Pages

Friday, May 26, 2017

ஆன்மீக விசாரம் - 14

கடைசியா ஒரு பதிவோட இந்த தொடரை நிறைவு செய்யலாம்.
ப்ராயச்சித்தங்கள் பத்தி இங்கே சில பதிவுகளில எழுதி இருந்தேன். நேத்து நண்பர் ஒருவர் ப்ளஸ்ல எழுதி இருந்தார். அது இது தொடர்பா இருக்கு. அவருடைய நண்பர் ஒருவர் ஒரு ஜோசியர் பத்தி குறிப்பிட்டு ப்ரெடிக்‌ஷன் மிகத்துல்லியம்ன்னு சொல்லி இருந்தார். அந்த போஸ்டை படிச்சா அந்த ஜோசியர் சொல்கிற பல விஷயங்களில ஒண்ணு: நான் ப்ராயச்சித்தங்களை நம்பறதில்லை. … காலத்தை உணர்தல் மட்டுமே பரிகாரம்.ஒரு பிரச்சனை ஏன் ஆரம்பித்தது. ஏன் இன்னும் முடியவில்லை. எப்பொழுது முடியும் என்பதை தெள்ளத்தெளிவாக கூற முடியும்..... காத்திருங்கள் என்பதே என் அளவில் சரி.
நண்பர் //வினைகள் தீர்க்க காத்திருப்பதை தவிர வேறு வழியில்லைங்களா // ன்னு கேட்டு இருக்கார்.
சில சமயம் ப்ராயச்சித்தங்கள் செய்வதால முடியும் என்கிற என் போஸ்ட்களை படிச்சவங்களுக்கு ஏற்கெனெவே உணர்த்தி இருக்கேன். இப்ப இன்னும் கொஞ்சம்.
ஒரு ஆசாமி ஒரு குற்றம் செய்யறார். போலீஸ் பிடிச்சு வழக்கு தொடருது. நீதிபதி விசாரிச்சு தண்டனை கொடுக்கறார். எல்லாமே ஒழுங்காவே நடக்கிறதா வெச்சுப்போம்! யாரும் கோணக்கழி வெட்ட வேணாம்! என்ன தண்டனை கொடுக்கப்படும்? சின்ன குற்றம்ன்னா சின்ன தண்டனை. கோர்ட் கலையற வரை இங்கேயே சிறை என்கிற ரீதியில கூட இருக்கும். இது சம்பந்தமான நடந்த நிகழ்ச்சி ஒண்ணோட கதை நினைவுக்கு வந்தாலும் இங்க இப்ப பகிரப்போறதில்லை.
இன்னும் கொஞ்சம் பெரிய குற்றத்துக்கு தண்டனையா சில ஆயிரங்கள் அபராதம்ன்னு கொடுக்கலாம். இன்னும் கொஞ்சம் பெரிய தண்டனைக்கு இத்தனை வருஷம் சிறைன்னு கொடுக்கலாம். இன்னும் கொஞ்சம் பெரிய குற்றத்துக்கு ஆயுள் சிறையா இருக்கலாம். குற்றம் ரொம்ப பெரிசா இருந்தா தூக்குத்தண்டனையாக்கூட இருக்கலாம்.
இது போலத்தான் இங்கேயும். சின்ன கர்ம பலன் ஒரு நாள் காய்ச்சலில கழிந்து போகலாம். இன்னும் கொஞ்சம் பெரிசு ஒரு வார படுக்கையாப்போகலாம். இன்னும் கொஞ்சம் பெரிசு கை கால் ப்ராக்சர் ஆகி ஆபரேஷன்ல முடியலாம். செல்வம் நம்ம வீட்டிலேந்து திருடு போறதா இருக்கலாம். இன்னும் அதிகமா போனா நாள் பட்ட தீராத வியாதியா அது வரலாம். ப்ராயச்சித்தங்கள் இந்த அபராதங்கள் கட்டறா மாதிரி. கேஸ் அப்பீலுக்கு போறா மாதிரி. ஓரளவுக்கு தண்டனையை குறைச்சுக்கலாம். ஆனா ஆயுள் சிறை என்கிறா மாதிரி தண்டனையிலேந்து அபராதம் கட்டி வெளியே வர முடியாதில்லையா? அதே சமயம் ஆயுள் 5-10 வருஷ தண்டனையா குறைக்கப்படலாம். தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையா மாற்றப்படலாம். அதாவது முழுக்க தீரலைன்னாலும் கொஞ்சம் கொஞ்சம் ரிலீப் இருக்கும்.
ப்ராயச்சித்தங்கள் குறிச்சு ஜோதிடர்கள்கிட்ட மாறுபட்ட கருத்துக்கள் இருக்கு. சிலர் அதெல்லாம் கிடையவே கிடையாது என்பார்கள். சிலர் எல்லாத்துக்கும் ப்ராயச்சித்தங்கள் சொல்லுவார்கள். சிலர் கேட்டால் மட்டுமே சில கண்டிஷன்களோட சொல்லுவார்கள். சொல்றேன்; நீ நிச்சயமா செய்வியா? நீ செய்யாட்டா எனக்கு அதுல கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு என்பார்கள். ஜாதகத்தில இவர் செய்யறதுக்கு சாதகமான அம்சங்கள் இருக்குன்னு தோணிணா மட்டும் சிலர் சொல்வாங்க.
கொஞ்சம் யோசிச்சு பாத்தா இங்கே கொஞ்சம் தமாஷ் இருக்கு. ஜோதிடர்களோட ப்ரெடிக்‌ஷனே பிரச்சினைகளோட போக்கையும் நிர்ணயிக்கிறா மாதிரி தோணலே? உதாரணமா ஒத்தர் இந்த ஜோதிடரை நம்பி வரார். ஜோதிடர் ஜாதகத்தை பாத்துட்டு "ஒண்ணும் செய்ய முடியாது; காலாகாலத்துக்கும் இதை அனுபவிக்க வேண்டியதுதான்"னு சொல்லறார்ன்னு வெச்சுப்போம். வந்தவர் வருத்தத்தோட "ஹும்! நமக்கு வாய்ச்சது அவ்ளோதான்" ன்னு அதை தீர்க்க ஒரு முயற்சியும் செய்யாம விட்டுடலாம். அதுக்கு வாய்ப்பு இருக்கவே இருக்கு. தீர்ந்து இருக்கக்கூடிய பிரச்சினை தீராதுன்னு சொன்னதால தீராமலே போயிடுமே!
அப்படி ஏதும் நடந்தா அதுவும் இறையின் விளையாட்டுன்னு எடுத்துக்கலாம்! தீர வேண்டிய கேஸா இருந்தா இவர் இன்னொரு ஜோதிடர்கிட்டப்போய் கன்சல்ட் பண்ணி பரிகாரம் தேடிப்பார்!

Thursday, May 25, 2017

ஆன்மீக விசாரம் - 13

ஒவ்வொரு நம்பரையும் மனசில பதிஞ்சு நூறு வரைக்கும் எண்ண உங்களால முடியாதுன்னு தெரியும். போனாப்போறதுன்னு இன்னும் ஒரு சிம்பிள் பயிற்சி. மூச்சை இழுங்க. அதை கவனியுங்க. மூச்சை விடுங்க. அதை கவனியுங்க. அவ்ளோதான். தொடர்ந்து இதை 5 நிமிஷம்ன்னு ஆரம்பிச்சு 20 நிமிஷம் வரை பயிற்சி செய்துப்பாருங்க.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த மனசுதான் நம்மை நம்மோட சுயரூபத்தை தெரிய விடாம தடுக்கறது. எண்ணங்கள் குறைவாகி பின்னே இல்லாமலே போகணும். அது எங்கேயோ இருக்கு; வேற லெவல்; நமக்குச்சரிப்படாதுன்னு நினைக்காம சின்ன பயிற்சி செய்வோம். இது மனசை கவனிக்க பழகிய பிறகு செய்யணும். எவ்வளவு தூரம் ஆழ்ந்துன்னா, மனசு ட்ராக் மாறுவதை கவனிக்கும் அளவு. முன்னே எப்போத்தான் பிச்சுண்டுதுன்னு தெரியாம பிச்சுண்டு போயிடும்ன்னு சொன்னேன் இல்லையா? இப்ப எவ்வளவு கவனக்குவிப்பு இருக்கணும்ன்னா இந்த பிச்சுண்டு போற ப்ராசசையே கவனிக்கும் அளவு. அது பாட்டுக்கு போகட்டும். பதற வேணாம். அது எங்கே போறது. இப்ப இருக்கற எண்ணம் என்ன? சரி. அடுத்து வர எண்ணம் என்ன? சரி. இதை எல்லாம் மாத்த முயற்சிக்காம தொடர்ந்து கொண்டே போகணும்.  
ஆமாம். முன்னே பயிற்சியில ஓடின மனசை திருப்பி கொண்டு வான்னு சோன்னோம். மந்திர ஜபம் செஞ்சோம்; மனசு எங்கேயோ ஓடித்து; திருப்பி அதை ஜபத்துக்கு கொண்டு வா. மூச்சை கவனிச்சோம். மனசு பாட்டுக்கு வேறெங்கோ ஓடித்து; திருப்பி மூச்சை கவனிக்கறதுக்கு வா.
இப்ப இது இன்னும் அட்வாஸ்ட் ஸ்டேஜ். ஓடட்டும். தொடர்ந்து போ. அது என்ன நினைக்கிறது, நல்லதா கெட்டதான்னு எல்லாம் ஒரு ஜட்ஜ்மெண்டும் வேணாம். சும்மா கவனி.

இது மைண்ட்புல்னெஸ், விபாசனா தியானம்ன்னு எல்லாம் சொல்லறாங்க. இதோட விவரம் எல்லாம் அந்த ஸ்டேஜ் வந்தா பேசிக்கலாம்; என்ன சொல்றீங்க?

பகவான் ரமணர் சொன்னது இதுக்கு ஒரு படி அடுத்து. மனசை கவனி ஓடட்டும்; இது யாருக்கு வரதுன்னு கேட்டுக்கோ. அடுத்த எண்ணம் வரதா? வரட்டும்; கவனி; இந்த எண்ணம் யாருக்கு வரதுன்னு கேட்டுக்கோ. நான், எனக்குன்னு பதில் வரும். இந்த நான் என்கிறது யார்ன்னு விசாரி. அவ்ளோதான். இந்த பயிற்சியை ராத்திரி படுக்கப்போகும் போதும் காலை எழுந்த உடனும் அஞ்சு அஞ்சு நிமிஷம் செய்யச்சொல்லறார். அவ்ளோதான். மத்தபடி நம்மோட லோகாயத வேலைகளை கவனிக்கலாம்!
இந்த நான் என்கிறது உடம்பு இல்லை; மனசு இல்லை, புத்தி இல்லை என்கிறதெல்லாம் ஒரு தரம் விசாரிச்சாலே எஸ்டாப்ளிஷ் ஆயிடும். அப்புறம் அதுக்கு விடை கிடைக்காது. மனசு அப்படியே நிக்கும்…. அடுத்த எண்ணம் வரும் வரை. அப்புறம் பழைய கதையேதான். இந்த எண்ணம் யாருக்கு வரது? எனக்குன்னா அந்த நான் யார்?

Wednesday, May 24, 2017

ஆன்மீக விசாரம் - 12

மனசை வீணா அலைக்கழிக்க வேண்டாம். ஏதேனும் யோசிக்கணும்ன்னா அது வொர்தியா இருக்கணும். இதை இப்ப யோசிச்சு என்ன செய்யப்போறோம்? ஒண்ணுமில்லைன்னு பதில்ன்னா யோசிக்க வேணாம். இந்த ரூலை அப்ளை பண்ணப்பண்ண பலதும் ஒண்ணும் பிரயோஜனமில்லைன்னு அடிபட்டுப்போகும். ஆரம்பத்துல புத்தியை பயன்படுத்தி இதை செய்ய வேண்டி இருந்தாலும் காலப்போக்கில இது ஆடோமேடிக்கா நடக்கும். போகப்போக எண்ணங்கள் குறைவாயிடும்.
இந்த மாதிரி ப்ராக்டிஸைத்தான் ஞான யோகத்தில நித்யாநித்ய வஸ்து விவேகம்ன்னு சொல்வாங்க. நித்ய அநித்ய வஸ்து. பிரயோஜனமில்லாத விஷயத்தை யோசிக்கிறது வீண்; அதால ஒண்ணும் நடக்கப்போறதில்லை. அது அநித்ய வகை.
மனசு ஆனை மாதிரி; அதுக்கு எதாவது செஞ்சு கொண்டே இருக்கணும். பாகன் ஒரு சின்ன குச்சியை அது கிட்ட கொடுத்துடுவானாம். பெரிய பெரிய மரத்தை எல்லாம் கூட அனாசயமா தூக்கிண்டு போகிற இந்த ஆனை அந்த சின்ன குச்சியையை துதிக்கையில பிடிச்சுண்டு அது பாட்டுக்கு இருக்குமாம். அதே போல மனசுக்கும். வேலைதானே? நா கொடுக்கிறேன், இந்தான்னு வேலையை கொடுத்துட்டா அது பாட்டுக்கு அதை பார்த்துக்கொண்டு இருக்கும். அப்படி என்ன வேலை கொடுக்கறது? ஆரம்ப காலங்களில மந்திர ஜபம் நல்ல வேலை. அது உபதேசமான மந்திரமோ அல்லது யாரும் செய்யக்கூடிய நாம ஜபமோ, எப்படி வேணுமானாலும் இருக்கட்டும். ஆரம்பத்திலே மத்த எண்ணங்களே அதிகமா வந்து போகும். சளைக்காம அதெல்லாம் அப்புறம் ஆகட்டும்; இப்ப மந்திர ஜபம் மட்டுமேன்னு சொல்லிண்டு திருப்பித்திருப்பி தொடரணும். நாளடைவில அது பாட்டுக்கு ஒரு தனி ட்ராக்ல ஓடிண்டு இருக்கும்! வேற ஏதோ சிந்தனைகள் வந்து அடச்சீ ஜபத்துக்கு இல்லே உக்காந்தோம்ன்னு பாத்தா இந்த மந்திரம் பாட்டுக்கு ஒரு லெவல்ல ஓடிண்டு இருக்கும். இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிஞ்சு ஏதோ ஒரு ஸ்டேஜ்ல மந்திரம் அதோட ரிதம்ல அதோட ஸ்பீட்ல ஓடும். அப்புறம் நமக்கு வேலையில்லை. சும்மா உக்காந்துண்டு அதை கவனிக்கறது மட்டுமே வேலை! இந்த ருசி கிடைச்சுட்டா, ஆஹா!
பல வருஷங்களுக்கு முன்னே ஸ்வாமி தயாநந்தர் சொல்லிக்கொடுத்த டெக்னிக் மனசை அமைதிப்படுத்தும். அது பெரிய வேலை ஒண்ணுமில்லை; இருந்தாலும் தொடர்ந்து செய்ய பயிற்சி வேணும். வேடிக்கையா இருக்கே? என்ன அதுன்னா…
'அமைதியா' ஒரு இடத்தில உக்காந்து கொண்டு கண்களை மூடி பெரிய மூச்சு இழுத்துவிட்டு மனசை கவனிக்க ஆரம்பிக்கணும். என்ன யோசிச்சுக்கொண்டு இருக்கோம் இப்ப? இப்படி கவனிக்க ஆரம்பிச்சா அது அமைதியாயிடும்! அமேசிங்!
பின்னே எங்கேப்பா கேட்ச்? இதுக்கு என்ன பெரிய பயிற்சின்னா….
அது அங்கேயே நிக்காது. கவனம் சிதறி அடங்கி இருக்கிற மனசு எப்போ பிச்சுண்டுதுன்னு தெரியாம அது பாட்டுக்கு நடந்துடும்!
இந்த கவனம் வைக்கிறது என்கிறதுதான் நமக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு. சின்ன பசங்களை கான்சென்ட்ரேட் பண்ணுன்னு நாம பாட்டுக்கு சொல்லுவோம். ஆனா அதை செஞ்சு பாத்தாத்தான்…. ஹிஹிஹிஹி… கஷ்டமாத்தான் இருக்கு!
அதுக்கு ஒரு சின்ன பயிற்சி. என் அண்ணன் செய்யறதை பார்த்து இருக்கேன்.
ஒண்ணுலேந்து நூறு வரை எண்ணுங்க!
தூ! இதென்ன பிசாத்து வேலைன்னு சொல்றீங்களா? ஒரு சின்ன கண்டிஷன். ஆட்டோமேடிக்கா தடதடன்னு சொல்லிண்டு போகாம மெதுவா ஒவ்வொரு நம்பர் சொல்லறதையும் நினைவுல வெச்சுக்கற மாதிரி சொல்லிண்டு போகணும்! அஹா! முயற்சி பண்ணிப்பாருங்க!

Tuesday, May 23, 2017

ஆன்மீக விசாரம் - 11


என்னால இன்னும் முடியும்ன்னு நினைக்கறவங்க மனசை புத்தியால கண்ட்ரோல் பண்ணப்பார்க்கலாம். ரெண்டும் ஒண்ணுதானே? ஆமாம். புத்தி என்கிறது ஸ்திரமான ரூபம்; மனசு என்கிறது சலனப்படற ரூபம். இதுல ஒரே நேரத்துல ரெண்டு ஸ்திதியிலேயும் இருக்க முடியுமா? ம்ம்ம்ம்…. முடியலாம். இருந்தாலும் ஒண்ணுதான் டாமினெண்ட்டா இருக்கும். அது மனசா இல்லாம புத்தியா இருக்கும்படியா பாத்துண்டா போதும்.
இதுக்குப்பார்வை மாறணும். நம் வாழ்க்கையை வேத்து மனுஷனா பார்க்கக் கத்துக்கணும். இதைத்தான் சாட்சி பாவம் என்கிறாங்க. இப்படி நடக்கறதா? ஐயோ இப்படி நடக்கறதே இது எனக்கு சௌகரியமில்லையேன்னு புலம்பறது மனசு. ஓஹோ! இப்படி நடக்கறதா? அது எனக்கு சௌகரியமில்லை. மாத்த முடியுமா? முடியும்னா எப்படி? இந்த ரீதியில போகிறது புத்தி. இதுல உணர்ச்சிகள் மேலோங்காது என்கிறதால பிரச்சினைகள் குறையும். ஆனா பொதுவா மனிதனுக்கு இந்த உணர்ச்சிகள் இல்லாம இருக்கறது பிடிக்கறதில்லை. என்ன இது, மெஷின்தனமான வாழ்க்கை என்பாங்க!
இன்னொரு வழி எண்ணங்களை படிப்படியா குறைத்துக்கொண்டே போவது. கடைசியா அடைய வேண்டிய நிலை மனமில்லா சாந்த நிலை.
மனசு ரொம்பவே பவர்புல் என்பார் ஸ்வாமி சிவானந்தர். நினைத்தது நடக்கும்.
'ஹாஹ்ஹாஹ்ஹா! எத்தனை நினைச்சு இருப்பேன்? ஒண்ணு கூட நடக்கறதில்லை' ன்னு பலரும் ஆட்சேபனை சொல்லலாம். பிரச்சினை என்னன்னா நினைப்பு ஒண்ணா மட்டும் இருக்கறதில்லை! ஒண்ணை விரும்பின மாத்திரத்தில் அடுத்தது க்யூவில் வந்து நிக்கும். சின்மயானந்தா சொல்லுவார் ' உன் மனசில் அது வேணும்ன்னு நினைக்கிறாய். ரைட், அதை கொண்டு வரேன்னு மனசு கிளம்பும். அது கொஞ்ச தூரம் போகிறதுக்குள்ள எனக்கு இது வேணும்ன்னு இன்னொரு ஆசை வரது. சரி அதை விட்டுட்டு இதை கொண்டு வரேன்னு மனசு திசை திரும்பறது. சீக்கிரமே அடுத்த ஆசை வந்துடும். இதனால மனசு சுத்திண்டே இருக்குமே ஒழிய அதால எதையும் சாதிக்க முடியாமப் போகும்.'
உண்மைதானே! நமக்கு ஆசைகள் கொஞ்சமா நஞ்சமா? லோகத்தில பார்க்கிற எதானாலும் அது எனக்கு வேணும்ன்னு தோணிண்டே இருக்கும்! காந்தி சொல்லுவார் 'இந்தியாவில குறைந்த பட்ச தேவைகளை எல்லாருக்கும் நிறைவேத்த முடியும். அத்தனை வளம் இருக்கு. ஆனா ஒத்தனோட எல்லையில்லாத எல்லா விருப்பங்களையும் நிறைவேத்த இந்த உலகமே போறாது!'
அதனால நம்மோட விருப்பங்களை குறைக்க குறைக்க அது நிறைவேறும் சாத்தியம் அதிகமாகும்.
அதே போல எண்ணங்களை குறைக்கக்குறைக்க அவை வலுப்பெறும். ஒரு பார்வையில் பார்க்கிறதோட சாதக பாதகங்கள் புரிந்துபோகும். என்ன செய்யணும் என்கிறது தெளிவா இருக்கும். படிப்படியா எண்ணங்களை குறைத்து எண்ணங்களில்லாத நிலைக்கு போவதே நோக்கம். மாறாக நாம என்ன செய்யறோம்? நமக்கு சம்பந்தமில்லாத பல விஷயங்களையும் போட்டுக்குழப்பிக்கறோம். ட்ரம்ப் என்ன செய்தால் நமக்கு என்ன? டீம் ஏ ஜெயிச்சா என்னா தோத்தா என்ன? இன்னார் அரசியலுக்கு வந்தா என்ன வராட்டா என்ன? பல விஷயங்கள் நமக்கு சம்பந்தமே இல்லாதவை. சிலது அப்படி இருந்தாலும் நம்மால எதுவும் செய்ய முடியாதவை. உலகத்தைப்பார்த்து இது இப்படி இருக்கே அது அப்படி இருக்கேன்னு புலம்பறவங்க ஒண்ணுத்தையும் சாதிக்கப்போறதில்லை. சமூக வலைதளங்களில சர்வ சாதாரணமா இதை பார்க்கிறோம். ஏதோ ஒரு சம்பந்தமில்லாத சின்ன விஷயத்தை வெச்சுக்கொண்டு குடுமிப்பிடி சண்டையே நடக்கிறது. நடப்பு சமாசாரமா இருந்தாக்கூட பரவாயில்லே. குலோத்துங்க சோழன் இப்படி செஞ்சானா இல்லையா? அது சரியா தப்பா? யோவ்! தெரிஞ்சு இப்ப என்ன செய்யப்போறே?
ரைட் ரைட் இத்தோட நிறுத்திக்கலாம். எடுத்த விஷயம் புரிய இது போதும். மனசை வீணா அலைக்கழிக்க வேண்டாம்.

Monday, May 22, 2017

ஆன்மீக விசாரம் - 10

அடிப்படையில ஆன்மீகம் மனசை கையாளுவதுதான். மனசுன்னு ஒரு திரை முன்னே இருக்கும் வரை உள்ளே இருக்கிற தெய்வீகம் ஒளி விடறது இல்லை. அஹங்காரம் இருக்கிற வரை 'ஜீவன்'னும் அஹங்காரம் போய்விட்டதை 'பரம்'ன்னும் சொல்கிறோம். அதாங்க ஜீவாத்மா பரமாத்மா. ஜீவன் நான்னு நினைச்சுண்டே இருக்கும் வரைதான் பிரச்சினைகள் எல்லாம். நான் போய் விட்டா பலதும் சரியாகப்போயிடும். இதுக்குத்தான் ரமணர் எப்பவும் கேள்வி கேக்கற நீ யாரு? என்கிற ரீதியில பதில்களை கொடுப்பார்.
ஆனா அது அவ்வளவு சுலபமாவா இருக்கு?
இமாலயத்துல சாது ஒத்தர் யாத்திரை போனார். போகிற வழி எல்லாம் சிவோஹம் சிவோஹம்ன்னு சொல்லிண்டே போனாராம். மேலே போகப்போக குளிர் தாங்கலை. சிவோஹம்ன்னு சொல்லிண்டு இருந்தவர் இப்ப ஜீவோஹம் ஜீவோஹம்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாராம்!
ரொம்ப முன்னேறினவர்களுக்கே இந்த கதிதான்.
ஸோ என்ன செய்யலாம்?
முதல் படியா மனசை மடை மாத்தி விடக்கத்துக்கலாம். எப்பவுமே வெளி உலகத்தையே சுத்தி வந்துகிட்டு இருக்கும் இந்த மனசை பகவான் பக்கம் செலுத்தி விடலாம். கோப தாபங்கள் நம்மை அவ்வளோ சுலபமா விட்டு போகிற மாதிரி இல்லை. ஆசாபாசங்கள் எப்பவும் இருக்கவே இருக்கு. ரைட். இது எல்லாத்தையும் பகவான் பக்கமே திருப்பிடுவோம். இது பக்தி மார்க்கம். சண்டை போடணுமா? பகவான் கூட சண்டை போடு. எனக்கு இப்படி ஏன் நடக்கலை அப்படி ஏன் நடக்கலை, இது ஏன் கிடைக்கலைன்னு இருக்கற எல்லா தாபங்களையும் அவன்கிட்டேயே சொல்லு. (கொடுத்தாலும் கொடுத்துடுவான், ஜாக்கிரதை! அது நம்ம நல்லதுக்கு இல்லாம இருக்கலாம்.) சின்ன வயசில ஒரு சினிமா பார்த்தது. ரங்காராவ் பெருமாள்கிட்ட 'இன்னைக்கு மாடு கன்னு போட்டுது' ரீதியில எல்லாத்தையும் ரிபோர்ட் பண்ணுவார். அது போல! என்ன படம்ன்னு கேக்கறீங்களா? யாருக்கு நினைவு இருக்கு? சினிமா எக்ஸ்பெர்ட் கீக்காவுக்கு இருக்கலாம்.
ஏதோ ஒரு ஸ்டேஜ்ல ச்சே! இப்படி எல்லாமா பகவான்கிட்ட கேக்கறதுன்னு தோணலாம். அப்புறம் நாம் கேக்கற விஷயம் மாறிப்போகலாம். சுய நலம்ன்னு இல்லாம பொது நலத்துக்கு கேட்கலாம். மெதுவா அதுவும் குறைஞ்சு போய் 'அவனுக்குத்தெரியாதா என்ன எப்போ வேணும்ன்னு' அப்படின்னு தோணிப்போய் கேக்கறதையே நிறுத்திடலாம். அவன் பக்கம் கவனத்தை திருப்பிட்டாப்போதும்; காலப்போக்கில மெதுவா நாம முன்னேறிடுவோம். என்ன கிடைக்கறதோ அது பகவத் ப்ரசாதம்ன்னு ஏத்துண்டு இருப்போம். இது ஒரே ஜன்மாவிலேயும் நடக்கலாம்; சில ஜன்மாக்கள் ஆனாலும் ஆகலாம். அவரவர் கர்மாவை பொருத்தது.
வேற என்ன செய்ய முடியும்?