்பவுமே இருக்கும். நகையா செய்துக்கலாம். ஒரு செய்ன் செய்துக்கிறோம்; கொஞ்ச நாள்லே நாகரீகம் மாறிப்போயிடும். அட இந்த செய்ன் பழங்காலத்துது. புது டிசைன்லே செஞ்சுக்கலாம் ன்னு அதை பொற்கொல்லர்கிட்டே கொடுக்கிறோம். அவரும் அதை உருக்கி கொஞ்சம் தனியா எடுத்து வித்துட்டு அப்புறம் நாம் கேட்ட புது டிசைன் நகை பண்ணுவார். நம்மகிட்டே கொடுக்கிறப்ப சேதாரம் இவ்வளோன்னு கணக்கு காட்டுவார்.

உண்மையிலே ஒரு குந்துமணி அளவு கூட சேதாரம் ஆகாது. தங்கம் உருக்கின நெருப்பு அணைஞ்சதும் சாம்பலை கரைச்சு சிதறிப்போய் இருக்கக்கூடிய தங்கத்தையும் எடுத்துடுவார்.
அதெல்லாம் பணம் சம்பாதிக்க ஒரு கணக்கு! சயன்ஸ்லே படிச்சோமே energy can neither be created nor destroyedன்னு! முனாலேயே பாத்தோம்- matter - energy ஒண்ணுதான்; வேற வேற உருவம். உரு மாத்தலாம்; புதுசா பண்ண முடியாது.

கிடக்கட்டும். இப்ப கவனிக்க வேண்டியது முன்னே இருந்தது தங்கம். இப்ப நகை என்கிற பேரிலேயும் வேற உருவத்திலேயும் இருக்கிறது தங்கம். அதை அழிச்சாலும் வரப்போகிறது தங்கம்தான். தங்கமே தங்கம்!

தங்கம் அழியாது. ரூபமும் பேரும் மாறும். அவ்வளோதான்.
அதே போல களி மண்ணிலே குயவன் ஒரு பானை பண்ணினால் நடுவிலே அதுக்கு பானை ன்னு ஒரு பேரும் ரூபமும் வரும். காலப்போக்கிலே மாமியார் அதை உடைச்ச பிறகு அது திருப்பி மண்ணோட மண்ணாகும்.

குடத்தை மண்ணா பாக்கிறா மாதிரி, நகையை தங்கமா பாக்கிற மாதிரி-

இந்த உலகத்தையும் சீவர்களையும் எங்கேந்து வந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணி பிடிச்சுகிட்டே போனா அதோட உண்மையான சொரூபத்தை கண்டு பிடிக்கலாம். அதுக்குத்தான் இவ்வளோ நாள் மண்டையை உடைச்சுகிட்டு பிரமத்தின் நிழல் என்ன ஆச்சுன்னு பாத்துகிட்டு இருந்தோம்.

உதிச்ச வழியே பின்னாலே போய் ஒண்ணுத்திலே ஒண்ணை அடக்கி உண்மையை பாக்கிறதே அபவாதம்.

47.
படமுநூ லும்போற் செய்த பணியும் பொன்னும் போற்பார்க்கில்
கடமுமண் ணும்போ லொன்றாங் காரிய கார ணங்கள்
உடன்முதற் சுபாவமீறா வொன்றிலொன் றுதித்த வாறே
அடைவினி லொடுக்கிக் காணப தபவாத வுபாயமாமே

காரிய காரணங்கள் பார்க்கில் (காரியமான சகசீவ பரத்தையும், காரணமாகிய பிரமத்தையும், உத்தியால் விசாரிக்குமிடத்து) படமும் (காரியமான துணியும்) [காரணமாகிய] நூலும் போல், செய்த பணியும் (காரியமான ஆபரணமும்) [காரணமாகிய] பொன்னும் போல், கடமும் (காரியமான குடமும்) [காரணமாகிய] மண்ணும் போல் ஒன்றாம். உடன் முதல் சுபாவம் ஈறாக (தூல தேகம் முதல் பிரகிருதி முடிய) ஒன்றில் ஒன்று உதித்தவாறே அடைவினில் (முறையே) ஒடுக்கிக் காண்பது அபவாத உபாயமாமே. (உத்தியாமே)



Wednesday, March 11, 2009

மீள் பார்வை- அபவாதம் -2




இப்படியாகத்தானே பரபிரம்மத்தோட சாயை பலவிதமா பரிணமித்து நாம காண்கிற இந்த உலகங்களாயும் ஜீவர்களாயும் ஆயிடுத்து!
இப்படி பார்க்கிற எல்லாத்தையும் மாயைதான் ன்னு புரிஞ்சவன் ஞானியா ஆவான். சும்மா தியரில இல்லை. அப்படி இருந்தா எத்தனையோ பேர் ஞானிகள் ஆகி இருப்பாங்க. அனுபவத்துக்கு வரணும்.

அப வாதம் என்னன்னா மாயையை நீக்குகிறது.

அரைகுறை இருட்டிலே போய் கொண்டு இருக்கிறோம். முன்னே ஆர்காட் உதவி இல்லாமலே அப்படி எல்லாம் இருந்தது. போகிற வழியிலே ஏதோ நீளமா உருண்டையா கிடக்கு. பாம்புன்னு நினைச்சு பயந்துக்கிறோம். நம்மிலே யாரோ ஒத்தர் கொஞ்சம் தைரியசாலி. அவர் கிட்டே போய் பாத்துட்டு ¨அட! இது பாம்பு இல்லைப்பா வெறும் கயிறு¨ என்கிறார்.
அவர் அப்படி சொன்ன பிறகு நமக்கும் ¨அட! ஆமாம்; கயிறுதான்¨ ன்னு தெரியறது.

அதே போல போய் கொண்டு இருக்கிறப்போ ஊருக்கு வழி சந்தேகமா இருக்கு. அதோ ஒரு ஆசாமி நிக்கிறானே அவனை வழி கேட்கலாம் ன்னு ¨ஓய், ஊருக்கு வழி எங்கே?¨ ன்னு கேக்கிறோம். அவரோ பதில் சொல்கிறாப்பல இல்லை. ஓ, செவிடு போல இருக்கு ன்னு நினைக்கிறோம். ஆனா இன்னும் கொஞ்சம் கிட்டே போன பிறகு ¨அட! இது மரம். யாரோ மேல் மரத்தை வெட்டி போட்டு அடி மரத்தை மட்டும் விட்டு வெச்சு இருக்காங்க¨ ன்னு புரிஞ்சுக்கிறோம்.

பல சமயம் மயக்கம் நம்மகிட்டேதான் இருக்கு. தெளிவா பாக்க முடியும் போது விஷயம் சரியா புரியுது.

கனவு காண்கிறோம். திடுக்குன்னு எழுந்துக்கிறோம்.
அட இவ்வளோ நேரம் கண்டது எல்லாம் கனவா? அப்படின்னு இப்ப தோணுது. ஆனா கனவு காண்கிற வரை இது கனவுன்னு புரியலை.
இப்படி தெளிவா ஆகிறாப்போல

இந்த உலகங்கள் எல்லாம் இல்லை; ப்ரம்மம் ஒண்ணுதான் இருக்கு ன்னு தெளிவதே அபவாதம். இதுக்கு சாதனமா இருக்கிறது குருவோட உபதேசமும் சாத்திர நூல்களும்.

ஆசாரியன் சொல்லைக்கேட்டு அவர் உபதேசப்படி எல்லாம் செய்து வந்து அவர் உபதேசம் செய்த மந்திரத்தை உருப்போட்டு சிந்தனை பண்ணி, விளைகிற சந்தேகங்களை சாத்திர நூல்களைபடிச்சும் தேவையானா ஆசாரியன் கிட்டே விளக்கம் கேட்டும் -

¨அட! இந்த உலகங்கள் எல்லாம் இல்லை; பஞ்ச பூதங்களும் இல்லை. எல்லாம் எப்பவும் இருக்கக்கூடிய பிரமம் ஒண்ணே!¨ ன்னு தெளிவதுதான் அபவாதம்.

46.
அதிட்டானத்தை தவிர ஆரோபமில்லை என அபவாத இலக்கணம் கூறல்:

அரவன்று கயிரென்றாற் போலாளன்றுதறி யென்றாற்போல்
குரவன்சொல் லுபதேசத்தாற் கூறுநூலொளி யைக்கொண்டு
புரமன்று புவனமன்று பூதங்களன்று ஞானத்
திரமென்னும் பிரமமென்று தெளிவதே யபவாதங்காண்

அரவு (பாம்பு) அன்று, கயிறு என்றால் போல்; ஆளன்று தறி (மரம்) என்றாற் போல், குரவன் சொல்லும் உபதேசத்தால் கூறு நூல் ஒளியைக் கொண்டும் (ஆசாரியன் வாக்கியத்தையும் உறுதி செய்யும் ஞான சாஸ்திர நூல்கள் வலிமையை கொண்டும்) புரமன்று (சரீரம் அன்று) புவனமன்று (உலகங்கள் அன்று) பூதங்களன்று (பஞ்ச பூதங்கள் அன்று) ஞான ஸ்திரம் என்னும் பிரமம் என்று தெளிவதே அபவாதம் காண்.


அபவாதம்



சீவன் வியக்தி. ஈசன் சமஷ்டி.
கடல் அலையும் கடலும் போல. ரெண்டுக்குமே கடலோட தன்மை- உப்பு கரிக்கிற தண்ணீர் ன்னு இருந்தாலும் கடல் அலை கடலா ஆகாது இல்லையா?

44.
மரங்கள்போல் வியட்டிபேதம் வனமெனல் சமட்டிபேதம்
சரங்கடா வரங்கள்பேதத் தனியுடல் வியட்டியென்பார்
பரம்பிய வெல்லாங்கூட்டிப் பார்ப்பதே சமட்டியாகும்
இரங்கிய பல சீவர்க்கு மீசர்க்கும் பேதமீதே

மரங்கள் போல் (கருதுவது) வியட்டி (வியஷ்டி) பேதம். வனமெனல் சமட்டி பேதம். சரங்கள் தாவரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார். பரம்பிய (விரிந்துள்ள) எல்லாம் (சகல தேகங்களையும்) கூட்டிப் பார்ப்பதே சமட்டியாகும். இரங்கிய (வருந்துகின்ற) பல சீவர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே.

இப்பதான் இவ்வளோ பேசினதுக்கு பாய்ன்டுக்கு வரோம்.
இந்த பஞ்ச கோசங்களும் உண்மையிலே நாம் இல்லைன்னு புரிஞ்சு உணர்ந்து வெளியே வந்தா ஆத்மாவை உணரலாம். ஞானம் வந்துடும்.

யார் இந்த பரந்து விரிந்த உலகத்தை எல்லாம் கனவு போல நிலையற்றது - மாயை ன்னு புரிஞ்சுக்கிறாங்களோ அவங்க ஞானியா ஆவாங்க.
இதற்கான உத்தி அபவாதம் எனப்படும்.

45.
அத்தியாரோப உத்தியினால் தன்னிடத்து ஆரோபமாகத் தோன்றிய சகசீவ பரங்கள் மித்தை என உணர மித்தையா திருஷ்டியைக்கூறி, அதத்துவா விருத்தி இலக்கணையால் அவை உண்டான கிரமப்படி லயிக்கும் அபவாத உத்தியை சுருக்கமாக கூறல்:

கற்பனை வந்தவாறு காட்டினோங் காண்ப வெல்லாஞ்
சொற்பனம் போலுமென்றே துணிந்தவன் ஞானியாவன்
செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்தவா காசம் போல
வற்புத முத்திசேரு மபவாத வழியுங்கேளாய்

கற்பனை (அத்தியாரோபம்) வந்தவாறு (வந்த வழியை) காட்டினோம். காண்ப எல்லாம் (காணும் சீவேஸ்வர ஜகத் முழுதும்) சொற்பனம் (கனவு) போலும் என்றே துணிந்தவன் (நிச்சயித்தவன்) ஞானியாவன். செற்புதை (மேகம் நெருங்கிய) மழைக்காலம் போய்த் தெளிந்த ஆகாசம் போல அற்புத முத்தி (நிரதிசய ஆநந்த மோட்சம்) சேரும் (அடைய காரணமாகும்) அபவாத வழியும் கேளாய்.

அப வாதம் என்ன? முடக்கு வாதம், கீல் வாதம் மாதிரின்னா.....
மாயையை நீக்குகிறதுதான் அபவாதம்.

கயிறுதான் இது; பாம்பா பாத்தது நம்மோட பிரமை.
இது மரம்தான். அரைகுறை வெளிச்சத்துலே பாத்து ஆளுன்னு தப்பா நினைச்சுட்டோம்.

இப்படி தெளிவா ஆகிறாப்போல

இந்த உலகங்கள் எல்லாம் இல்லை; ப்ரம்மம் ஒண்ணுதான் இருக்கு ன்னு தெளிவதே அபவாதம். இதுக்கு சாதனமா இருக்கிறது குருவோட உபதேசமும் சாத்திர நூல்களும்.
சொல்லறது ரொம்ப சுலபமா சொல்லியாச்சு! அனுபவத்துக்கு வரணுமே!


ஈசனும் சீவனும்


[மாற்றங்கள் இல்லை. தொடர்ச்சிக்காக]
இனிமே சுலபம்தான். கிடு கிடுன்னு போகலாம்.

தமஸிலே கூட்டு (சமஷ்டி) தனி (வியஷ்டி) யார்?
தமஸின் சமஷ்டி விராட் புருஷன்; வியஷ்டி விஸ்வஜன்.

42.
தூலதேகத்தில் சீவேஸ்வரருக்கு அபிமான நாமாதிகள்:
தூலமே மருவுஞ்சீவன் சொல்லிய விசுவனாகும்
தூலமே மருவுமீசன் சொலும்விராட் புருடனாகும்
தூலமே யன்னகோசந் துன்னுஞ்சாக் கிரவவத்தை
தூலகற் பனையீதென்று தொகுத்தது மனதிற்கொள்வாய்

[முன்] சொல்லிய தூலமே (ஸ்தூலதேகத்தில்) மருவும் (பொருந்தும்) சீவன் விசுவனாகும். தூலமே மருவும் ஈசன் சொலும் விராட் புருடனாகும். [அன்ன வீரியத்தால் உண்டாகி அன்னத்தால் விருத்தியாவதால்] தூலமே அன்னகோசம்; துன்னுஞ் சாக்கிர அவத்தை; தூல கற்பனை (தூலப் பிரபஞ்சத்தின் அத்தியாசம்) ஈது என்று தொகுத்தது (சுருக்கமாக கூறியதை) மனதில் கொள்வாய்.

அட, அப்ப ஈசனும் சீவனும் ஒண்ணா?
இருப்பு ஒண்ணுதான். ஆனா உபாதியால வேற வேற. உபாதி? போட்டு இருக்கிற வேஷம்ன்னு சொல்லமோ என்னவோ! Role.
யார் சில விஷயங்கள் தோன்ற காரணமோ அவர் காரண உபாதி. அது ஈசன்.
யார் தோன்றினாரோ அவர் காரிய உபாதி. அது சீவன்.

43.
சீரிய வீசனார்க்குஞ் சீவர்க்கு முபாதியொன்றேல்
ஆரிய குருவேபேத மறிவதெப்படி யென்றக்கால்
காரிய வுபாதிசீவன் காரணவுபாதி யீசன்
வீரியமிகு சமட்டி வியட்டியாற் பேதமாமே

சீரிய (சிறந்த) ஈசனார்க்கும் சீவர்க்கும் உபாதியொன்றேல் (உபாதி ஒன்றாக இருக்குமானால்) ஆரிய குருவே, பேதம் அறிவது எப்படி என்றக்கால் (என கேட்பாயானால்) [ஸ்தூல சூட்சும] காரிய உபாதி [உடையவன்] சீவன்; [ஸ்தூல சூட்சும] காரண உபாதி [உடையவன்] ஈசன். வீரிய மிகு சமட்டி வியட்டியால் பேதமாமே.


பிஜி பாய்ன்ட்ஸ்!


[மாற்றங்கள் இல்லை. தொடர்ச்சிக்காக]
அப்பாடா! இதுக்கு மேலே பிஜி பாய்ன்ட் தான். வேணான்னா விட்டுடலாம்.
5 ஸ்தூல பூதங்கள் - நாம பாக்கக்கூடிய ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் - லேந்து 25 தத்துவங்கள் வந்தன. எப்படி? ஒவ்வொண்ணும் மத்த நாலோடேயும் சம்பந்தப்பட்டதால.
ஆகாயத்தில் ஆகாயம் ன்னு ஆரம்பிச்சு இப்படியே அஞ்சும் முடிச்சு அடுத்து வாயுவில் ஆகாயம்ன்னு ஆரம்பிச்சு.... பெர்முடேஷன் காம்பினேஷன் புரியுது இல்லையா?

50% இருக்கிற ஆகாயம். இதில உண்டானாது மோகம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% வாயு கூடி உண்டானது வெட்கம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% அக்னி கூடி உண்டானது பயம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% நீர் கூடி உண்டானது த்வேஷம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% நிலம் கூடி உண்டானது ஆசை.

இதே போல மீதி பாக்கலாமா?
வாயு + ஆகாயம் = தத்தல்
வாயு = ஓடல்
வாயு + அக்னி = இருத்தல்
வாயு + நீர் = நடத்தல்
வாயு + நிலம் = கிடத்தல்

அக்னி + ஆகாயம் = சங்கமம்
அக்னி + வாயு = ஆலஸ்யம்
அக்னி = நித்திரை
அக்னி + நீர் = தாகம்
அக்னி + நிலம் =பசி

நீர் + ஆகாயம் = சுக்கிலம்
நீர் + வாயு = ரத்தம்
நீர் + அக்னி = வியர்வை
நீர் = சிறுநீர்
நீர் + நிலம் = உமிழ்நீர்

நிலம் + ஆகாயம் = உரோமம்
நிலம் + வாயு = நரம்பு
நிலம் + அக்னி = தோல்
நிலம் + நீர் = மாமிசம்
நிலம் எலும்பு

அப்பாடா! இதெல்லாம் எங்கேயிருந்து உரை ஆசிரியர் குப்புசாமி முதலியார் பிடிச்சாரோ தெரியலை.

இப்ப அவஸ்தைகள் மூணுன்னு நமக்கு தெரியும். ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி.
நனவு, கனா, சுழுத்தின்னு தமிழ்ல.

இது வரை நாம படிச்சதை இதுக்கு தொடர்பு படுத்தி பாக்கலாமா?
ஸ்தூல உடம்பிலே ஜாக்ரத் இருக்கும். சூக்கும உடம்பிலே ஸ்வப்னம். காரண உடம்பிலே சுசுப்தி.

பஞ்ச கோசங்களை கொஞ்சம் ரிவைஸ் பண்ணலாம்.

அன்ன மயம் - சுக்கில/ சுரோணிதங்களால ஆன இந்த – என்ன புரியலையா? விந்து, கரு முட்டையால ஆன- தோல், ரத்தம், மாமிசம், நரம்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் என்கிற ஏழு தாதுக்களால ஆக்கப்பட்டு அன்னத்தால வளர்ந்து, கடைசியிலே பூமியில் அழிகிற இந்த பருப்பொருளான உடம்பே அன்ன மய கோசம்.

கர்ம இந்திரியங்களோடு கூடின ப்ராணன்களே ப்ராணமய கோசம்.
ஞான இந்திரியங்களோடு கூடின மனமே மனோ மய கோசம்.
ஞான இந்திரியங்களோடு கூடின புத்தியே விஞ்ஞான மய கோசம்.

காரண தேகமே (அஞ்ஞானம்) ஆனந்த மய கோசம்.