Pages

Friday, October 31, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 6



தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:।
பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரமவாப்ஸ்யத॥ 3.11 ॥

வேள்வியுடன் மானிடரை வேதாப் படைத்துமுனங்
கேள்வி யவர்க்குரைத்தான் கேண்மையுட-னூழ்விணையா
மித்தாலே துய்பய னுற்றிடுமி னுங்களுக்கிங்
கெத்தாலு மின் பளிக்கு மீது.

வேள்வியுடன் மானிடரை வேதாப் படைத்து முனம் கேள்வி அவர்க்கு உரைத்தான் கேண்மையுடன் ஊழ்விணையாம் இத்தாலே துய் பயன் உற்றிடும் உங்களுக்கு இங்கு எத்தாலும் இன்பளிக்கும் ஈது.

(இந்த வேள்வியினால் தேவதைகளை வளரச் செய்யுங்கள். அந்த தேவதைகள் உங்களை வளரச் செய்யட்டும், தன்னலம் கருதாத தன்மையுடன் ஒருவர் மற்றொருவரை வளரச் செய்த நீங்கள் மேலான நன்மையை அடைவீர்களாக.)

தேவதைகளுக்கு நாம் பூஜை செய்து உணவளிக்கிறோம். அவை மூலம் பகவான் நமக்கு வேண்டியதை தரான்.

இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:।
தைர்தத்தாந ப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:॥ 3.12 ॥

அன்னபெரு வேள்வியா லாங்கிறைஞ்சப் பட்டமார்
மன்ன பெரியவன மற்றளிப்ப - ரின்னே
யவர்தந்த போக மவர்க்களியா துண்பான்
கவர்கின்றான் கள்வனே காண்.

அன்ன பெரு வேள்வியால் ஆங்கு இறைஞ்சப் பட்டமார் மன்ன பெரியவன மற்று அளிப்பர். இன்னே அவர் தந்த போகம் அவர்க்கு அளியாது உண்பான் கவர்கின்றான். கள்வனே காண்.

(வேள்வியினால் வளர்ச்சியடைந்த தேவதைகள் உங்களுக்குக் கேட்காமலேயே விரும்பிய போகங்களை நிச்சயமாகக் கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனே.)

பார்க்கனும்னாலும் அக்னி உதவியாலதான் முடியும். மூச்சு விட்டாலும் வாயுவாலதான். தண்ணி குடிச்சாலும் அது வருணனாலதான். காலை வைத்து நடந்தாலும் அது பூமியாலதான். அன்னம் பூமியாலதான். மழை வேண்டும்னாலும் மேகங்களாலதான். இப்படி இந்த தேவைதைகளோட உதவி இல்லாம உலகத்திலே எந்த காரியமும் நடவாது.

இத்தனை உபகாரத்தை வாங்கிகிட்டு ஒரு நன்றிக்கடனா ஒரு சின்ன பூஜையை செய்யாட்டா என்ன பிரயோசனம்? ஆனா நாம் செய்கிற இந்த சின்ன கர்மாவாலதான் அவங்க ஜீவிச்சு இருக்க முடியும் என்கிறது இல்லை. அதுக்கு பகவான் இருக்கான்; பாத்துப்பான். கோவில்லே நாம ஒரு தீபம் போடறதாலேதான் ஈஸ்வரன்/ பெருமாள் நல்லா இருக்காரா? நாம் பூமாலை வாங்கி கொண்டு போய் போடறதாலேதான் நல்ல இருக்காரா? அப்படி ஒண்ணுமில்லே.

அந்த அந்த கோவில்கள்லே சரியா நடத்துகிற கர்மாக்கள் அந்த இடத்திலே நல்லா தெய்வ இருப்பை உண்டாக்கி அங்கே வர மனிதர்களுக்கு பயனாகும். இதிலே கோவில்ல இருக்கிற பகவானுக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை.

ஒரே ஒரு சமித்தையோ ஒரே ஒரு ஸ்பூன் நெய்யையோ எவ்வளவு தேவதைகளை உத்தேசிச்சு ஹோமம் செய்கிறோம்? அதனால் அளவு என்கிறது அவ்வளவு முக்கியமில்லை. அந்த உத்தேசமேதான் தேவதைகளுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறதாம் - அப்படின்னு வித்யாரண்யர் சொல்கிறாராம். தேவதைகளை உத்தேசித்து செய்கிற இந்த த்ரவ்ய த்யாகமே நமக்கு தர்மம்.

தேவர்கள் கொடுக்கிறதை அவர்களுக்கும் பயனாகிறதா செய்யணும். ஹோமம் யாகம்ன்னு செய்ய முடியலைனாலும் உலக உபகாரமா அன்னதானம் மாதிரி செய்யணும். குறைந்த பட்சம் நாம் சாப்பிடும் போது அவனுக்கு அந்த உணவை அர்ப்பணம் செய்துவிட்டு சாப்பிடணும். யார் இப்படி நன்றி இல்லாம இருக்கானோ அவன் திருடன் அப்படின்னு கண்ணன் சொல்றான்.

Thursday, October 30, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி --5:




யஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம் கர்மபந்தந:।
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9 ॥

ஐவகைய வேள்வியினுக் காகாக் கருமங்கண்
மெய்வகையே கட்டு மிகவுலகை-யிவ்வகையா
யாங்கதனுக் காக வமைந்துன் னசையைவிடுத்
தீங்கிதனை நின்றே யியற்று.

ஐவகைய வேள்வியினுக்கு ஆகாக் கருமங்கள் மெய் வகையே கட்டும் இகவுலகை. இவ்வகையாய் ஆங்கு அதனுக்காக அமைந்து உன் ஆசையை விடுத்து ஈங்கு இதனை நின்றே இயற்று.

(யாகத்தின் பொருட்டுச் செய்யப்படுகின்ற கர்மம் தவிர வேறு செயல்களில் ஈடுபடுவதனாலேயே இம்மனித ஸமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது. (ஆகையால்) அர்ஜுன! பற்றுதல் இல்லாமல் அந்த யாகத்தின் பொருட்டே கடைமையை நன்கு ஆற்றுவாயாக.)

கண்ணன் சொல்கிறான்: கர்மாவை விட்டதாலே மட்டும் லாபம் இல்லை. விட்டுவிடாததாலே மட்டும் அது தப்பும் இல்லை. கர்மாவோட பலனைதான் விடச்சொல்றேன்?

இங்கே யாகம் என்கிற சொல்லுக்கு கொஞ்சம் விரிவான அர்த்தமே எடுத்துக்கணும். பகவத் அர்ப்பணமா செய்கிற எல்லா கர்மாக்களையுமே அப்படி எடுத்துக்கலாம்.

கர்மா செஞ்சா அதோட பலன்- மேலும் விருப்பு, வெறுப்பு - மேலும் வேலை ன்னு ஒரு மாய சுழல்ல மாட்டிப்போமே என்பது கவலை. எதை செய்தால் அது நம்மை சம்சாரத்தில கட்டுப்படுத்தும், எதை செஞ்சா கட்டுப்பாடு செய்யாதுன்னு சரியாவே வரையரை செஞ்சு வெச்சு இருக்கான் பகவான். இததான் சாஸ்திரங்கள்ல சொல்லி இருக்கு. குடும்பத்தை நடத்த வேலை செய்வதும் அதுக்கான தேவையான வேலைகளை செய்வதும் க்ருஹஸ்த தர்மம். யார் யார் எந்த வேலை எப்படி எவ்வளவு செய்யணும்ன்னு விதிச்சாச்சு.

தேவ பூஜையா செஞ்ச எதுவும் ராகத்வேஷங்களை சம்பாதிச்சு கொடுக்காது. அப்படி இல்லாம சொல்லப்படாத ஏதேதோ வேலைகளை உன் பயனுக்காக செய்தால் அவை சம்சாரத்தில அழுத்தும்தான். உலகத்துக்கு நல்லதுன்னு செய்கிற எதுவும் அப்படி அழுத்தாது.

பயனை கருதாம ஆரம்பத்திலே இருப்போம்ன்னு இல்லை. முதல்ல ஏதோ ஒரு பயனை கருதிதான் செய்வோம். அப்புறமா முன்னேற முன்னேற பயன்கருதாம செய்வோம். அப்படி பயன்கருதாம செய்ய ஆரம்பிக்கிற போது கொஞ்சம் கொஞ்சமா விருப்பு வெறுப்பு போயிடும்.



Wednesday, October 29, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -4



நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:।
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8 ॥


நின்றுநீ செய்யு நியதக் கருமத்தை
யென்றுமிது மற்றறிவி லேற்றமுடைத்-துன்ற
னுடனடப்பு மோடா தொருகரும மற்றா
லடலடர்த்த தோளா யறி

நின்று நீ செய்யு(ம்) நியதக் கருமத்தை என்றும் இது மற்று அறிவில் ஏற்றமுடைத்து. உன்றன் உடல் நடப்பும் ஓடாது ஒரு கருமம் அற்றால்; அடல் அடர்த்த தோளா, அறி.

(நீ சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றுவாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் கர்மங்களை ஆற்றுவது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலைப் பேணுவது கூட ஸாத்யமாகாது.)

கர்மாவையே நீ செய். இல்லைனா சரீர யாத்திரையே நடக்காது. எல்லாத்தையும் விட்டு ஞானம் சித்திச்சபின்தான் சரீர யாத்திரை பற்றி ஒத்தன் கவலை பட மாட்டான். ஞானம் வந்தவன் ஜடபரதர் போல ஒண்ணும் செய்யாம இருப்பான். சுகர் போன்ற ஞானிகள்தான் சாப்பாடு உடை இருக்க இடம் இதல்லாம் கிடைக்குதோ இல்லையோன்னு கவலை படாம இருப்பாங்க.

சன்னியாசிகள்ல ஞானியான சன்னியாசி, ஜிக்ஞாசுவான சன்னியாசி ன்னு இரண்டு உண்டு. (இதெல்லாம் விரிவா ஞான வழில பாப்போம்.)

ஞானம் சித்திச்சுதான் சன்னியாசம் என்று இல்லை. சன்னியாசத்தாலேதான் ஞானம்னும் இல்லை. யாருக்கு குடும்பத்தில் இருந்து கொண்டு ஞானம் தேடறது கஷ்டம்ன்னு தோணுதோ, திட வைராக்கியம் வந்தாச்சோ, சன்னியாச தர்மத்தை கடை பிடிக்க முடியும்ன்னு தன்னம்பிக்கை இருக்கோ அவன் குடும்பத்தை விட்டு விட்டு சன்னியாசம் வாங்கிக்கலாம். இது கஷ்டம் என்கிறதாலதான் சாஸ்திரங்கள்லே கலியுகத்திலே இதை செய்யாதேன்னு சொல்லி இருக்காங்க. குரு பரம்பரையை காப்பாத்தவும் உண்மையா வைராக்கியம் வந்தவங்களும் சிலர் சன்னியாசியா ஆகிறது சரிதான். மத்தவங்க சன்னியாசம் வாங்கிக்கிறது கொஞ்சம் பிரச்சினையானது. பெரும்பாலானவங்க வீட்டிலேயே இருந்து கொண்டேதான் ஞானம் பெற முயற்சி பண்ணணும்.

ஞானிகளை விட ஞானத்தை நோக்கி போகிறவர்கள்தானே -ஜிக்ஞாசு- நிறைய பேர்? இவர்களுக்கு சரீரத்தை காப்பாத்திக்க வேண்டி இருக்கிறதால சன்னியாசிங்களுக்கும் பிக்ஷை எடுத்து சாப்பிட கர்ம தர்மம் சொல்லி இருக்கு. பட்டினி கிடந்து சாகிறதால ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்காது. பசி இருக்கும் போது சாப்பிடாம இருந்தா அது ஆத்ம ஹத்தி தோஷம் ஆகும்.

இப்படி ஞானயோகிக்கும் கர்மம் முழுக்க விடறதில்லையே. மேலும் கர்ம யோகத்திலேயே அறிவும் ஞானமும் உண்டாச்சே!

மனைவி மக்களை விலக்கினாலும் சரீரமே ஒரு வீடா இருக்கு. ஞான கர்ம இந்திரியங்கள் எல்லாம் கூடவே வருதே! அது எல்லாம் மனசு மூலமா வெளியே வரத்தானே வரும்? அப்படி வரும்போது அவை கெட்ட சமாசாரங்கள்ள போகாம இருக்கணுமே! பசி தாகம் இருக்கவே இருக்குமே! அவை தங்களை கவனிக்க வேலை செய்ய தூண்டுமே!

ஞான யோகம் பழக்கம் இல்லாதது. கர்ம யோகம் சின்னதுலேந்து பழகியது.

ஞான யோகத்துக்கு பற்று இல்லாம இருக்கிறது துவக்கப்புள்ளி. அங்கேந்து மேலே முன்னேறலாம். ஆனா கர்ம யோகத்துக்கு அது கடைசி புள்ளி. கொஞ்சம் கொஞ்சம் பற்று இல்லாத நிலையிலேயே கர்ம யோகத்தை ஆரம்பிக்கலாம். அது சுலபமானதும் கூட. அனேகமா எல்லாரும் கொஞ்சம் முயற்சில கர்மாவை செய்துடலாம். இப்படி முயற்சி ஜெயிக்கிறதால மேல மேல தொடர்ந்து சாதனை செய்ய ஏதுவா இருக்கும். செயல்லேந்து நழுவுறது குறைவாவே இருக்கும்.

இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுனனை கர்மத்திலே ஈடுபாடு கொள்ள சொல்கிறான் கண்ணன்.

Monday, October 27, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -3



கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே॥ 3.6 ॥


கரும கரணங்கள் காட்டித்தன் னெஞ்சில்
வருமப்பொருணினைந்து மன்னிப் - பெருமைவினைக்
கைம்மையினாற் பாவிக்குங் கள்ளக் கருத்துடையான்
பொய்ம்மையினா னென்றே புகல்.

கரும கரணங்கள் காட்டித் தன் நெஞ்சில்
வருமப் பொருள் நினைந்து மன்னிப் - பெருமை வினைக்
கைம்மையினால் பாவிக்குங் கள்ளக் கருத்துடையான்
பொய்ம்மையினான் என்றே புகல்.

(அறிவிலியான எவன் புலன்கள் அனத்தையும் வலுவில் - வெளித்தோற்றத்தில் அடக்கி விட்டு மனதினால் அந்தப் புலன்நுகர் பொருட்கள நினத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் பொய் நடத்தையுள்ளவன் - ஆஷாடபூதி எனக் கூறப்படுகிறான்.)

வாசனைகள மறையாமல் சம்சாரத்தை விட்டு விட்டு போனாலும் அது சன்னியாசம் ஆகாதே. துர் வாசனைகள் இவனை ஏமாத்தி வேறு மாதிரி திரும்பி வந்துடும். இது பொய் ஒழுக்கம் ஆகும். இந்திரியங்களால த்யாகம் பண்ணாலும் மனசால பண்ணலையே. இவனைவிட "ஆமாம் ஐயா, என்ன வேதாந்தம் கேட்டாலும் வைராக்கியம் வரலையே! இந்த கடமைகள் என்னை விட்டு போகாது போல இருக்கேன்" னு உண்மைய சொல்கிறவன் மேல்.

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே அர்ஜுந।
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஷிஷ்யதே॥ 3.7 ॥


நெஞ்சாற் புலனடக்கி நேர்கரும யோகத்தை
யெஞ்சா துழல்கரும விந்தியத்தாற் -றுஞ்சாது
தான்றொடங்கி நன்றியலுந்தன் மையுடன் றொத்தற்றான்
வான்றொடர்ந்த வண்புகழான் மற்று.

நெஞ்சால் புலன் அடக்கி நேர் கரும யோகத்தை
எஞ்சாது உழல் கருமவிந்தியத்தால் -துஞ்சாது
தான் தொடங்கி நன்றியலும் தன்மையுடன் தொத்து அற்றான்வான்
தொடர்ந்த வண் புகழான் மற்று.

(ஆனால் அர்ஜுன! எவனொருவன் மனதினால் புலன்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.)

நமக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு. அதை பயன்படுத்திக்கொண்டே நாம் ஆன்மீகத்திலே முன்னேற பார்க்கணும். ஒருத்தருக்கு கணக்கு ரொம்ப நல்லா வரலாம். இன்னொருத்தர் "கணக்கு, பிணக்கு, ஆமணக்கு" ன்னு சொல்லாம். இப்படி பிடித்த சமாசாரங்களும் திறமை இருக்கிற சமாசாரங்களும் ஆளுக்கு ஆள் வேறு படும்.

"மனசால யார் ஒருவன் புலன்களை நியமித்து" என்பதையும் கவனிக்கணும். அவை இழுக்கிற விஷயத்திலே நாம் போறது இல்லை. அப்படி செய்தா அது பற்றுல கொண்டுவிடும். இப்படி பற்று இல்லாம போனால் அது ஞான யோகத்துக்கு தகுதியை தரும். புலன்களை அடக்காம, மனசு பரிபக்குவம் இல்லாமல் சன்னியாசம் வாங்கிறதைவிட குடும்பத்தில இருந்து கொண்டே கர்மாவை செய்யலாம்.

இந்த பதிவுகளிலே சன்னியாசத்தை குறித்து சொல்கிற எதுவும் உள்நோக்கிலோ யாரையும் குறிப்பாக மனசில வைச்சுக்கொண்டோ சொல்லவில்லை. பொதுவாக நூல்களிலே சொல்லி இருக்கிறதையும், பெரியவர்கள் உபன்யாஸம் செய்ததையும், பல நாட்களாக கேள்விப்பட்ட தகவல்கள் அடிப்படையிலும்தான் எழுதி வருகிறேன்.
~~~~~~~~~
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

Friday, October 24, 2008

கண்ணன் காட்டிய கர்ம யோகம் -2


ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அஷ்நுதே।
ந ச ஸம்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி॥ 3.4 ॥

இட்டத்தாற்கன்மத் திழியார் வினையொழியார்
விட்டத்தாற் பேறதனை மேலடையார்- தொட்டொன்றைச்
செய்யா ரிறைப்பொ ழுதுநில்லார் செறிந்தியல்வர்
மெய்யார் குணத்தெவரு மிக்கு

இட்டத்தால் கன்மத்து இழியார் வினை ஒழியார்.
விட்டத்தால் பேறதனை மேல் அடையார்- தொட்டு ஒன்றைச்
செய்யார் இறைப் பொழுது நில்லார் செறிந்து இயல்வர்
மெய்யார் குணத்து எவரு மிக்கு

(மனிதன் கர்மங்களைச் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே நிஷ்கர்ம நிலையோ - கர்மயோக நிஷ்டையோ அடைவதில்ல. கர்மங்களைச் செய்யாமல் துறப்பதாலேயே ஸித்தியை அதாவது ஸாங்க்யயோக நிஷ்டையையும் பெறுவதில்லை.)

யாராவது "அட, ஏன்டா கர்ம யோகம் கஷ்டப்பட்டு செய்யணும்? கர்ம யோகம் செஞ்சு சித்த சுத்தி வந்துதான், ஞான யோகம் செஞ்சுதான் நாம யார்ன்னு புரிஞ்சுக்கணுமா? அப்ப நேரடியா ஞான யோகம் செய்யலாமே" ன்னு நினைச்சா,

கர்மாவை செய்யாமலே யாரும் அதிலிருந்து விடுபட முடியாது. அதெப்படி? அப்படின்னா கர்மாவை செஞ்சுண்டே விட முடியுமா என்ன? ஒரேயடியா விட்டாதானே அதை விடலாம்? அப்படியில்லை.

உடம்பு சரியில்லை. வைத்தியர்கிட்டே போறோம். மருந்து ஒண்ணு கொடுத்து "விடாம சாப்பிடு" என்கிறார். மருந்து சாப்பிட்டு கொண்டே இருக்கணும் என்கிறது அவரோட உத்தேசம் இல்லை. மருந்து சாப்பிட்டு கொண்டே இருந்தா அப்புறம் ஆரோக்கியம் வந்த பிறகு "போதும், மருந்து சாப்பிடாதே" ன்னு சொல்வார் வைத்தியர்.

ஆக அப்படிப்பட்ட காலம் வர வரை வேலைசெய்து கொண்டே இருக்கணும். கர்மாவை பலனை எதிர்பாக்காம செஞ்சு செஞ்சு அதில பலன் என்ன கிடைச்சாலும் சரின்னு ஏத்துண்டு போகிற மனப்பக்குவம் வந்தச்சுன்னா ஞான யோகத்துக்கு போகலாம். "கர்மண்யேவாதிகாரஸ்தே" ன்னு சொன்னவன் "சர்வ கர்மாண் பரித்யஜ்ய" என்று சொல்லும் நிலை வரட்டும்.

கர்மாக்களை விட்டு விட்டதாலேயே சித்தின்னும் இல்லை. பொறுப்பில்லாம தன் கர்மாக்களை விட்டுட்டு பயந்து ஓடறவன் ஞானியோ சித்தனோ ஆகிவிட முடியாது. வைணவப் பெரியார்களை பாத்தா குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்று அவர்களுக்கு தேவையானதெல்லாம் செய்து முடித்து அப்புறமா சன்னியாசம் வாங்கிகொள்வர். ப்ரம்மசர்யத்திலேந்து நேரடியா சன்னியாசம் போகிறது ஒரு விதத்தில் நல்லது - முன்னேற்றம் சீக்கிரமா இருக்கும்னாலும்- அனுபவிக்காம விட்டதை பத்தி அப்பப்ப நினைவு வந்து மனசு கலைய வாய்ப்பு இருக்கவே இருக்கு. குறிப்பா இந்த கலி யுகத்திலே. சன்னியாசின்னு ஆரம்பிச்சு ஏதோ ஒரு மடம் போல அமைப்புன்னு போய் அங்கே விரும்பத்தகாத விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறதை பாத்து கொண்டுதானே இருக்கோம்?

ஞான யோகம் போகணும்ன்னு ஆசை இருந்தா மட்டும் போதாது. அத செய்ய யோக்யதை- சக்தியும் வேணுமே?

ந ஹி கஷ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்।
கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:॥ 3.5 ॥


[வெண்பா முன்னதில் பின் பாகம் இதை சொல்லிவிட்டது]

(ஸந்தேஹமின்றி எந்த ஒருவனும் எக்காலத்திலும் ஒரு கணம்கூடச் செயல் புரியாமல் இருப்பதில்ல. ஏனெனில் மனித ஸமுதாயம் அனைத்தும் ப்ரக்ருதியிலிருந்து உண்டான குணங்களால் தன்வசமிழந்து வேறு வழியின்றிச் செயல் செய்யத் தூண்டப்படுகிறன.)

சும்மா இருக்கிறது என்கிறது சுலபமில்லை. பிறந்த குழந்தை கூட கை காலை உதைக்கிறதே? அதுக்கு என்ன தெரியும்? நாம் எல்லாருமே அறியாமலே பல விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் துடிக்கிறதுலேந்து, மூச்சு விடுகிறது போல பலது.

ஒரு கதை. ஒரு கோவில். புதுசா ஒரு மணியக்காரர் வந்தார். எல்லா விஷயங்களையும் ஒரு அலசல் செய்யணும்ன்னு பார்த்தார். கோவில்ல நடக்கிர ஒவ்வொரு காரியத்தையும் கவனித்தார்.

சுவாமிக்கு நைவேத்தியம் செஞ்ச பிறகு பிரசாத உருண்டை வினியோகத்தை பாத்தார். ஏதோ ஒரு நியமத்தில அதை எல்லாம் வினியோகிச்சாங்க. சும்மா கோவில் தூண்ல சாஞ்சு கொண்டு இருந்த ஒத்தனுக்கும் கொடுத்ததை பாத்தார். அப்புறமா அர்ச்சகரை கூப்பிட்டு "யார் அது? ஏன் கொடுத்தீங்க?" ன்னு கேட்டர். "அவர் ஒரு சாது. ரொம்ப நாளா கொடுத்து வரோம்'" ன்னு சொன்னாங்க. எதுக்கு தண்டமா இப்படி கொடுக்கிறீங்க, நிறுத்துங்கன்னு உத்திரவு போட்டார்.

அடுத்த நாள் சாதுவுக்கு உருண்டை கிடைக்கலே. என்ன விஷயம்ன்னு விசாரிச்சார். மணியக்காரர் "ஏன் சும்மா உக்காந்து இருக்கிறவனுக்கு பிரசாதம்? கொடுக்காதேன்னு உத்திரவு போட்டுட்டார்" ன்னு பதில் கிடைச்சது. "அப்படியா? அந்த மணியக்காரரை கூப்பிடு" ன்னார். மணியக்காரரும் வந்தார். "ஏம்பா, நீதான் சும்மா இருக்கிறவனுக்கு பிரசாதம் கொடுக்காதேன்னு சொன்னாயா?” ன்னு கேட்டர்.” ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” "சரி, இங்க வா. இந்த தூண் பக்கத்திலே கொஞ்ச நேரம் அசையாம சும்மா உக்காரு" ன்னார். மணியக்காரரும் உக்காந்தார். நாலு ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. அவருக்கு இருப்பு கொள்ளலே. அசைய ஆரம்பிச்சார். "அட அசையறியே? நான் சும்மாதானே உக்கார சொன்னேன்?” திருப்பி முயற்சி பண்ண மணியக்காரருக்கு இது கஷ்டம்ன்னு புரிஞ்சு போச்சு. அர்ச்சகரை பாத்து "இனிமே இவருக்கு 2 உருண்டை கொடுங்க" ன்னு உத்திரவு போட்டார்.

அது மாதிரி யாராலேயும் ஒரு வேலையும் செய்யாம இருக்க முடியாது.

Thursday, October 23, 2008

கண்ணன் காட்டிய கர்ம வழி -1



பையர் பத்தி மொக்கை போடப்போய் வேற எங்கேயோ போயிட்டோம். இப்ப திருப்பி கர்ம வழிக்கு வரலாமா?
:-))
-------
மறந்திருக்க மாட்டேங்கன்னு நினைக்கிறேன். பகவத் கீதைல 2 ஆம் அத்தியாயத்திலே கண்னன் சில விஷயங்கள் சொன்னான். இப்ப 3 ஆவது அத்தியாயத்திலே மேலே கர்ம யோகத்தைப்பத்தி சொல்லப்போறான்.

முன்னாலே அர்ஜுனன் கேட்டான் ஏம்பா கர்ம யோகத்த விட ஞான யோகம்தானே உசந்தத்துன்னு சொன்னே? பின்ன ஏன் கோரமான யுத்தம் என்கிற கர்ம யோகத்தில ஈடுபடுன்னு எனக்கு சொன்னே?
39 -52 வரை கர்மயோகம் சொல்லி இப்படி கடைபிடிச்சா ஞான யோகம் வரும். அப்படி செஞ்சா ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்கும்ன்னு கண்ணன் சொன்னான். இது கீழ் தளத்திலேந்து பத்தாம் மாடிக்கு போனா அங்கேந்து 20 ஆம் மாடிக்கு போலாம் என்கிறது போல.
ஆனா அர்ஜுனன் கேட்கிறது ஏன் கீழ் தளத்துலேந்து 20 ஆம் மாடிக்கு நேரா போகக்கூடாது என்பது போல. அதுக்கு கண்ணன் பதில் சொல்கிறான். பல விதமாயும் மனிதர்கள் இருக்காங்க. அவங்க அவங்களுக்கு தகுந்தாப்போலதான் வழியும்.

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ॥ 3.1 ॥
வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிஷ்சித்ய யேந ஷ்ரேயோ அஹமாப்நுயாம்॥ 3.2 ॥

நாதா கருமத் தினன்றாகிற் புத்தியினை
யேதாக விக்கருமத் தேவுதி- சூதார்ந்த
வுன்னரையென் னுண்மயக்கு மொன்றுரையென் னன்றியெனத்
தன்னுரைசெய் தான்விசயன் றான்.

நாதா கருமத்தின் அன்றாகில் புத்தியினை
ஏதாக இக்கருமத்து ஏவுதி?- சூதார்ந்த
உன்னரை என்னுள் மயக்கும். ஒன்றுரையி என்னன்றி எனத்
தன்னுரை செய்தான் விசயன்தான்.

(அர்ஜுனன் சொன்னார்: " ஜனார்தன! கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது என்று உங்களால் கருதப்பட்டால் கேசவ! பின்னர் என்னை பயங்கரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்துகிறீர்கள்?
குழம்பிய போன்ற பேச்சினால் என் புத்தியைக் கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே! எதனால் நான் மேன்மையை அடைவேனோ அந்த ஒன்றைத் தீர்மானித்துக் கூறுங்கள்.)

சாங்கிய யோகத்திலே பகவான் முக்கியமா ஞான யோகத்தை சொன்னார். நடுவில கொஞ்சம் கர்ம யோகத்தை சொன்னார். ஞானியைப்பத்தியும் ஸ்திதப்ப்ரக்ஞன் என்று சொல்லும்போது ஞானியோட லக்ஷணங்களையும் சொன்னார். அதோட கர்மயோகம் மட்டம் என்று தொனிக்கிற மாதிரி வேற சொன்னார். அதனால அர்ஜுனன் கேட்கிறான்: கர்மங்கள் மட்டம்ன்னு சொல்லிட்டு ஏன் அதில போக சொல்லறே? நான் ஞானியா போகிறேன் என்கிறான் அர்ஜுனன். கோரமான கர்மவை வேற சொல்கிறானே! யுத்தம் செய், கொல்லு என்கிறான்.

கண்ணன் தெளிவாதான் சொல்கிறான். சும்மா கேட்கிறவனை கலக்கறத்துக்காக சொல்லலை. "தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்" (ப.கீ 2:49) என்று சொன்னதுதான் கொஞ்சம் குழப்பும். ஞான யோகத்துக்கு கர்மா வெகு தூரம்ன்னு சொல்லிட்டான். அப்ப அதில ஏன் ஈடுபடச்சொல்றான்?

எந்த ஒரு கர்மாவை தூரம்ன்னு சொல்லி இருக்கு? பலனை கருதி செய்கிற கர்மாவைதான் அப்படி சொன்னது. சம புத்தியோட செய்கிற எல்லா கர்மாவுமே சரிதான். கர்ம யோகத்தையே தூரம்ன்னு சொல்லலை. ஸ்தித ப்ரக்ஞன் ஆவது ஞான யோகத்தாலேயும் முடியும், கர்ம யோகத்தாலேயும் முடியும்.

ஸ்ரீபகவாநுவாச

லோகே அஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்॥ 3.3 ॥


அண்ணலவன் கேட்க வதனியல்க ளங்குரைத்தா
னெண்ணமருஞ் சாங்கியருக் கின்னறிவு- வண்ணநிகழ்
சீருடைய யோகிக்குச் செய்கரும மென்றிரண்டும்
பேருலகிற் சொன்னேன் பிரித்து.

அண்ணல் அவன் கேட்க அதன் இயல்கள் அங்கு உரைத்தான்
எண்ணம் அருஞ் சாங்கியருக்கு இன்னறிவு- வண்ண நிகழ்
சீருடைய யோகிக்குச் செய் கருமம் என்று இரண்டும்
பேருலகில் சொன்னேன் பிரித்து.

(ஸ்ரீ பகவான் கூறினார்: " பாவமற்றவனே! இவ்வுலகில் என்னால் இருவகைகள் கொண்ட நிஷ்டை முன்பே கூறப்பட்டன. அவற்றில் ஸாங்க்ய யோகிகளுக்கு நிஷ்ட ஞானயோகத்தினாலும் யோகிகளுக்கு நிஷ்ட கர்மயோகத்தினாலும் அமைகின்றன.)

அட, ஞான யோகத்தை பத்தி சொன்னா ஏன் குழப்பிக்கிற? இந்த உலகத்திலே எல்லாரும் ஒரே மாதிரியா இருக்காங்க? கர்ம யோகம் செய்யவும் ஞான யோகம் செய்யவும் இரண்டு வித தகுதி உள்ளவர்கள் இருக்கிறதால பிரிச்சு சொன்னேன்.

தத்வ விசாரம் செய்கிறவர்களுக்கு திட வைராக்கியம் உள்ளவர்களுக்கு (பற்றை விட்டவங்களுக்கு) ஞான யோகமும்; செயல் படுகிறவர்களுக்கு - பற்றை திடமா விடாதவங்களுக்கு -மந்த வைராக்கியம் உள்ளவர்களுக்கு- கர்ம யோகமும் சொன்னேன்.
இரண்டும் ஆத்ம சாக்ஷாத்காரம் என்கிற பலன் ஒண்ணிலேயேதான் கொண்டு விடும்.

அர்ஜுனன் இங்கே குழம்பிதானே இருக்கான். தன் கடமையான யுத்தத்தை செய்ய மாட்டேன் என்றுதானே வில்லை கீழே போட்டுட்டு உக்காந்து இருக்கான். அதனால இவன் கர்ம யோகத்துக்குதான் அதிகாரி. அதே மாதிரி நாமும் பற்று இல்லாம போய், அதுக்குன்னு ஒரு காலம் வர வரை ஞான யோகத்தை பத்தி ரொம்ப குழப்பிக்க வேணாம்.

கர்ம யோகம் செய்ய செய்ய சித்த சுத்தி - அதாங்க மனசு சுத்தமாகி- உலக விஷயங்கள்லே பற்று போகும். மனசு பகவானை பற்றி நிக்கும். இதானே வைராக்கியம்? அது வந்தாச்சுன்னா ஞான யோகத்திலே கொண்டு விடும். அதனால நாம் யார் என்கிற ஞானம் வந்துடும்.


Wednesday, October 22, 2008

நெரூர் -7




சரி, இப்போது ஆரம்பித்த பையர் கதையை கொஞ்சம் வைண்ட் அப் செய்ய வேண்டியதுதான் பாக்கி.
எங்கே விட்டோம்? நெரூர் பாடசாலை திட்டம் கைவிடப்பட்டதாக ஆகிவிட்டது. இதற்கு முன்பே எங்கள் வழிகாட்டி பெரியவரை பார்த்து பேசிய போது " ஏண்டா, உனக்கு பகவானே பெரிய வேலையை வைத்து கொண்டு இருக்கிறான். இங்கே போகிறேன் என்கிறாயே" என்றார். பிறகு சில விதிகளை சொல்லி இருந்தார். ஒருவரிடமிருந்து மட்டுமே தனம் வருவதை அவர் விரும்பவில்லை போல இருந்தது. இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது பகவான் செயலே என்று நினைத்துக்கொண்டோம்.

நெரூர் பற்றி கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் மகா பெரியவாள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கு விஜயம் செய்தார். அதற்கு ஏற்பாடு செய்தது - ஒரு வக்கீலைப்பத்தி சொன்னேன் அல்லவா? அவருடைய தகப்பனார்தான். அவர்கள் சிருங்கேரி மடத்தை ஆஸ்ரயித்தவர்களாக இருந்தாலும் மகாபெரியவர் மேல் ஒரு அபிமானம், மரியாதை இருந்ததால் தங்கள் ஊருக்கு அர வேன்டும் என வேண்டி அப்படியே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வருந்தும்படி என்ன நடந்தது என்றால் மற்ற ஊர் ஜனங்கள் சிருங்கேரி மடத்து அபிமானிகளாக இருந்து, இந்த வரவேற்பில் கலந்து கொள்ள தயங்கி வீட்டுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டார்களாம். கேள்விப்பட்ட பெரியவர் நேரடியாக அதிஷ்டானத்துக்கே போய் அங்கேயே 4 நாட்கள் முகாம் செய்து விட்டார். மகா கருணை படைத்தவர் என்று பலரும் போற்றும் அந்த மகான் தவறாக எதையும் நினைப்பரா? இருந்தாலும் ஒரு உத்தம சன்னியாசிக்கு இப்படி அவமரியாதை செய்வது தானே அதன் பலனை கொடுக்கும், இல்லையா? அன்றிலிருந்து ஆரம்பித்தது ஊர் ஜனங்களுக்கு கெட்ட காலம். கொஞ்சம் கொஞ்சமாக க்ஷீணமாகி இப்போது மரம் பட்டு போனதும் முற்றிவிட்டது. அதுதான் அக்கிரஹாரம் இப்படி போனதுக்கு காரணம் என்று தெரிந்துகொண்டோம்.

பிறகு வாளாடி என்ற கிராமத்திலிருந்து அழைப்பு வந்தது. இதற்குள் பெரியவா பார்க்க விரும்புவதாகவும் ஒரு முறை வந்து போகும்படியும் உத்திரவாயிற்று. பையர் வாளாடி போய்விட்டு பெரியவா உத்தரவை தெரிந்து கொண்டு பின்னால் சொல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு வந்துவிட்டார்.

காஞ்சி சென்று பெரியவாளை தரிசித்தோம். நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார். பின் "நீ பழூர் போயேன். அங்கே உன் அக்னிஹோத்திரம், அனுஷ்டானங்கள் எல்லாத்துக்கும் தோதாக இருக்கும். 4 வீடுகள் இருக்கு. எதை வேணுமானாலும் எடுத்துக்கோ. பசுமாடு கண்ணு வெச்சுகிறதானாலும் சௌகரியமாகவே இருக்கும். பணமும் பிரச்சினை இல்லை" என்று சொல்லிவிட்டார். சரி என்று சொல்லிவிட்டு பையர் ஒரு விண்ணப்பம் போட்டார். "மடத்திலேயே நெரூரில் பாடசாலை அமைக்கிற திட்டம் இருக்கிறதாக கேள்விபட்டேன். அப்படி ஒரு வேளை அமைந்தால் அங்கே எனக்கு மற்றிக்கொடுக்க வேண்டும். " பெரியவாளும் சிரித்துக்கொண்டு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அந்த வார கடைசியிலேயே பழூர் (இது திருச்சியில் இருந்து கரூர் மார்க்கத்தில் சுமார் 12 கி.மீ) போய் பார்த்துவிட்டோம். அங்கே ஒரு வீட்டை தேர்ந்தெடுத்துவிட்டு அடுத்து ஆடி மாதம் ஆரம்பிக்க இருந்ததால் பால் காய்ச்சி சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம். எல்லாம் பழைய வீடுகள் ஆனதால் நிறைய பழுது பார்க்க வேண்டி இருந்தது. தேவையான மாறுதல்களை கேட்டு தெரிந்து கொண்டனர். நாங்களும் சில வருஷங்கள் இங்கே இருக்க பெரிசா ஒண்ணும் வேண்டாம் என்று அத்தியாவசிய மாறுதல்கள் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.

ஆனால் ஏனோ இந்த மாற்றங்கள் சமாசாரம் இழுத்துக்கொண்டே போயின. பல திட்டங்கள் போடப்பட்டு கைவிடப்பட்டன. திடீரென்று காஞ்சி மடத்திலிருந்து வந்து போகும்படி உத்தரவாயிற்று. பையர் அங்கே போனால் " நெரூரில் இன்னொரு வீடு மடத்துக்கு கையகம் ஆகிவிட்டது. நீ அங்கேயே போய் இரு. ஒவ்வொன்றாய் நடந்து பாடசாலை வந்துவிடும்" என்று சொல்லிவிட்டார்.

பழூருக்கு வேறு ஆசார்யனை அனுப்பிவிட்டார்கள். ஆவணி சிருங்கேரி மடத்துக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து இருக்கிறார்கள். அக்னி ஹோத்திர சாலயை கட்டி ஒரு மோட்டாரும் போட்டு கொடுத்து இருக்கிறார்கள். விஜய தசமிக்கு பால் காய்ச்சி சாப்பிட்டுவிடு என்று உத்திரவானதால் பையர், அவர் மனைவி, நான் 3 பேரும் போய் அப்படியே செய்தோம். 4 நாட்கள் தங்கி பங்களுரில் இருந்து பழூர் போய் அங்கே கிடப்பில் கிடந்த பெட்டி படுக்கை எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி ஒருவாறு ஒழுங்கு செய்துவிட்ட பின் நான் மட்டும் திரும்பி வந்தேன்.

4 நாள் காவேரி குளியல் சுகமாக இருந்தது! நல்ல வேகமாகவே நீரோட்டம். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டி இருந்தது. துணிகளை கொண்டுபோய் கொஞ்ச நேரம் தண்ணியில் அமுக்கி பிடித்தால் சுத்தமாக ஆகிவிட்டன!
வெய்யிலோ வெய்யில். கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போனால் கீழே வந்தால் குளிக்கலாம் போல இருந்தது. கிளம்பும் முன் நாள் மழை ஆரம்பித்துவிட்டது.

நெரூரில் கிடப்பில் கிடந்த ஒரு ப்லாட் பதிவும், போன வாரம் ஆகிவிட்டது. இனி கட்டிட வேலை ஆரம்பிக்க தடை ஏதும் இல்லை.

வில்வ மர சமாசரத்தை என் குருவை பார்த்தபோது பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே உனக்கும் இதற்கும் என்ன உறவு என்று தெரியாது. இப்படி கேள்விப்பட்டு பார்த்தாகிவிட்டதல்லவா? இதை சும்மா விடக்கூடாது. என்ன செய்து அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி செய் என்று சொல்லிவிட்டார்.

சரி என்று புகளூர் நண்பருக்கு போன் செய்தேன். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த சில நண்பர்களுடன் பேசி இருந்தார். நெருரில் ஒரு மீட்டிங் கூப்பிட்டு "பிரச்சினை கல்தளம் அமைத்ததும் பால் அபிஷேகம் செய்ததும்தான். இதை சரி செய்ய வேண்டும்" என்று பேச எல்லாரும் " அப்படியா, தெரியவே தெரியாதே" என்று சொல்லி ஒப்புக்கொண்டனர். கல்தளம் அமைத்த நபரை கரூரில் பார்த்து பேச அவரும் மனம் வருந்தி உடனே சரி செய்துவிடுங்க என்று அனுமதி கொடுத்துவிட்டார். அரசு தரப்பிலும் ஆட்களை பார்த்து பேசி ஒண்ணும் பிரச்சினை வராமல் ஏற்பாடு ஆகிவிட்டது.

எல்லாமே நல்லா நடக்குமா? இப்போது ஏதோ ஒரு தடை. நண்பரும் பிஸி ஆகிவிட்டார். சமாசாரம் ஆறின கஞ்சி ஆகிவிட்டது. திருப்பி கிளப்ப வேண்டும்.

இந்த முறை போய் பார்த்த போது வில்வ மரம் துளிர் விட்டு இருக்கிறது! அடி மரத்தில் நான்கைந்து இடங்களிலேயே! சுப சகுனம் என்று நினைத்துக்கொண்டேன்.

Tuesday, October 21, 2008

நெரூர் -6



சுற்றியது போதும் என சங்கல்பித்தாரோ என்னவோ நெரூர் வந்து சேர்ந்தார். மனதால் மைசூர் புதுக்கோட்டை தஞ்சை அரசர்களை நினைக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். "குகை அமையுங்கள். அதில் அமர்ந்த பின் சாமக்கிரியைகளால் மூடிவிடுங்கள்" என உணர்த்தினார். அழும் அரசர்களிடம் "மனதுதானே நினைக்கிறது? உடலை பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றார். "காவேரியில் கூடத்தான் புதைந்து கிடந்தேன். எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். கவலை வேண்டாம்" என்று உணர்த்த தேற்றிக்கொண்டனர்.

குகை தயாராக அதில் அமர்ந்து யோகத்தில் ஆழ, முறைப்படி குகையை மூடினார்கள். ப்ரம்மம் சொன்னபடியே 9 ஆம் நாள் அங்கு வில்வ மரம் தோன்றியது. பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வந்து சேர்ந்தது. அதை பன்னிரண்டு அடி கிழக்கே ப்ரதிஷ்டை செய்து கோவில் கட்டினர்.

மானாமதுரையில் ஒரு சாஸ்திரிகளும் கராச்சியில் ஒரு முஸ்லிம் பக்தரும் முன்னரே உடலை உகுக்கும் காலத்தில் தமக்கு தெரியப்படுத்த வேண்டும் என பலமாக வேண்டிக்கொண்டு இருந்தனர். சாஸ்திரிகள் அப்படி நடக்காவிட்டால் ப்ராணத்தியாகம் செய்வதாகவே சத்தியம் செய்து இருந்தார். இதே சமயம் அந்த இரண்டு இடங்களிலும் கூட கற்பிக்கப்பட்ட உடல்கள் தோன்றி உகுக்கப்பட்டு குகையும் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மானாமதுரையில் அவ்விடத்தில் வில்வ மரமும் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

சதாசிவர் சமாதி கொண்டு இப்போது சுமார் 220 ஆண்டுகள் ஆயின். சுமார் 120 வருடங்கள் முன் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தார். அவருக்கு தத்வ விசாரம் செய்து சித்தி ஏற்படுவதில் தடை இருந்தது. என்ன செய்வதென்று ஆலோசித்து நெரூர் சென்று ப்ரம்மேந்திராளை ஆராதித்தால் சித்தி ஏற்படும் என்று தெளிந்தார். நெரூர் நோக்கி பல்லக்கில் பயணித்து ரங்கநாதம் பேட்டை என்ற இடத்தை அடைந்தனர். அதற்கு மேலே பல்லக்கு போக முடியவில்லை. போகிகள் (பல்லக்கு தூக்குவோர்) யாரோ முன்னாலிருந்து தள்ளுவது போல் இருப்பதாக சொன்னார்கள். ஸ்வாமிகள் கீழே இறங்கி விழுந்து வணங்கி, ஒரு கை தூரம் முன் சென்று மீண்டும் விழுந்து வணங்குவதுமாக ஒன்றரை கல் நடந்து நெரூரில் ப்ரம்மேந்திரர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார். தன் சந்தேகங்கள் தீராமல் எழுந்திருப்பதில்லை என்ற உறுதியுடன் காலை காவிரி சென்று கடன்களை முடிக்க மட்டும் வெளி வந்து, மற்றபடி சந்தியிலேயே அமர்ந்து, அன்ன ஆகாரமின்றி தீவிர தவம் மேற்கொண்டார்.

மதிலுக்கு வெளியே 300 பேர்கள் என்ன நடக்கப்போகிறது என்றறிய கூடிவிட்டனர். மூன்றாம் நாள் இரவு இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. காலை வெளி வரும் போது சதாசிவரை துதித்து நாற்பத்தைந்து பாடல்கள் எழுதிக்கொண்டு வந்தார் ஸ்வாமிகள். ப்ரம்மேந்திரர் ப்ரத்தயக்ஷம் ஆகி சந்தேகம் தீர்த்தது உறுதியாயிற்று. அதிலிருந்து யார் சிருங்கேரி மடத்து பட்டத்துக்கு வந்தாலும் நெரூர் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து மூட்டையாக கொண்டு வந்த தனத்தை எண்ணிப்பாராமல் செலுத்திவிட்டு போவது வழக்கம்.

ப்ரம்மேந்திராள் இயற்றிய சாஸ்திரங்களும் கீர்த்தனங்களும் பல. கீர்த்தனங்களில் சர்வம் ப்ரம்ம மயம் என்று பாடுவார். ப்ரம்மேந்திரரின் சரித்திரத்தை கேட்டாலும் கீர்த்த்னங்களை கேட்டு அதன் பொருள்படி நடந்தாலும் கட்டாயம் மெய்ப்பொருளை அடைந்துவிடலாம் என்று நம்புகின்றனர். ப்ரம்ஹ சூத்ர வ்ருத்தி, ஆத்ம வித்ய விலாஸம், அத்வைத ரஸ மஞ்சரி, ப்ரம்ஹ தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா போன்ற கிரந்தங்களும் பஜே ரகுவீரம், பஜரே கோபாலம், மானஸ சஞ்சரரே, பிபரே ராம ரஸம் ஆகிய கீர்த்தனங்களும் குறிப்பாக அவர் படைப்புகளில் சொல்லப்படுகின்றன.

இந்த பதிவுகளில் கண்ட பல விஷயங்கள் நெரூர் கைலாஸ ஆஸ்ரமம் தவத்திரு சதாசிவானந்த ஸ்வாமிகளின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டன.
மேலும்
http://living.oneindia.in/yoga-spirituality/faith-mysticism/sadasiva-brahmendra-partii
http://www.geocities.com/profvk/gohitvip/sadasiva.html


Monday, October 20, 2008

நெரூர் -5



சதாசிவரின் சித்தம் வெளிமுகமாகிய ஒரு சந்தர்பத்தில் தன்னுடன் இளமையில் பயின்ற போதேந்திராளையும் அய்யாவாளையும் நினைத்தாராம். அவரை காண எண்ணி கோவிந்தபுரம் அடைந்து அதற்குள் சித்தம் அகமுகமாகிவிட அங்கிருந்த நாணல் புதர்கள் விழுந்து அப்படியே கிடந்தாராம். அய்யாவாள் வாரம் ஒரு முறை கோவிந்தபுரம் வருவார். அப்படி வரும்போது புதரில் கிடந்த சதாசிவரை பார்த்து அடையாளம் தெரியாமல் யாரோ ஒரு மகான் இப்படி இருக்கீறார். இவர் ஆசி கிடைத்தால் பாக்கியம் பெறுவோம் என்று நினைத்து சுற்றி வந்து வணங்கினார்; ஸ்தோத்திரம் செய்தார். அப்படியும் சதாசிவர் அக முகமாகவே இருந்துவிட்டார்.
அய்யாவாள் தன் குருநாதராகிய போதேந்திராளிடம் இதை சொல்ல அவரும் உடனே அப்படிப்பட்ட மகானுபாவரை உடனே தரிசிப்போம் என்று புறப்பட்டார். சுற்றி இருந்த புதர்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தீபம் ஏற்றி சாம்பிராணி புகையும் போட்டால் பகிர்முகப்படுவாரோ என்று அதையும் செய்தனர்.

சதாசிவர் அசையக்கூடவில்லை. போதேந்திராள் தன் யோக வலிமையால் ராம நாமத்தை அந்த உடலுக்குள் புகுத்தினாராம். ராம நாமம் கேட்டு விழித்துக்கொள்ளட்டும், பின்னால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து, "பிபரே ராம ரஸம்" என பாடலானார். இதனால் சற்றே பகிர்முகமானார் சதாசிவர். அடுத்து " கேலதி மம ஹ்ருதயே" என பாட, சதாசிவர் சப்த பேதத்தை திருத்தினார். இது சதாசிவமே என நிச்சயித்து பலவாறு புகழ்ந்து போற்றினார்கள். அதற்குள் பிரம்மம் அகமுகமாகிவிட்டது. (முன் நினைத்த வேலை முடிந்ததல்லவா? இருவரையும் கண்டாகிவிட்டது.) என்ன செய்தும் அவரை பகிர்முகப்படுத்தி மடத்துக்குள் கொண்டு செல்ல முடியவில்லை எனக்கண்டு அப்படியே விட்டு விட்டனர். சதாசிவரும் பிறகு எங்கோ போய்விட்டார்.

சதாசிவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலவாக சொல்லப்படுகின்றன. அவரா நிகழ்த்தினார்? ப்ரம்மத்துக்கு சங்கல்பமேது? அந்த உடல் முன்னிலையில் பல அற்புதங்கள் நடந்தன. தாக்க வந்த மூடர்கள் செயலிழந்து போயினர். பலரை தன் பார்வையாலேயே பிணி தீர்த்தார். " தாத்தா, திருவிழா காண வேண்டும் " என்று கேட்ட குழந்தைகளை கண நேரத்தில் மதுரை அழைத்து சென்று காண்பித்து திருப்பியும் கூட்டி வந்தார்.


யோனுத் பன்ன விகாரோ பாஹௌ மிலேச்சேன சின்ன பதிதேபி
அவிதித மமதாயாஸ்மை பிரணதிம் குர்ம ஸதாசிவேந்திராய

சதாசிவர் ஒரு முறை அகமுகமாக இருந்தபடியே நடந்து கொண்டு இருந்தார். எங்கே போகிறோம் என்ற உணர்வில்லாமல் ஒரு முஸ்லிம் அரசனின் அரண்மனைக்குள் நுழைந்தார். "யாராடா இவன்! அம்மணமாக இங்கே வருவது" என சினந்த மன்னன் பதில் வராததால் கோபம் கொண்டு கத்தியால் கைகளை வெட்டிவிட்டான். ஒரு கை கீழே விழ இன்னும் ஒன்று கொஞ்சம் ஒட்டிக்கொணடு இருந்தது. சதாசிவர் பாட்டுக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தார். மன்னனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. "இவர் யாரோ பெரிய மகான், தவறு செய்து விட்டோம்!' என்று உணர்ந்து கீழே கிடந்த கையை எடுத்துக்கொண்டு ஓடினான். சதாசிவரின் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். பகிர் முகப்பட்ட ப்ரம்மம் என்ன என்று கேட்டது. "பெரிய தவறு செய்தேன். மன்னிக்க வேண்டும்" என்றான் அரசன். "தவறு செய்தவனும் இல்லை; மன்னிக்கிறவனும் இல்லை போ!” என்றது ப்ரம்மம். "இல்லை! மன்னித்தால்தான் ஆயிற்று; இல்லாவிட்டால் வாளுக்கு இரையாவேன்" என்று கூற, "அப்படியா? என்ன தப்பு செய்தாய்?” என்றார். "உங்கள் கைகளை வெட்டிவிட்டேனே!” என்றழுதான் அரசன். "அப்படியா!” என்று கூறி வெட்டிய கையை வாங்கி பொருத்தியதும் அது சரியானது. "சரியாகிவிட்டது போ" என்று சொல்லி தன் வழியே நடந்தது ப்ரம்மம்.

இதைத்தான் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ப்ரம்மேந்திரர் அனுக்கிரகம் கிடைத்த பின் மேற்கண்ட படி பாடினார். "கைகளை மிலேச்சன் வெட்டிவிட்ட பின்னும் விகாரம் உண்டாகாததால் என்னுடையது என்ற எண்ணமே இல்லை. அப்படிப்பட்ட ஸதாசிவேந்திராய சற்குருவை நமஸ்கரிக்கிறேன்.”

Saturday, October 18, 2008

நெரூர் -4



கொடு முடிக்கு பக்கத்தில் அகத்தியம் பாறை என்ற ஒரிடத்தில் காவேரிக்கு நடுவே மையத்தில் ஒரு பெரும்பாறை உண்டு. பல சமயம் இந்த பாறை மீது அமர்ந்து சதாசிவர் தவம் செய்வார். தவம் செய்பவரை பெரியவர்கள் தொந்திரவு செய்யமாட்டார்கள். ஆனால் சிறுவர்கள் செய்யக்கூடுமாகையால் இப்படி ஆற்றின் நடுவே அமர்வார். ஒரு நாள் ஆற்றுவெள்ளம் அதிகமாகி இந்த பாறையையும் சதாசிவரையும் புரட்டிப்போட்டுவிட்டது. நீர் வற்றிய பின் சதாசிவரை தேடி தேடி அலுத்தனர் மக்கள்.

பல மாதங்கள் ஓடி முடிந்து வற்றி இருந்த ஆற்றில் கட்டிட வேலைக்காக மணல் எடுக்க வந்தனர் சிலர். ஓரிடத்தில் நல்ல மணல் கிடைக்கிறது என்று தோண்டவே ஆழமாக போன பின் மண்வெட்டியால் வெட்ட ரத்தம் வந்தது. பயந்து போனவர்கள் கிராம அதிகாரியை அழைத்துவர
அவர் இது சதாசிவ பிரம்மமாக்தான் இருக்க வேன்டும் என ஊகித்து சுற்றிலும் மணலை எடுக்கச்செய்யவே சதாசிவர் உணர்வு பெற்று எழுந்து நடந்து போய்விட்டாராம்.

புதுக்கோட்டை அரசரது காடுகளை அடுத்த வயல்களில் சதாசிவர் போய் கொண்டு இருந்த போது வைக்கோல் போர் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இது வழி இது வழி அல்ல என் ஆராயும் நிலையில் இல்லாத சதாசிவர் பாட்டுக்கு நேரே போக வைக்கோல் போர் இடையே மாட்டிக்கொண்டார். வேலையாட்கள் தெரியாமல் மேலும் மேலும் வைக்கோல் போட 10,000 போர்கள் போட்டுவிட்டனர். பிறகு பல மாதங்கள் கழித்து அது செலவழிந்து கீழே பார்க்க சதாசிவர் படுத்த நிலையிலேயே இருந்தார்.

இதை கண்டு அதிசயித்து மகாராஜாவிடம் போய் சொன்னார்கள். மகாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் சாதுக்களிடம் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவர். ராஜ்ய பரிபாலனத்தில் நிகழும் கேடுகளை சாதுக்களால் தீர்க்க முடியும் என நம்பியவர். ஒரு பல்லக்கை கொண்டுவரச்சொல்லி குதிரை மீது ஏறி விரைந்து சென்று ப்ரம்மத்தை தரிசித்தார். சுற்றி வந்து வீழ்ந்து வணங்கி அரண்மனை வருமாறு வேண்டியும் ப்ரம்மம் ஏதும் சலனமில்லாமல் இருந்தார். மேலும் வற்புறுத்த திருவரங்குளம் காட்டுள் சென்றுவிட்டார். முயற்சியில் தளராத ராஜா இவரது அருகாமையில் ஒரு குடிசை அமைத்து சதாசிவருக்கு சேவை செய்து வரலானார். இடையிடையே அரண்மணை சென்று ராஜாங்க வேலைகளை கவனித்துவிட்டு மீண்டும் சேவைக்கு வந்துவிடுவார். இப்படி 8 வருடங்கள் ஓடின. ஒரு நால் தனக்கு மந்திர தீக்ஷை தர வேண்டும் என மிகவும் வேண்ட சதாசிவர் மணலில் எழுதிக்காண்பித்தார். ராஜாவும் அதை பாடம் செய்து கொண்டு அந்த மணலை அரண்மணைக்கு கொண்டுவந்து தங்கப்பேழையில் வைத்து பூஜை செய்யலானான். இந்த மணல் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது.

சாஸ்திர சந்தேகங்களை ராஜா கேட்க, பதில் வராததை கண்டு இனி தொந்திரவு செய்யக்கூடாது என நிச்சயித்து எங்கு சென்றாலும் கடைசியில் சரீரத்தை உகுக்கும் காலத்தில் தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை தரும்படி கேட்டுக்கொண்டான். சதாசிவரும் இசைவை தெரிவித்து தகுந்த சாஸ்திர குருவையும் அடையாளம் காட்டி தன் போக்கில் போகலானார்.

கரூரில் வசித்த சாஸ்திரிகள் சிலரும் கனபாடிகள் சிலரும் சதாசிவரை அணுகி திருப்பதி ஸ்தல யாத்திரை செய்வது மிக சிரமமாக இருக்கிறது. இந்த தான் தோன்றி மலையில் உள்ள அப்பரை தரிசித்தால் வெங்கடாசலபதியை தரிசித்த புண்ணியமுண்டாக வேண்டும் என வேண்டினர். சதாசிவரும் சந்தோஷமாக அங்கே சென்று பூஜை செய்து ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்று எழுதி அங்கே பிரதிஷ்டை செய்தார்.

தஞ்சைக்கு அருகே புன்னை காடுகள் இருந்தன. தஞ்சை ராஜா ராமேஸ்வரம் ஸ்தல யாத்திரை செய்து திரும்பும் போது அந்த புன்னை காடுகள் அருகில் தங்கி இருந்த போது அவருடைய குழந்தைக்கு உஷ்ணம் அதிகமாகி கண்ணிலிருந்து ரத்தமே வந்தது. இது சரியாக வேண்டுமென சமயபுரம் மாரியம்மனுக்கு ராஜா பிரார்த்தனை செய்ய அன்றிரவு " நான் இங்கேயே இருக்க ஏன் சமயபுரத்துக்கு வருவதாக பிரார்த்திக்கிறாய்?” என்று அன்னை கேட்டாள். அட, இது தெரியாமல் போயிற்றே, என் ராஜ்ஜியத்திலேயே இருக்கிறாளா என்று நாலாபுறமும் ஆட்களை அனுப்பி தேடினான். தேடியவர்கள் இங்கே ஒரு புற்றுக்கு சிறுவர்கள் வேப்பிலை வைத்து மாரியம்மன் என்று விளையாட்டாக வழிபடுவது தவிர கோவில் எதுவும் இல்லை என சொன்னார்கள்.

மகாராஜா அந்த புன்னை காடுகளை சுற்றி வந்தார். அங்கே ஏதோ விசேஷம் இருப்பதாக தோன்றவே உள்ளே நுழைந்து தேடினார்கள். ஒரு இடத்தில் சதாசிவர் அமர்ந்து இருப்பதை பார்த்து மகிழ்ந்து வனங்கி எழுந்து " இங்கே மாரியம்மன் கோவில் இருப்பதாக கனவு கண்டேன். ஆனால் என்ன தேடியும் ஒரு புற்றை தவிர ஒன்றும் தென்படவில்லை. என்ன செய்வது என்று சொல்ல வேண்டும்" என்று வேண்ட, சதாசிவர் "அந்த புற்றேதான் மாரியம்மன்" என்று எழுதிக்காட்டினார். "இப்படி இருந்தால் ஜனங்கள் எப்படி பக்தியோடு வழிபட முடியும்? நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்க சதாசிவரும் கோரோசனை, கஸ்தூரி, சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, அகில் சந்தனம், குங்குமப்பூ, பச்சைகற்பூரம் ஆகியவற்றை வாங்கி வரச்செய்து அந்த புற்று மண்ணிலேயே பிசைந்து மாரியம்மனை செய்தார். ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்றையும் எழுதி அம்மன் முன் வைத்து "இதற்கு பூஜை செய், குழந்தையின் கண் சரியாகும்" என்று தெரிவிக்க, அவ்வாறே செய்து பிரச்சினை தீர்ந்தது. தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்யவே இன்றளவும் பூஜை நடக்கிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டும் செய்கிறார்கள். அம்மன் பக்தர்கள் பலர் கனவில் தோன்றி தனக்கு புடவை சாற்றுமாறு சொல்வாள். அவர்களும் அப்படியே செய்து அவர்களது வேண்டுதல் கைவர பெறுவர். அபிஷேகம் நடக்கும் காலத்தில் அவற்றை நீக்குவார்கள். வெகு நேரம் பிடிக்குமாம்.

Friday, October 17, 2008

நெரூர் - 3



சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் (அட!) சோமநாத யோகியார் - பார்வதி தம்பதியர். சோமநாத யோகி சிறு வயதில் இருந்து பிரம்மசர்யத்தை கடைபிடித்து குண்டலினி யோகம் பயின்று சித்திகள் வரப்பெற்றவர். இவரது தாய் தந்தையர் புத்திரனுக்கு வயதாகிக்கொண்டே போகிறதே என்று கவலைப்பட்டு திருமணம் செய்து வைக்க முயல யோகியார் லேசில் சம்மதிக்கவில்லை. அப்பா உனக்கு திருமணம் செய்து வைத்தால் எங்கள் கடமைகளேல்லாம் நிறைவேற்றியவர்கள் ஆவோம். அதன் பின் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்து, வானபிரஸ்தம் அனுஷ்டித்து கடைதேறும் வழியை பார்க்க வேண்டும் என்று பலவாறு சொல்ல பின் யோகியாரும் இணங்கினார்.

திருமணத்திற்கு பிறகும் யோகியார் பிரம்மசரியத்தை கடைபிடித்துவர 15 வருடங்கள் சென்றன. சந்ததி குறித்து ஒரு சிந்தனையும் இல்லாது இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட பார்வதி அம்மை " சுவாமி திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகின்றன. ஒரு சத்புத்திரனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்களே என்று கேட்க "உன் வாயால் சத் புத்திரன் என்று வந்துவிட்டதா? சரி. அப்படி நடக்க வேண்டுமானால் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்ய வேண்டும். உடம்பின் ஒவ்வொரு அணுவும் ராம நாமம் சொல்ல வேண்டும். அப்படி ஆனால்தான் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும். அப்படி பட்ட நேரத்தில் கர்ப்பம் தரித்தால் அதில் ஒரு மகரிஷி வந்து புகுவார். அது நாட்டுக்கு நல்லது" என்று சொல்ல அம்மையும் இசைந்து மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்து வரலானார்.

ஸ்தல யாத்திரை செய்து ராமேஸ்வரம் சென்றபோது கனவில் உனக்கு சத் புத்திரன் உண்டவான் என்று ராமநாதர் சொல்ல விழித்ததும் யோகியார் தானும் அதே கனவை கண்டதாக சொல்லி வீடு திரும்பினர். இறைவன் ஆணைப்படியே 10 ஆம் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிவராமகிருஷ்ணன் என பெயரிட்டனர். குழந்தை 3 வயதை எட்டும் முன்னேயே யோகியார் இமயத்துக்கு தவம் செய்ய போய்விட்டார்.

சிறு வயதிலேயே வேதம் படிக்க அனுப்பிவிட்டார்கள். அதி புத்திசாலியாகையால் மிக விரைவில் 4 வேதங்களும் கற்றுக்கொண்டுவிட்டார். அத்துடன் சாஸ்திரங்களும் கற்றார்.
இவரது திறமையை பார்த்த உள்ளூர் சாஸ்திர விற்பனர்கள் மேற்கொண்டு சாஸ்திரம் வாசிக்க திருவீசைநல்லூர் வேங்கடேச அய்யாவாளிடம் அனுப்பச்சொல்லி வேண்டினர். ஆனால் அன்னை அவருக்கு தக்க ஒரு மணப்பெண்ணை தேடி திருமணம் செய்து வைத்தார். பெண்ணுக்கு 5 வயதே ஆனபடியால் உரிய வயது வந்த பின் கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு ஆகியது. எப்படியோ இப்போது திருவீசைநல்லூர் போக அனுமதி கிடைத்துவிட்டது.

பாடம் சொன்ன அய்யாவாளுக்கு வியப்பு மேலிட்டது. சாதாரணமாக ஒருவர் பாடம் கற்று அதை அசை போட்டு புரிந்து கொள்வர். அனுபவம் பெறும் முறைகளையும் கற்க வேண்டும். ஆனால் சிவராம க்ருஷ்ணனுக்கோ பாடம் கேட்கும் போதே அனுபூதி கிடைக்கிறது! அனுபவத்தின் முதிர்ந்த நிலை அடைகிறான். இவனை இப்படியே விடக்கூடாது என்று ஸ்ரீமடாதிபதி பரமசிவேந்திரரிடம் (இவர் அதிஷ்டானம் திருவெண்காடு அருகில் உள்ளது) இவனை கொண்டு விட்டார். சில மாதங்களிலேயே அத்யாத்ம சாஸ்திரங்களை கற்று தேர்ந்தான் சிவராமன். ஏக சந்த க்ராஹி என்பார்கள்- ஒரு முறை கேட்டாலே நினைவில் இருத்திக்கொள்ள முடியும். அப்படி ஒரு சக்தி - இல்லை, - புரிவதும் நிகழ்வதால் அதுக்கும் மேலே- இருந்தது சிவராமனுக்கு. குருவே சிலாகித்த சிஷ்யனாக விளங்கினார்.

இந்த நிலையில் மைசூரில் அரசவையில் சரியான வித்வான் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்கள். சிவராமன் புகழை கேள்விப்பட்டு பரமசிவேந்திரரிடம் விழுந்து வணங்கி மைசூர் ஆஸ்தான வித்வானாக அனுப்பும் படி கேட்க அவரும் நாட்டு நலன் கருதி இசைந்தார். மைசூர் ராஜாவின் சந்தோஷத்துக்கு அளவில்லை! வருகிற எல்லா வித்வான்களும் இவராலேயே பரீட்சிக்கப்பட வேண்டும்; இவர் சொல்கிற சன்மானம்தான் தர வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. சிவராமனுக்கோ அத்தனை கலைகளும் அத்துப்படி. ஒரு ராகம்பாடினால் அது சுத்தமாக இல்லையென்றால் கண்டுபிடித்துவிடுவார். சாஸ்திரம் பற்றி கேட்கவே வேண்டாம். இவரிடம் பரிசு வாங்க வித்வான்கள் சிரமப்பட்டு போயினர்.

தஞ்சையிலிருந்து ஒரு விதவான் கோபாலகிருஷ்ண சாச்திரி என்பவர் சிவராமனை வென்று ஆஸ்தான வித்வான் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிளம்பிப்போய் இவரை கண்டவுடன் விழுந்து வணங்கி "குருவே தங்களுக்கு சேவை செய்ய வந்து இருக்கிறேன்" என்றாராம்! சேவையில் சில காலம் போன பின் கோபாலக்ருஷ்ணன் பரம குருவை சந்திக்க வேண்டி கேட்க சிவராமனும் பரமசிவேந்திராளை சந்திக்கும் விதி முறை, வழி, இடமெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியே பரம குருவை சந்தித்த கோபாலர் " சிவராமக்ருஷ்ணர் தங்கள் சிஷ்யர்களிலே மிக உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் வரும் வித்வான்களை வாதத்தில் வென்று வெற்றி அடைவதிலேயே குறியாக இருக்கிறார். யாருக்கும் விரும்பிய பரிசு கிடைப்பதில்லை. இதனால் ராஜ்யத்துக்கு அவப்பெயர். மேலும் இவர் இதிலேயே கவனமாக இருப்பதால் தவம் செய்ய நேரம், இடம் இல்லை. இவர் வெளியேறி தவம் செய்தால் இவர் ராஜா முன் கைகட்டி நில்லாமல் இவரிடம் மகாராஜாக்கள் கைகட்டி காத்து நிற்பர்" என்ற ரீதியில் சொல்லவே, இதன் உண்மையை உணர்ந்து பரமசிவர் " நான் தரிசிக்க விரும்பியதாக கூறு" என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதை கேள்விப்பட்ட சிவராமன் மிக வருந்தினார். ஒரு குரு சிஷ்யனை தரிசிப்பதாவது! அப்படி சொன்னால் என்ன ஒரு வருத்தம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

வந்து வணங்கிய சிவராமனை கண்ட பரமசிவேந்திரர் " ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே" என்று கூற அந்த கணத்திலிருந்து இனி பேசுவதில்லை என்று உறுதி கொண்டுவிட்டார். குருநாதரும் சன்னியாசம் கொடுத்து "இனி பிரியமான இடம் சென்று தவம் செய்" என்று சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். (இதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம்) தவம் செய்ய ஏகாந்த இடத்தை தேடி நெரூர் வந்து சேர்ந்தார் சதாசிவர். யோகம் பயின்று அனைத்து யோக சித்திகளும் கைவரப்பெற்று மேலும் தவம் செய்து ப்ரம்ம மாகவே ஆகிவிட்டார்.

நெரூர்-2



நெரூர் அக்கிரஹாரம்- இன்றைய நிலைமை:

சிறிய, கொஞ்சம் பெரிய கிராமங்களை தாண்டி நெரூர் போய் சேர்ந்தோம். நேரடியாக பிரம்மேந்திராள் அதிஷ்டானத்துக்கு போனோம். நல்ல கடுமையான வெயில். புகளூர் போன நண்பர் அப்போதே வெயிலைப்பத்தி புகார் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அதிகமாக சொல்கிறாரோ என்று நினைத்தேன். இல்லை என்று தெரிந்தது.

சமீபத்தில் கட்டிய கட்டிடங்கள். நுழைவாயில் அருகில் பூந்தோட்டம். சற்று உள்ளே சென்று கோவிலின் வாசல். சற்றே முன் குருக்கள் வெளியே போய்விட்டார் என்றார்கள். நல்ல வேளையாக நடை சாத்தவில்லை. ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் அங்கே தொண்டு செய்து வருகிறார். அவர் எங்களை அழைத்துப்போய் சுற்றிக்காட்டினார். நேரடியாக உள்ளே நுழைய இருப்பது காசி விஸ்வநாதர் சன்னதி. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. பிரம்மேந்திராள் சித்தி ஆகும் முன் இந்த இடத்தில் ஒரு குகை அமையுங்கள். என்று சொல்லி அங்கு அமர்ந்துவிட்டார். "அங்கே ஒரு வில்வ மரம் ஒன்பதாம் நாள் முளைக்கும்: சித்தி ஆன 12 ஆம் நாள் காசியில் இருந்து ஒரு பிரம்மசாரி ஒரு சிவலிங்கத்துடன் வருவான். அந்த சிவலிங்கத்தை இந்த உடல் அமரும் இடத்திலிருந்து 12 அடி தூரத்தில் கிழக்கே பிரதிஷ்டை செய்யுங்கள்" என்று தெரிவித்ததாக சொல்கிறார்கள். அதே போல நடந்தது. புதுக்கோட்டை மகாராஜா சுற்று சுவர் எழுப்பினாராம்.

வலது பக்கம் அம்பாள் சன்னதி. 90 டிகிரி கோணத்தில். இவர்களை வணங்கி சுற்றிக்கொண்டு பின் பக்கம் போனால் அங்கே பிரம்மேந்திராள் சித்தி ஆன இடத்தை பார்க்கலாம்.

நாங்கள் முதல் முறை பார்த்தபோது துயரமே மேலிட்டது.

இந்த இடத்தை நிர்வகிப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. சாதாரணமாக இப்படி சிவலிங்க பிரதிஷ்டை செய்தால் அதற்குத்தான் அபிஷேக ஆராதனைகள். ஆனால் இங்கோ சமாதியான இடத்தில் சிவலிங்கத்தை வைக்கவில்லை. ஆகவே அது ஒரு கோவிலாக மாறி அரசின் கைக்கு போய்விட்டது. காசு இல்லாத இடத்தில் அரசு என்ன அக்கறை காட்டப்போகிறது?

குழம்பிய பக்தர்கள் வில்வ மரத்துக்கே பூஜை செய்ய ஆரம்பித்தனர் போலும். பக்கத்தில் சதாசிவானந்த சுவாமிகள் என்று ஒரு துறவி கைலாஸ ஆஸ்ரமம் என்று அமைத்து இந்த கோவிலையும் சுற்றி சுவர் எழுப்பி கணபதி, முருகன், பைரவர் என்று பிரதிஷ்டை செய்து கொஞ்சம் பெருக்கினார். பிறகு பக்தர்கள் உற்சாகத்தில் வில்வ மரத்தை சுற்றி தியானம் செய்ய வசதியாக மண்டபம் அமைத்து மரத்தை சுற்றி ஒரு அதீத உற்சாகத்தில் கல் தளமும் அமைக்கவும்; நாளாக ஆக வில்வ மரத்துக்கு 50 லிட்டர் 100 லிட்டர் ஆவின் பால் என்று அபிஷேகம் செய்யவும் மரம் பட்டுப்போய்விட்டது. எந்த ஒரு மரத்துக்கும் சுற்றி தாராளமாக மண் இருக்க வேண்டாமா? மண் பாலால் மேலே மூடி சீல் ஆகிவிட்டால், தண்ணீர் உள்ளே போக வேண்டாமா? வேர்களுக்கு காற்றும் அவசியமாச்சே? இயற்கையாக எதையும் இருக்கவிட மனிதன் ஏன் சம்மதிப்பதில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.

போதாக்குறைக்கு ஒரு கீத்துக்கொட்டாய் வேறு மரத்தின் அருகில் போட்டு வைத்து அங்கே விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டதால் ஒரு நாள் இரவு கொட்டகை தீப்பிடித்து அதுவும் எரிந்து கொட்டகையும் எரிந்து காவலுக்கு இருந்த ஒரு சிறுவன் முயன்ற வரை அதை அணைக்கப்பார்த்து... நாங்கள் போனபோது பட்டுப்போய் கருகிய மரமே காட்சி அளித்தது. ரொம்ப முன்னேறி பாலன்ஸ் ஆகிவிட்டவன் என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று நன்றாக புரிந்து போய்விட்டது. அவ்வளவு அப்செட் ஆகிவிட்டேன். ஏதும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வக்கீலை பார்க்கபோய்விட்டோம்.

நெரூர் அக்கிரஹாரம் கொஞ்சம் வித்தியாசமான அமைப்பு உள்ளது. இரண்டு சாரி வீடுகள். நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. ஓரிரண்டு கிளைத்தெருக்களும் உண்டு. வீடு-வீதி- வாய்க்கால் -வீதி- வீடுகள் இப்படி இருக்கிறது. ஒரு பக்கம் கொஞ்சம் பேர் இன்னும் வசிக்கிறார்கள். எதிர் சாரியில் ஒரு போஸ்ட் ஆபீஸ். சமீபத்தில் வந்த ஒரு ஜ்யோதி நிலையம் -வள்ளலார் பக்தர் ஒருவர் ஒரு விசாலமான ஹால்; பின்னால் ஒரு ஓடு வேய்ந்த பிரமிட்; பக்கதில் அவர் வசிக்க வீடு இப்படி கட்டி இருக்கிறார்.தினசரி காலை கஞ்சி ஊற்றுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியும் அன்னதானம். வருடா வருடம் 2-3 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் (தைப்பூசம்?). அங்கே இருக்கக்கூடிய சுமார் 20 வீடுகளில் 7-8 தவிர எல்லாம் பராமரிப்பு இல்லாமல் இடிந்து போய்விட்டன. பிரம்மேந்திராளுக்கு பூஜை செய்யும் கன்னடத்து பட்டர், மடத்து பூஜை செய்யும் ஒருவர் தவிர யாரும் அங்கே குறிப்பிட்டு சொல்கிறபடியாக இல்லை.

நாங்கள் பார்க்கப்போன வக்கீல் அங்கே இருக்கும் ஸ்ரீமடத்து ஔஷதாலயத்துக்கு நிர்வாகியாக இருக்கிறார். சியவனப்பிராஷ் போல சில மருந்துகள் தயாரிக்கிறார்கள்.
பாடசாலைபற்றி பேச ஆரம்பித்தோம். “இங்கே பிராம்மணர்கள் வீடு 5-6 தான் இருக்கிறது. மற்றவர்கள் வீடுகளும் கொஞ்சம்தான். அதனால் இங்கே எந்தவிதமான ஆதரவும் எதிர்பார்க்கமுடியாது. என்னால் முடிந்ததை செய்கிறேன். ஆனால் அதிகமாக ஒன்றும் எதிர்பாராதீர்கள்" என்று தெளிவாகவே சொல்லிவிட்டார். ஸ்ரீ மடத்தில் பாடசாலைக்கு என்று 3 வீடுகளை வாங்கி வைத்து இருப்பதாயும் இன்னும் ஒன்று பாக்கி, அதையும் வாங்கிவிட்டால் அனேகமாக பாடசாலை துவக்கும் வேலை ஆரம்பித்துவிடும்; ஆனால் எப்போது என்று எல்லாம் ஒண்ணும் நிர்ணயம் இல்லை என்றார்.

வில்வ மரம் பற்றி விசாரித்தோம். சுமார் 5 வருஷங்களாக அது பட்டுபோய்க்கொண்டு இருப்பதாயும் அப்போதிலிருந்து அந்த அக்ரஹாரத்தவர்களுக்கு துர்பிக்ஷம்தான் என்றும் சொன்னார். சமீபகாலம் வரை துளிர் கொஞ்சம் இருந்தது. இப்போது தான் முழுக்க எரிந்துபோய்விட்டது என்று அவர் சொன்னபின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கனத்த மனசுடன் கிளம்பினோம்.

அடுத்த பதிவில் கொஞ்சம் பிரம்மேந்த்ராள் சரித்திரம்.

Wednesday, October 15, 2008

நெரூர் 1



மௌலி நெரூர் பத்தி எழுதச்சொல்லி கேட்டார். நானே எப்போதாவது அதைப்பத்தி எழுத உத்தேசித்து இருந்தேன். ஆனா இப்ப அதைப்பத்தி எழுதினா என் பையர் பத்தியும் எழுதாம இருக்க முடியாது. அதனால வேண்டாம்ன்னு பாத்தேன்.

ஊருக்கு போய் இங்கே வந்து பாத்தா என் ரூமே மாறிப்போச்சு. சாதாரணமா என் ரூம் கொஞ்சம் disorder ல இருக்கிறா மாதிரிதான் இருக்கும். ஆனா எனக்கு எது எங்கே இருக்குன்னு சரியா தெரியும். என் ரூமை ஒழிக்கிறேன்னு யாராவது வந்தா அவ்வளோதான். ரொம்பவே கஷ்டப்பட்டு போயிடுவேன். இதுக்காகவே யாரையும் உள்ளே விடறதில்லை. இந்த முறை ஊர்லே 4 நாள் இல்லைன்னு என் தங்கமணி பசங்களை விட்டு ஒழிக்கச்சொல்லிட்டாங்க.
எல்லாத்தையும் மெதுவா கண்டு பிடிச்சுண்டு இருக்கேன். என் usb தம்ப் ட்ரைவ் இன்னும் காணோம். மடி கணினில இருக்கிறத இப்ப கணினிக்கு கொண்டுவர முடியலை. நெட்டுக்கு அனுப்பிதான் வாங்கணும் போல இருக்கு.

மேசையில் வைச்சு இருந்த பகவத் கீதையை காணோம். கர்ம வழியை அதை பாத்துதான் பூர்த்தி பண்ண நினைச்சு இருந்தேன்.

அதனால சரி நெரூர் பத்தியே எழுதிடலாம்ன்னு இந்த பதிவு.

பையர் பத்தாவது வரை ஸ்டார் ட்ரெக், கம்ப்யூட்டர் விளையாட்டுன்னு சாதாரணமா மத்த பசங்களை போல்தான் இருந்தார். நான் அக்னி ஆதானம் செய்து கொண்ட போது திடீர்ன்னு எல்லாம் மாறிப்போச்சு. தெய்வத்தின் குரலை நான் படிச்சு மாறினாபோல அவரும் அதை படிச்சுட்டு "ஸ்கூல் போதும். நான் வேதம் படிக்கணும்"ன்னு ஆரம்பிச்சுட்டார். "இல்லைப்பா உடனடியா இப்படி முடிவு பண்ணாதே. சாதாரணமா அப்படி படிக்கிற வயசு போயிடுத்து. ஸ்கூல் முதல்ல முடி பாக்கலாம்" ன்னு சொன்னதை ஒத்துக்கலை. ஒரு வழியா எங்க வழிகாட்டி அவனை கன்வின்ஸ் பண்ணார். "இத பார் ஸ்கூல்ல படிப்பு வரலை, வேத பாடசாலைக்கு போறான்ன்னு இருக்கப்படாது. உன் திறமையை நிரூபிச்சுட்டு அப்புறம் போ" ன்னு சொல்ல பிறகு +2 எழுதி மாநில 4 வது ரேங்க் வந்தது. ப்ரெஞ்சு மொழியானதாலே அரசு பட்டியல்லே இருக்கலை. தமிழ் பிடிக்கும் நல்லா வரும்னாலும் இன்னொரு மொழி தெரியணும் என்கிறதுக்காக அதை படிச்சான்.

அதுக்கு அப்புறமா எங்கே வேதம் படிக்கிறது? இந்த வயசிலே யார் சேத்துப்பான்னு ஆராய்ச்சி செஞ்சதிலே பங்களூர் பக்கத்திலே ஒரு உறைவிட பள்ளி அதன் 25 ஆம் வருஷத்தை கொண்டாட ஒரு பாடசாலை துவக்கி, 10, +2 மாணவர்களை சேத்துக்கொண்டு கொஞ்சம் விசாலமான சிலபஸோட வேத பாடம் சொல்லிதராங்கன்னு கேள்விப்பட்டு அங்கே போய் சேர்த்தோம். வருஷத்துக்கு 5 மாணவர்கள்; 10 உபநிஷத், வியாகரணம், மீமாம்ஸை போல சாஸ்திரங்கள் கொஞ்சம் பரிச்சயம் படுத்தி, சம்ஸ்க்ருதமே பேசணும்; தினசரி கொஞ்சம் உடல் உழைப்பு - இப்படி சில ஆதர்ச சமாசாரங்களோட ஒரு பள்ளிக்கூடம். மாணவர்கள் மேலே படிக்க வசதி பண்ணி இருந்தாங்க. வாரம் ஒரு நாள் +2 வோ அல்லது கரஸ். பிஏ வோ படிக்க யாராவது பாடம் எடுப்பாங்க. இப்படி ஓபன் திட்டம் இருந்ததாலே பையர் 6 வருஷ பாடங்களை 4 வருஷத்திலே முடிச்சுட்டார். அடுத்து மேலே படிக்கணும்னு மீமாம்சையை தேர்ந்து எடுத்தார். மணி திராவிட் என்று மீமாம்சை வித்வான். இப்ப அந்த சப்ஜெக்ட்லே அவர்தான் அதாரிடி. காசியிலே இருக்கார்ன்னு கேள்வி பட்டு சரி காசிக்கு போக வேண்டியதுதான் ன்னு நினைச்சு இருந்தப்ப பகவான் செயலா அவர் அந்த குளிர் ஒத்துக்கலைன்னு சென்னைக்கு வந்து சம்ஸ்க்ருத கல்லூரிலே சேந்துட்டார். அவர் கிட்டே போய் கேட்டு சேந்துண்டாச்சு. அதனால சென்னை வாசம். கல்லூரி பக்கத்திலேயே ஒரு ரூம் பாத்து கொடுத்துட்டோம். மீமாம்ஸை 2 வருஷம் வாசிச்ச பிறகு அடிப்படை எல்லாம் கத்துக்கொடுத்துட்டேன். இனி நீயே படிக்க வேண்டியதுதான்னு சொல்லிட்டார். முன்னாலேந்தே வியாகரணத்துல ஒரு பிடிப்பு இருந்ததாலும் அதை பங்களுர்லே எடுத்த ஆசிரியருக்கும் இவருக்கும் பரஸ்பரம் பிடித்து போனதாலும் பெங்களூர் வாசம் ஒரு வருஷத்துக்கும் மேலே. இதுக்குள்ள திருமணமும் ஆகிவிட்டதால் வியாகரணத்தை முடிக்கும் தறுவாயில் அடுத்து எங்காவது செட்டில் ஆகிவிட்டு மேலே பாக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டார். கோவை கனபாடிகள் ஒருவர் எங்கிட்டே சொல்லாம நீ எதுவும் பண்ணாதேன்னு சொல்லி இருந்தார். அவர்கிட்ட என்ன சமாசாரம்ன்னு கேட்டப்ப "ஒரு தனவந்தர் நெரூர் ப்ரம்மேந்திராள் பக்தர். அங்கே ஒரு வேத பாடசாலை வரணுன்னு அவர் ஆசை. அதுக்கு வாத்தியாரா போறியா?” ன்னு கேட்டார். இவரும் ஒப்புகிட்டார். பகவத் சங்கல்பம் வேற மாதிரி இருந்து அந்த திட்டம் சரிப்பட்டு வரலை. தனவந்தரோட ஆடிட்டர் கனபாடிகளோட திட்டத்துக்கு ஒத்துக்கலை.

அதுக்குள்ள மனசிலே நெரூர் பிடிப்பு வந்து போச்சு. நான் சும்மாவானா அங்கே போய் உக்காந்துக்கிறேன். தானா பாடசாலை வரட்டும்ன்னு கூட சொல்லிட்டார்.
போய் பாக்கலாமென்னு நெரூர் போனோம்.
அனுமார் வால் மாதிரி கதை வளந்துடுத்து. இன்னும்2 பதிவு போடணும் போல இருக்கு!

Friday, October 10, 2008

பொது



நெரூர் போகிறேன். அங்கு வேத பாடசாலை துவக்கம் விஜயதசமி அன்று. திரும்ப ஓரிரண்டு நாட்களாகும்.
வந்து அடுத்த பதிவு.

Thursday, October 9, 2008

கர்ம வழி பொது - 9


சுலோகம் 51

தீர்ந்த மனத்துத் தெளிவுற்றார் செய்கருமத்
தார்ந்த பயனை யறத்துறந்து - சேர்ந்த
பிறப்பணையுங் கட்டவிழ்ந்து பெய்துயர் நோய் தீர்ந்த
சிறப்பணைவர் நன்மையினைச் சேர்ந்து.

    சான்றோர், பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இறைவனிடம் அடைக்கலம் புகுந்து இகவுலகில் செயல்களின் பலன்களைத் துறப்பதால் ஜனன மரணச் சுழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர். இவ்விதமாக அவர்கள் துன்பங்களுக்கப்பாற்பட்ட நிலையை அடைய முடியும்.

சுலோகம் 52

எவ்வளவி னின்மோகத் திற்கலக்க மாமிதனை
யிவ்வகையே புந்தி யெழக்கடக்கு - மவ்வளவிற்
கேத மருவுதிநீ கேட்பதிலுங் கேட்டதிலு
மேத மிகும்பயனா மென்று.

    மயக்கமெனும் இவ்வடர்ந்த காட்டை உன் அறிவு தாண்டிவிட்டால், இதுவரை கேட்டவை, இனிக் கேட்க வேண்டியவை இவற்றிற்கு, சமநிலையுடையவனாகி விடுவாய் நீ

யோகத்தின் லட்சணமே சம நிலைதான். பலன் சித்தித்தாலும் இல்லைனாலும் அது வீண் உழைப்பு இல்லை. சம புத்தி எப்படி வரும்? ராமரே பட்டாபிஷேகம் என்றால் தயாராகத்தானே இருந்தார்? சுமந்திரன் வந்து அப்பா கூப்பிடறார்ன்னு சொல்லும் போதும் அடடா இத்தனை பெரியவர் வந்து கூப்பிடராரேன்னு சந்தோஷமாவே போனாற். அங்கேயோ எதிர்பாராத செய்தி. காட்டுக்கு போகணும்ன்னு. இப்படி பட்ட நிலையிலே மூடன் அழுவான்,  மூர்க்கன் உதைம்பான். ராமர் என்ன சொன்னார்? தர்மமே பெரிசுன்னு கிளம்பிட்டார்.

 அப்ப அவர் முகம் எப்படி இருந்ததுன்னு வால்மீகி சொல்றார். முகம் பிரசன்னமா இருந்ததாம். வெளியே பிரசன்னமா காட்டி உள்ளே புழுங்கிக் கொண்டு இருக்கலை. பின்னால பரதன் பொங்கி "என்ன இது" ன்னு கேட்டா, "இது சகஜம்- இயற்கைதானே" ன்னு சிரிச்சுண்டே சொல்றார். பகலும் இருட்டும் மாறி மாறி வரார்ப்போலே சுகம் துக்கம் மாறி மாறி வரது இயற்கைதானே. அதான் உலகத்தோட இயல்பு. இப்படி யார் கலங்காம இருப்பானோ அவனே சிறந்த கர்ம யோகி
.
இப்படி முக்கியமான ஸ்லோகங்களை பாத்தோம். அடுத்து கர்மயோகம் பத்தி கண்ணன் என்ன சொல்கிறான்னு பாக்கலாம். மூணாவது அத்தியாயம் கர்ம யோகம்.

Wednesday, October 8, 2008

கர்ம வழி பொது - 8



சுலோகம் 49

தக்கமரும் புத்தியோ கத்திற் றனஞ்சயனே
யக்கருமந் தூர வலங்கா- ணெக்கவரும்
புத்திக்கே நிற்கும் புகல்விருப்புப் புல்லியர்கா
ணத்தித்தே செய்யு மவர்.

பக்தித் தொண்டால், பலன் நோக்குக் கருமங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு, பக்தி உணர்வுக்குப் பூரண சரணடையக் கடவையாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவர்கள்.

சுலோகம் 50

இந்நிலையிற் புத்தியுட னேய்ந்தா ரிருமைவினை
தந்நிலையை யிங்கே தவிர்வர்கா -ணன்னிலையான்
மெய்கருதி யோகத்து மேவுதிநீ யோகங்காண்
செய்கருமத் தாகும் சிறப்பு.

பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்தும் தப்புகின்றான். எனவே எல்லாச் செயல்களின் செயற்கலையான யோகத்திற்காய்ப் பாடுபடுவாயாக, அர்ஜுனா.

ஒரு பணக்காரர் இருக்கிறார். அவரோட வீட்டிலே ஒரு பணிப்பெண் இருக்கிறாள். மாட மாளிகையிலும் கூட கோபுரங்களிலேயும்தான் புழங்குகிறாள். பட்டுத்துணிகளைதான் அந்த வீட்டு குழந்தைகளுக்கு போடுகிறாள். தினசரி விருந்துதான் சமைக்கிறாள். ஏசி கார்லதான் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விட்டுட்டு வருகிறாள். எதா இருந்தாலும் அவளுக்கு இது நிரந்தரம் இல்லைன்னு தெரியும். ஒரு நாள் இதை எல்லாம் விட்டுட்டு போகணூம்ன்னு தெரியும். எப்ப வேணா எஜமானன் வீட்டுக்கு அனுப்பிடுவான்னு தெரியும். அதுக்கு அவ ரெடியாவே இருப்பா.

இது போலதான் சாதகன் இருக்கணும். எந்த மாதிரி சூழ்நிலையும் நிரந்தரம் இல்லை. ஒருநாள் பகவான் சட்டைய மாத்திக்கடான்னு சொன்னா மாத்திக்க ரெடியாதான் இருக்கணும்.

Tuesday, October 7, 2008

கர்ம வழி பொது -7



சுலோகம் 47

கருமத்தே யுன்ற னதிகாரங் கண்டாய்
வருமப் பயனிலணு மன்னா-தொருமித்து
மற்றதனுக் கேதுவா மன்னேல் கருமமலா
வெற்றமைவில் வேண்டா விருப்பு

உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்குப் பூரண உரிமை உண்டு. செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையிலும் விருப்பங் கொள்ளாதே.
இதைப்பத்தி ஏற்கெனெவே பாத்தாச்சு.

சுலோகம் 48

பேறிழவி லொத்தமைத்துப் பேணு நசைதுறந்து
தேறிவரும் யோகத்துச் சேர்ந்துநீ -யாறியமைந்
தித்தகைவி லாங்கரும மேந்தியநீ யோகந்தா
னெத்த லெனவுரைப்ப ரோர்ந்து.

யோகத்தில் உறுதி கொள் அர்ஜுனா. வெற்றி தோல்வியின் பற்றைத் துறந்து கடமையைச் செய். இதுபோன்ற மன ஒருமையே யோகமென்றழைக்கப்படுகின்றது.

வெறும் ரிசுவலா இருக்கக்கூடாது. செயல் புத்தியுடன் தாழ்ந்த பலனில நாட்டம் இல்லாமல் மோட்சம் அடைய வேண்டுமென்ற நினைப்புடன் சமாக இருந்து செய்யணும். சுவர்க்கம் போன்ற பலனில் மனம் இல்லாமல், புத்தியிலே ஆன்ம நாட்டத்தை வை. பலத்துக்கு யார் காரணமாக நினைக்கிறானோ அவன் கிருபணன் -மீண்டும் மீண்டும் பிறப்பான்.

உத்தேச தியாகம், சமர்ப்பணம் கூட கர்ம யோகமாகாது. லாப நஷ்டங்கள்ல சம மனசோட செஞ்சாதான் அது கர்ம யோகமாகும். லாபம் வந்ததா சந்தோஷம், நஷ்டம் வந்ததா சந்தோஷம், இப்படி இருக்கிற நபர் முன்னேறிடுவான்.

உலக வாழ்க்கையில கூட திடம் நிச்சயம் வேணும். வியாபாரம் செய்யறேன்னு கடைய ஆரம்பிச்ச உடனே வேற வேலைக்கு போலாமா? அப்புறம் மேலே படிக்கலாமா ....இலக்கே நிர்ணயம் இல்லை.

கர்ம யோகம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள மாறி சன்னியாசம் போகலாம்ன்னு யோசிச்சு போய், அப்புறம் மக்களுக்கு சேவை பண்ணலாம்ன்னு ஆரம்பிச்சு, அப்புறம் -அட இதுவும் லௌகீகம்தானே- தியானம் பண்ணு, அட! இது கஷ்டம், நாம சங்கீர்த்தனம் செய்யலாம்; இப்படி மாத்தி மாத்தி செஞ்சா?

அவரவர் குணத்தை பாத்து இதாண்டா உனக்கு, இதே செய்ன்னு ஒண்ணை கொடுத்துட்டா மனசு நிலைப்பட்டு ஒரே வழில போகும். அப்ப இதுல இருக்கிற லாபமோ நஷ்டமோ ஒரு வழி கிடைச்சுதுன்னு அதிலேயே நம்பி திடமா போய் இலக்கை அடைவான். உறுதியோட போவான்.

செய்கிற முறையிலே திடம் வேணும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன சில பதிவுகளில வெண்பாக்கள் இடம் மாறிப்போச்சு. எல்லாத்தையும் சரி செஞ்சு இருக்கேன். மன்னிக்க!


Monday, October 6, 2008

கர்ம வழி - 6 தொடர்ச்சி



முக்குணமில்லாமல் இருக்கணும். அதாவது ரஜோ தமோ குணங்களை தவிர்க்கணும்.
ரஜோ தமோ குணங்களை எப்படி நீக்கறது? இதை எல்லாம் கண்டு பிடிச்சு தொலைக்க முடியாது. பின்னே? சத்வ குணத்தை வளத்துக்கொண்டு போ. மத்தது கம்மியாயிடும்.

சத்வ குணத்தை வளர்ப்பது எப்படி? ஆத்ம சிந்தனையால் வரும். இதை தவிர ஏதும் வேண்டாம்ன்னு நினை. சுகமும் துக்கமும் வரத்தான் வரும். ஆனால் வந்தாலும் பாதிக்கக்கூடாது. கிடைப்பது/கிடைக்காதது,(யோகம்) நிலைப்பது/ நிலக்காதது (க்ஷேமம்) இதை எல்லாம் கண்டுக்காதே. ஆத்மா தவிர எதையும் கண்டு பிடிக்கவோ அனுபவிக்கவோ நினைக்காதே. இதுக்கு அடிப்படை ஆகார சுத்தி. (முன்னாலேயே பாத்தாச்சு இல்லையா?)

சுலோகம் 46
எங்கு நிறைநீ ரெழிற்றடத்து யாவர்க்கு
மிங்கு மருவுபய னென்னவா -மங்கனைத்து
வேதத்து மந்தணற்கு வேண்டுபய னவ்வளவாம்
போதத்துக் கீடாப் புணர்ந்து.

ஒரு சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகளெல்லாமே, ஒரு பெரும் நீர்த்தேக்கத்தால் உடன் பூர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவைகளுக்குப் பின் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்.

எல்லா இடத்திலும் நீர் இருக்கும் நீர் நிலையில் இருப்பவன்கிட்டே என்ன பாத்திரம் இருக்கோ அது என்ன எவ்வளவு கொள்ள முடியுமோ அவ்வளவே எடுக்க முடியும். நமக்கு தேவையான தண்ணி மட்டும் இல்லை. நிறையவே இருக்கு. அது போல வேதம் எல்லாருக்கும் சொல்லும். அவரவர்களுக்கு ஏற்புடையதை மட்டுமே எடுத்துக்கணும்.

இப்ப செய்யாதேன்னு சொல்வது இங்கே அர்ஜுனனுக்கு / அவனைப்போன்றவர்களுக்கு மட்டும்தான். அவன் மத்திய அதிகாரி. அதனால். சும்மா வெறும் ராஜ்யத்துக்காக சண்டை போடாதே. அது உன் கடமை என்கிறதாலே செய்.

ஆகவே ஆத்மாவில் நாட்டம் இருக்கிறவன் தேவையானதை மட்டுமே எடுத்துக்கணும்.


Friday, October 3, 2008

கர்மா பொது 5



சுலோகம் 44


போகமிகு செல்வத்துப் பூண்டதன் னெஞ்சழிந்தார்க்
கேக வகையுற்ற வெழிற்புந்தி - யோக
மமைவுறா துள்ளத்தி லாதலால் வேதச்
சமைவுதான் கேளாய் தரித்து.

புலன்நுகர்வு, செல்வம் இவைகளை மிகவும் விரும்புவதால் மயங்கியவர்களின் மனங்களில், பரமப்பிரபுவின் பக்தித் தொண்டிற்கான நிலையான உறுதி உண்டாவதில்லை.

**
கண்ணன் சொல்கிறான்: வேதத்தை கத்துக்கொண்டு அதை பின் பற்றி செல்வம் சேர்க்கணும்; சுவர்க்கத்தை அடையணும்ன்னு நினைக்கிறாங்க. ஆனா அப்படி நீ நினைக்க தேவை இல்லை. சுவர்கத்தை அடைய செய்வது எல்லாம் காம்ய கர்மாக்கள். அதை மட்டுமே செய்கிறவங்களுக்கு மோட்சத்தில நாட்டம் வராது. உபநிஷத் சொல்கிற மோட்சத்துலதான் ஆசை இருக்கணும்.

அர்ஜுனனுக்கு சந்தேகம் வருது.
ஆயிரம் தாய் தந்தையர்களை விட அதிகமா வேதம் அன்பு காட்டுகிறதா சொல்கிறாங்க. அப்படிப்பட்ட வேதம் சொல்கிறதைதானே செய்யறேன்? வேதம் செய்யக்கூடாததை செய்யவா சொல்லும்? சாஸ்திரத்திலே சொன்னதை விடலாமா? வேதத்தில் சொன்னதை விடலாகாதே?
வேதம் பொய் சொல்லாதே? அதை விடச்சொன்னா அது தப்பில்லையா?

சுலோகம் 45
முக்குணத்தோர் பண்புரைக்கு மூண்டுமறை நீமன்னா
வக்குணத்து மன்னே லவாநெஞ்சா - யிக்குணத்தாற்
சாருதுய ரற்றெனேஉஞ் சத்துவத்தி னப்புறத்தி
லாருமியோ கக்கேகம மற்று.

வேதங்கள் பொதுவாக மூன்று பௌதிக இயற்கைக் குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா! இவை மூன்றிற்கும் மேற்பட்டவனாவாயாக. எல்லா இரட்டைகளிலிருந்தும், அடைதல் காத்தல் இவைகளுக்கான கவலைகளிலிருந்தும் விடுபட்டுத் தன்னில் நிலை பெற்றிருப்பாயாக.

**கர்ம காண்டத்தில் முக்குண மயமான விஷயங்களைதான் சொல்லி இருக்கும். தமோ குணத்தினனுக்கு சண்டையிட யாகம். ரஜோ குணம் உள்ளவனுக்கு சொர்க்கம் கிடைக்க யாகங்கள். வேதம் ஒரு சிலருக்கு சொல்ல வரலையே? முக்குணங்கள் உள்ளவர்களுக்கும்தான். நீ சத்வமாக இருக்கணும். அதனாலே சிலதை செய்ய தேவை இல்லை என்கிறேன்.

ஒரு அம்மா. 3 குழந்தைகள். ஒத்தன் சாது பிள்ளை. ஒரு கோபக்கார பிள்ளை. ஒரு சோம்பலான பிள்ளை.

எல்லாருக்கும்தான் அவள் தாயார். பிள்ளைகளுக்கு தகுந்தபடிதானே புத்தி சொல்லுவாள்? சோம்பலான பிள்ளைக்கு வேறதான் சொல்லுவாள். மண்ணை தின்னாதே என்று சொல்லுவாள். சாது பிள்ளை கேக்கும். பிரச்சினை இல்லை. சோம்பலான பிள்ளைகிட்டே சொல்லும்போது அது கேட்காட்டா அப்போதைக்கு விட்டு விடுவாள். பின்னால வயித்து வலி வரும்போது “பாத்தியா அப்பவே மண் தின்னாதேன்னு சொன்னேன், கேக்கலை. இப்ப உனக்கு வயித்து வலி வந்துடுத்தே? என்பாள். அது போல அவரவருக்கு தகுந்ததைதான் செய்ய சொல்லுவாள்.

ஒருவர் சின்ன நோக்கத்தில் ஒரு விஷயத்தை ஆரம்பிக்கலாம். வேதத்தில் நம்பிக்கை இல்லைன்னு வெச்சுக்கலாம். இன்பம் வேண்டி ஒரு யாகம் செய்யறார். அது கிடைத்தபிறகு நம்பிக்கை வருது. அதுக்கும் மேலே ஒண்ணு தேடுரார். நேரடியா மோட்சத்தில ஆசை வராது. ஏதோ ஒண்ணை சொல்லிதான் நம்பிக்கை வருது. இதுக்கு மேலே கேக்கிறவருக்கு மோட்ச வழியை பகவான் காட்டுவார்.

இரட்டைகள் இன்ப- துன்பம், வெற்றி - தோல்வி இது மாதிரி. இந்த இரட்டைகளால பாதிக்கப்படக்கூடாது. இதைதான் துவந்தம் இன்மை என்பாங்க.


Thursday, October 2, 2008

கர்ம வழி பொது -4



சுலோகங்கள் 42-43

காமத்தை யுன்னிக் கணிசித்து மேலுலகைச்
சேமத்தை யிட்டுச் செனித்துழலு - மீமத்
தியற்றிதரும் போகத்தி லின்பத்தை நோக்கி
முயற்றியுட னேயெழுவர் மூண்டு.


சிற்றறிவுடைய மாந்தர் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற் பிறவி அடைதல், அதிகாரமடைதல் முதலான பலன் கருதிச் செய்யும் செயல்களைச் சிபாரிசு செய்கின்றன. புலன் நுகர்ச்சியையும், செல்வமிகு வாழ்வையும் விரும்புபவர் இதைவிட உயர்ந்ததேதுமில்லை என்று கூறுகின்றனர்.
--
"ஞானிகள் அல்லாதவர்கள் மலர் போல கவர்ச்சியா இருக்கிற இந்த சின்ன விஷயங்களின் பலன்ல ஆசை வைக்கிறாங்க.” இப்படி சின்னது / தாழ்ந்ததுன்னு சொன்னது என்ன? தாழ்ந்த பலன் கொடுப்பது எது? கண்ணன் எதை சொல்கிறான்?

யாக யக்ஞங்களைதான் சொல்கிறான்.

வேதங்கள் பலர் நினைக்கிற மாதிரி வெறும் பிலாஸபி இல்லை. இந்த உலகத்துல நாம் சாதாரணமா வேண்டியது எல்லாம் கிடைக்க என்ன செய்யணும்னும் சொல்லி இருக்கு. அதெல்லாம் கர்ம காண்டம் என்பாங்க.

கிருஷ்ண யஜுர்வேதத்திலே மந்திர பாகங்களும் கர்மாவை விவரிக்கிற ப்ராம்ஹணம் என்கிற பாகங்களும் தனியாக இல்லாமல் கலந்தே இருக்கு. மற்றதில் அப்படி இல்லை. தனித்தனியாவே இருக்கு. யாக யக்ஞங்களை விரிவா சொல்கிற கல்ப கிரந்தங்களுக்கு முக்கியத்துவம் வந்த பின் அதெல்லாம் மட்டுமே படிச்சு ப்ராம்ஹணத்தை படிக்கிற பழக்கம் விட்டுப்போச்சு. நாளாக ஆக அது வேதமே இல்லைன்னு தோண ஆரம்பிச்சது. உபநிஷத்துக்கள் வேதாந்தம் (வேத அந்தம்-கடைசி) ஆனதால பிராம்ஹணத்துக்கும் அப்புறம் வரதால இது வேதம் இல்லைன்னு தோணி போச்சு. (இப்ப தலை கீழா இருக்கு. வேதம்ன்னா உபநிஷத் தவிர மத்தது இருக்கிறது நிறைய பேருக்கு தெரியலை போல இருக்கு)

இதுக்காகதான் இங்க இப்படி க்ருஷ்ணன் சொல்கிறதுக்கு முக்கியத்துவம் வருது. வேதத்தில் கர்ம காண்டத்திலே சொல்கிறதை பாத்து மயங்கி அங்கேயே நிக்காதே. அத விட உசந்த விஷயம் வேதாந்த்தத்திலே இருக்கிறதை பாத்து அதிலே ஆசை வை.

மக்கள் போக விஷயங்கள் ஐச்வரியங்கள் எல்லாம் கிடைக்க கர்மங்களை செய்கிறாங்க. யாக யக்ஞங்கள் பலமானவை. ஸ்வர்கம் கிடைக்க செய்கிற ஜோதிஷ்டோமம் போன்றவை; புத்திர காமேஷ்டி செய்தால் குழந்தை பிறக்கும்; சேணயாகம் செய்தால் விரோதி ஒழிந்து போவான்; வாயவ்ய யாகம் செய்தால் செல்வம் பெருகும். இதெல்லாம் சரிதான், ஆனா இதில எல்லாம் ஆசை வைக்காதே.

ஸ்வர்கம் கிடைச்சாலும் அனுபவிச்சுட்டு திருப்பி பிறந்துதான் ஆகணும். ஒரு விரோதி ஒழிஞ்சா இன்னொருத்தன் வருவான். செல்வம் வந்தாலும் அத அனுபவிக்க கொடுத்து வெச்சு இருக்கணும். அதே நேரம் வர மாதிரியே அது போகவும் போயிடும். அதனால இதெல்லாம் நிலையானதில்லே! நிலையான இன்பம் மோக்ஷம்தான்.

ஓட்டப்பந்தயம் நடக்கிறது. பலர் ஓடறாங்க. குறி என்ன? ஓடிப்போய் கடைசி எல்லை கோட்டை தாண்டணும். வழியில் நிறைய பேர் உற்சாகப்படுத்த கை தட்டுவர்; தண்ணீர் கொடுப்பர்; பழ ரசம் கொடுப்பர். இவர்களை பார்த்து கொண்டே "ஆஹா! இவ்வளோ பேர் நம்ம பாராடறாங்களேன்னு குஷில நின்னா ஓட்டம் பூர்த்தி ஆகாது. கடேசில ஜெயிக்காட்டா நம்மள கண்டுக்க கூட மாட்டாங்க. சிலர் கேலி கூட செய்யலாம். யார் இவர்கள் கைதட்டறதையும் கேலி செய்யறதையும் பொருட்படுத்தாமல் இறுதி கோட்டை அடைய ஓடறாங்களோ அவங்களே நினைச்சதை சாதிப்பாங்க.

வாய்க்கால்



திருப்பியும் வடிநீர் வாய்க்கால் தோண்டறாங்க. அதுக்கு அப்பப்ப தோண்டி கம்பிய துண்டிக்கிறாங்கதான். வேலை நாட்களா இருந்தா டெலிபோன்காரங்க அன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள சரி செஞ்சுடறாங்க. நானும் சில பதிவுகள் முன்னாலேயே எழுதி போட்டு வெச்சுடுவேன். இன்னைய பதிவு இன்னும் எழுதலை. இன்னிக்கு காந்தி ஜயந்தின்னு டெலிபோன் இலாக்கா லீவு! (ஆமா, வேலை செய்யாதேன்னு காந்தி எங்கேயாவது சொன்னாரா?) இன்னிக்கி போனா நாளை மாலை வரை வராது. பாக்கலாம். இணைப்பு இருந்தா அதை போட்டுட்டு இதை தூக்கிடுவேன். இல்லைனா இப்பவே மன்னிப்பு கேட்டுகிறேன். இத எழுதற நேரம் முற்பகல் 11-30

Wednesday, October 1, 2008

கர்ம வழி-பொது 3


இப்படி எல்லாம் கேட்டபிறகு நமக்கு தோணலாம். அட, பலன்ல உரிமை கிடையாதுன்னா வேலை பண்ணுவானேன்? இது பெரிய பிரச்சினையப்பா. பேசாம சும்மா கிடந்துடலாம். ஏன் வம்பு!

அதுக்காகதான் பகவான் சொல்கிறான்:
"உனக்கு செயலின்மையில் சம்பந்தம் ஏற்படக்கூடாது.”
உண்மைல செயலின்மையும் ஒரு செயல்தான். செய்ய வேண்டிய செயல்களை செய்யாவிட்டாலும் குற்றம்தானே? commision by omision என்பாங்களே அது போல.

இதுக்கு முன்னேயும் பின்னேயும் சொல்லி இருக்கிறதை கொஞ்சம் பாத்தா கர்மா பத்தி இப்போதைய கான்டெக்ஸ்ட் இன்னும் புரியும்.

சுலோகம் 2: 39
சாங்கியத்தின் தன்மையின்மேற் புந்தித் தகவுரைதே
னீங்குகனம யோகத் தியல்பிவிதன் - பாங்கியம்மக்
கேளாயிப் புத்தியினைக் கிட்டவினைக் கட்டினைநீ
மூளாம னிற்றி முயன்று.

ஸாங்க்ய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுகாறும் விளக்கினேன். பலன் விளைவுகளுக்காயன்றி ஒருவன் செயல்படும் யோகத்தைப் பற்றிய அறிவை இப்போது கேள். ப்ருதாவின் மகனே, இவ்வாறான அறிவோடு செயல்பட்டால், செயல்களின் விளைவெனும் விலங்கினின்றும் நீ விடுதலை பெறுவாய்.

**இதுக்கு முன்னாலே கொஞ்சம் ஆராய்சி அறிவைப்பத்தி சொன்னார். அறிவு கிடச்ச பிறகு செயல்கள் எப்படி இருக்கணும்னு சொல்லப்போகிறார்.

சுலோகம் 40
போகமிகு செல்வத்துப் பூண்டதன் னெஞ்சழித்தார்க்
கேக வகையுற்ற வெழிற்புந்தி - யோக
மமைவுறா துள்ளத்தி லாதலால் வேதச்
சமைவுதான் கேளாய் தரித்து.

இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.

** இந்த உலக விஷயத்துக்கும் நல்லது. பரமார்த்திகமாயும் நல்லது. ஏதோ கொஞ்சம் வேலை செய்தாலும் அதுக்கான பலன் கிடைக்கும். “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" இல்லையா? அப்படி வேலை செய்வதால் உலக ரீதியாகவாவது கொஞ்சம் பலன் கிடைச்சுடும். ராஜ யோகத்தைப்பத்தி இப்படி நினைச்சுகூட பாக்க முடியாது. சரியான வழிகாட்டி இல்லாம கொஞ்சம் தப்பா போனாலும் மோசமா பின் விளைவுகள் இருக்கும். ஞான யோகத்தைப்பத்தி கேக்கவே வேண்டாம். குழம்பிப்போய் இருக்கிற நம்பிக்கை/அறிவும் போயிடும்.

சுலோகம் 41
முக்குணத்தோர் பண்புரைக்கு மூண்டுமறை நீமன்னா
வக்குணத்து மன்னே லவாநெஞ்சா - யிக்குணத்தாற்
சாருதுய ரற்றெனேஉஞ் சத்துவத்தி னப்புறத்தி
லாருமியோ கக்கேகம மற்று.

இவ்வழியிலுள்ளோர் உறுதியான நோக்கமுடையோர். அவர்களது இலட்சியம் ஒன்றே. குருக்களின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளை உடையதாக ஆகின்றது.

வழில உறுதியா இருக்கிறவங்கதான் ஆத்ம தரிசனம் மட்டுமே இலக்குன்னு இருப்பாங்க. மத்தவங்க வழிகள்ல இப்படி போலாமா அப்படி போலாமான்னு குழம்பிபோய் திசை திரும்பி போயிடலாம்.

கர்ம யோகம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள மாறி சன்னியாசம்தான் உயர்ந்ததுன்னு சன்னியாசம் நோக்கி போய்; கொஞ்ச நாள்லே அட,சேவை பண்ணலாம் அதுதான் நல்லதுன்னு மாறி; பிறகு -அட, இதுவும் லௌகீகம்தானே- தியானம் பண்ணு, அட, இது கஷ்டம், நாம சங்கீர்த்தனம் செய்யலாம், இப்படி மாத்தி மாத்தி செஞ்சா?

அவரவர் குணத்தை பாத்து இதாண்டா உனக்கு, இதே செய்ன்னு ஒண்ணை கொடுத்துட்டா மனசு நிலைப்பட்டு ஒரே வழில போகும். அப்ப இதுல இருக்கிற லாபமோ நஷ்டமோ ஒரு வழி கிடைச்சுதுன்னு அதிலேயே நம்பி திடமா போய் இலக்கை அடைவான்.

இப்படி தேர்ந்தெடுக்கிற வழில திடமா இருக்கணும்.