Pages

Thursday, August 14, 2008

விவாஹம்- குறிப்புகள் 2


இதுதான் திருமணம் ஆனதுக்கே அடையாளம் என்று சொல்லிய ஸப்தபதீ சமயத்தில் என்ன சொல்கிறார்கள்?

"ஏழு அடிகள் என்னுடன் வைத்த நீ எனக்கு நட்பில் சிறந்தவள் ஆகிவிட்டாய். இந்த உறவில் இருந்து ஒரு பொழுதும் உன்னை விலகமாட்டேன். நம்மை தெய்வம் ஒன்று கூட்டி வைத்து இருக்கிறது. நாம் எல்லா செயல்களையும் பிரியத்துடனும் நல்ல மனத்துடனும் செய்து வாழ்வோம். கருத்தில் ஒற்றுமை உடையவர்களாக இருப்போம். விரதங்களை ஒன்றாக அனுஷ்டிப்போம். நீ சாஹித்தியமானால் நான் சங்கீதம். நீ சங்கீதமானால் நான் சாகித்தியம். நான் வானுலகம்; நீ பூவுலகம். நான் உயிர்சத்து; நீ அதை தரிப்பவள். நான் மனது; நீ வாக்கு. சொல் போன்ற நீ பொருள் போன்ற என்னை அனுசரிப்பவளாக இருப்பாயாக. ஆண் மக்களை பெற்று செழிப்பான வாழ்க்கை நடத்த இன் சொல் படைத்தவளே! வருவாய்.

அம்மி மிதிக்கும்போது சொல்வது:

“ இந்தக்கல்லின் மீது ஏறி நில்; கல்லைப்போல நீ உன் விரதத்தில் திடமாக இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊறு செய்பவர்களை எதிர்த்து நின்று அவர்களை வெல்ல வேண்டும்.”

"இம்மைக்கும் மறுமைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய இரு கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ! நான்" என்கிறாள் ஆண்டாள். இந்து மக்களின் விவாகத்தில் எத்தனையோ நூற்றாண்டுகளாக வரும் பழக்கங்கள் இவை.

திருமணம் முடிந்து இருவரும் வரனின் வீட்டுக்கு போகிறார்கள். வீட்டில் பிரவேசித்த உடன் செய்வது பிரவேச ஹோமம். அதில் முதல் மந்திரம்: ”வீட்டுக்கு வந்துள்ள மகிஷீ -ராணி போன்ற இவள்- சுவர்கத்தை அனுபவிப்பதான ஸந்ததியுடன், நல்ல செல்வம் படைத்தவளாக, இந்த ஔபாஸனாக்னியை நூறு வருஷங்கள் பூஜை செய்பவளாக இருக்கட்டும்.”

பிரவேச ஹோமம் நடந்தபின் நக்ஷத்திரங்கள் உதிக்கும் வரை மௌனமாக இருந்து அவை உதித்தபின் துருவ நக்ஷத்திரத்தையும் அருந்ததீ நக்ஷத்திரத்தையும் தரிசனம் செய்வர். இந்த கன்னிகையும் அருந்ததி போல பதிவிரதையாக இருக்க வேண்டும். வது- வரனுடைய தாம்பத்ய வாழ்க்கை துருவ நக்ஷத்திரத்தை போல நிலை பிழறாமல், தர்மத்திலிருந்து வழுவாமல் இருக்க வேண்டும்.

திருமணம் வெறும் ஒப்பந்தம் இல்லை; ஆயுள் முழுதும் நீடிக்கும் உன்னதமான உறவு என்பதை காட்ட சில மந்திரங்களின் பொருளை பார்த்தோம்.

இந்த காலத்தில் உபநயனமும் திருமணமும் செய்யப்பட்ட போதிலும் அவற்றில் சிரத்தை குறைந்து கொண்டே வருகிறது. வேங்கடாத்திரி என்ற கவி 500 வருஷங்களுக்கு முன்னேயே "உபநயனமும் விவாகமும் வெறும் உத்ஸவங்களாகவே உள்ளன.” என்று சொல்லி இருக்கிறாராம். அப்படின்னா இப்ப கேட்கவே வேண்டாம்.


3 comments:

geethasmbsvm6 said...

அப்பா, ஒருவழியாத் திறந்தது, உங்க பின்னூட்டப் பெட்டி!!! :P:P:P:P:P "கன்யா சுல்கம்" பத்திச் சொல்லவே இல்லையே???

அப்புறம் பதிவுகள் கொஞ்சம் முன், பின்னாய் வருதோனும் தோணுதே??? ம்ம்ம்ம்ம்ம்???? இல்லை, எனக்குத் தான் புரியலையோ என்னமோ????

திவாண்ணா said...

???????????
பாப் அப் ஆக வரபடி வைச்சு இருக்கேன், பிரச்சினையா?
பதிவுகள் முன்னே பின்னே இல்லையே? முதலில் கர்மாவை மட்டுமே சொல்லிக்கொண்டு போனேன். இப்ப சில மந்திர அர்த்தங்களை சொன்னேன்.
கன்யா சுல்கம் லௌகீகம்.
முன்னே எல்லாம் வர தக்ஷிணைன்னு வாங்குகிற பழக்கம் இல்லை.
பெண்கள் எண்ணிக்கை அதிகமா போனபோது இந்த பழக்கம் ஆரம்பித்து இருக்கலாம். இன்னும் கொஞ்ச நாட்கள்லே கன்யா சுல்கம் வந்துடும். அதாவது இப்ப மாப்பிள்ளையை ஒரு தொகை கொடுத்து வாங்குகிறது போல பெண்ணை விலை கொடுத்து வாங்கற நிலை வந்துடும். அப்ப கன்யா தானமா இருக்காது. ரொம்ப உயர்ந்த தானமா சொல்கிற அது போயிடும்.

Geetha Sambasivam said...

//???????????
பாப் அப் ஆக வரபடி வைச்சு இருக்கேன், பிரச்சினையா?//

அநேகமாய்த் திறக்கவே முடியறதில்லை, இப்போவும் பல முயற்சிகளுக்குப் பின்னரே திறந்தது. :((((((((((