Pages

Thursday, January 8, 2009

பக்தி-3



சில பேர் இப்படி நினைக்கலாம். பிரமத்தை நினைச்சு அது மேல பக்தி செலுத்த கஷ்டமா இருக்குமே அதனால இப்படி செய்யலாமோ? இந்த பிரபஞ்சமே ப்ரமத்தோட மாயா சொரூபம்தானே? அதனால இந்த உலகத்து மேலேயும் அதில் இருக்கிற மக்கள் மேலேயும் அன்பு வைத்து அவங்களுக்கு தொண்டு செய்தா அது ப்ரம்மத்துக்கு செய்ததாதானே ஆகும்?

அது சரிதான், ஆனால் இந்த படியிலே அப்படி செய்யக்கூடாது. இப்படி செய்கிறது கர்ம வழில இருக்கிறப்ப செய்யலாம். பரோபகாரம் இதம் சரீரம் (மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே இந்த உடல் இருக்கு) என்ற படி ஊருக்கு தொண்டு, தேச சேவை, உலகத்தொண்டு அப்படின்னு அந்த வழில பலன் எதிர்பாராம செய்வது சித்த சுத்தியை கொடுக்கும்.

இப்ப வழியே வேற. இந்த உலகம் நிலையானது இல்லை; நிலையான வஸ்துவை தேடிப்போகணும் ன்னு முடிவு செய்து ஞானத்தை தேடுகிறபோது உலகத்தோட சம்பந்தத்தை அதிகப்படுத்திக்கொள்வது ஆபத்து இருக்கு! சன்னியாசி பூனை வளத்த கதையும் ஜட பரதர் கதையும் தெரிஞ்சதுதானே! எதை விட்டு விட்டு போக நினைக்கிறோமோ அதையே வலுக்கட்டாயமா பிடிச்சுகிறதுல என்ன பிரயோஜனம்?

இதுக்கு சிலர் ஆட்சேபிக்கலாம். ஞானியான பிறகு எத்தனை பேர் தொண்டு செய்து இருக்காங்க? நீங்க அடிக்கடி மேற்கோள் காட்டுகிற சங்கரரே அப்படி தேசம் முழுக்க சுத்தி ஆன்மீக தொண்டு செய்தவர்தானே?

உண்மைதான். அப்படி செய்வது மாயையை சரியான படி புரிஞ்சு கொண்டு அதால பாதிக்காதபடி ஆகிவிட்டவர்கள் மாயா லோக அதிபதியான ஈஸ்வரன் கொடுத்த கட்டளைப்படி செய்வது. தனக்குன்னு உத்தேசம் ஏதும் இல்லாம பகவான் கட்டளைப்படி செய்வதில தப்பு இருக்காது. ¨நீ ப்ரம்மத்தை உணர்ந்துட்டேப்பா; ஆனா உன்னால இந்த மாய லோகத்துக்கு சில காரியங்கள் உன்னால நடக்க வேண்டி இருக்கு; அதை நீதான் செய்ய முடியும்¨ ன்னு கட்டளை இடும்போது செய்வது. (அந்த நிலையிலே தானே தனக்கு இட்டுக் கொள்கிற கட்டளைதானே அது!)

பார்க்கப்போனால் மற்றவர்களுக்கு சாதனா மார்கத்திலே இருக்கிறவங்க செய்வது இல்லாம, மத்தவங்கதான் ¨அட, கோடியிலே ஒத்தர் இப்படி சாதனைல ஈடுபட்டு இவ்வளோ முன்னேறி இருக்காங்களே, இவங்களுக்கு சரீர பயணம் நடக்க நாமா உதவணும்¨ ன்னு உதவி செய்யணும்.

ஆதனால தனி மனிதர்கள்கிட்டே அன்பு செய்வதற்கு இந்த நிலையிலே ஒண்ணுமில்லை. அப்படியானா வெறுப்பு இருக்கா என்றால் சன்னியாசம் வாங்கிக்கொள்ளும்போதே ¨எந்த உயிருக்கும் என்னிடம் பயம் வரக்கூடாது¨ ன்னு அவன் சபதம் எடுத்துக்கிறதால அவன் யாரையும் விரோதித்துக் கொள்ளுவதில்லை. அன்பும் காட்டுவதில்லை. ரெண்டுமே கிடையாது.

இந்த நிலையிலே அன்பு வைக்க வேண்டியது ஆத்மாவிடம்தான்.


No comments: