Pages

Friday, November 16, 2012

குருவே சரணம்

 

ஒருவருக்கு வாழ்வில் என்ன கிடைக்கிறதோ இல்லையோ குரு கிடைக்க வேண்டும்.

நம் வாழ்வில் அம்மாவே முதலில் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார். பின் தந்தை. அதன் பின் பள்ளியில் ஆசிரியர்கள் உலகாயத வித்தை கற்றுத்தருவர். நாமே பலரைப்பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வோம். இதெல்லாம் லௌகீக சமாசாரங்கள்.

நாம் உலகில் பிறப்பது கர்மாவை தீர்த்து, ஆன்மீகத்தில் முன்னேறவே. அப்படி முன்னேறுவதையே சரியான முன்னேற்றம் என்று சொல்லலாம். நமக்கு ஏற்படும் மற்ற வசதிகள் - நல்ல வேலை, பணம் காசு, வீடு என்றெல்லாம் அமைவது இந்த முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கவே. இது ஏணிதான். ஏணியிலேயே யாரும் உட்கார்ந்து கொள்வார்களா என்ன? அதன் உதவியுடன் மேலே போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டும். அது போல கிடைக்கும் இந்த வசதிகளை அனுபவிப்பதிலேயே நம் வாழ்க்கையை கழித்து விடக்கூடாது. ஆன்மீக நிலையில் மேலே போக பார்க்க வேண்டும்.
இந்த பயணத்தில் வேதங்களையோ, சாத்திரங்களையோ, அல்லது நாம் நடந்து கொள்ள வேன்டிய முறைகளையோ சொல்லித்தருபவர் ஆசான், ஆசார்யன். அதன் படி நாம் நடந்து வரும் போது சில சமயம் சரியான நேரத்திற்கு ஒரு வழி காட்டி வந்து இப்படி போ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அத்துடன் அவர் வேலை முடியும். இவர் வழிகாட்டி, மார்க்க தர்சி. ஆனால் கடைசியாக கூடவே இருந்து முக்திக்கு வழி காட்டுபவரே உண்மையான குரு.

எல்லோருக்கும் ஒவ்வொரு குரு இருப்பார். அவரை கண்டு பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையானால் ஆன்மீக முன்னேற்றத்தை அதிகம் பெற இயலாது. திருப்பித் திருப்பி பிறந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். குரு அருள் பெறாதவர்களுக்கு அவர் உலகின் மறு கோடியில் இருப்பார் என்பார்கள். அந்த மறு கோடி எது? உலகை ஒரு சுற்று சுற்றினால் அடைவது நம் முதுகு பக்கத்தைதான் என்றார் விஷயம் தெரிந்த ஒரு குழந்தை! அதாவது நம் பார்வை அவரை விட்டு எதிர் திசையில் போய் விடுகிறது! ஆனால் அவரோ நம்மை பார்த்துக்கொண்டே இருக்கிறார். சினிமா போல கவர்ச்சியான இந்த உலக வாழ்க்கையிலேயே உழன்று கொண்டு இருந்தால் குரு கவலையுடன் பார்த்துக்கொண்டு இருப்பார். எப்போது அதை விட்டு ஆன்மீகம், இறைவன், குரு என்று பார்வையை திருப்புகிறோமோ அப்போது சந்தோஷமாக நமக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிடுவார். அவரிடம் முழுக்க சரண் அடைந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்; அப்புறம் பிரச்சினையே இல்லை. நமக்கு வேண்டியதை அவரே பார்த்துக்கொள்வார். ஆனால் இந்த பூரண சரணாகதி என்பதுதான் ரொம்பவே கஷ்டம்!

அது வரை அவர் சொல்லுகிற வேலைகளை முழு முயற்சியுடன் செய்து வர வேண்டும். அது நம் புத்திக்கு என்னதான் 'சில்லி' யாக தோன்றினாலும், என்னதான் முடியவே முடியாது என்று தோன்றினாலும்! நாம் கடை தேர ஒரே நிச்சய வழி இதுவே!
--

ஆரம்ப காலத்தில் வலை உலகில் வலைப்பூக்களை மேய்ந்த போது சோகமே மிஞ்சியது. ஒரே அடிதடியைத்தான் பார்க்க முடிந்தது. இது பற்றி விவாதித்துக்கொண்டு இருந்த போது மா.சிவகுமார் "ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்? இதற்கு மாற்று நல்ல விஷயமாக நீங்களே எழுதுவதுதான்” என்றார். அப்போது நானும் எழுதுகிறேன் பார் என்று எழுத ஆரம்பித்து நல்ல சேதியிலிருந்து ஆன்மீகத்துக்கு மாறி விளையாட்டாக 1007 பதிவுகளைத்தாண்டி 1008 ஆம் பதிவில் நிற்கிறேன்.

ஆன்மீகம் தெரிந்ததால் எழுதவில்லை. அதை தெரிந்து கொள்ளவே எழுத ஆரம்பித்தேன். புரிந்து கொள்ளாமல் எழுத முடியாது என்பதால், படித்ததை என் மொழியில் எழுதினால் ஒரு தெளிவு கிடைத்தது. ஒரு விஷயம் பற்றி எழுதி முடித்ததும் அடுத்ததற்கு தானாக விஷயம் வந்து சேர்ந்தது. ஒரு புத்தகம் பார்வைக்கு வரும்; யாரேனும் ஒரு கேள்வி கேட்பார்கள். இப்படி ஏதோ ஒன்று எழுத எடுத்துக்கொடுத்தது. அந்த ஏதோ ஒன்று இறைவனே என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை!

ஆன்மீகம் பார் டம்ப்மீஸ் என்று எழுதக்காரணம் வெகு பிரபலமான கணினி சார் வெளியீடுகளான … for dummies புத்தகங்களே. அதாவது அடிப்படை தெரியும் என்று நினைக்காமல் எல்லோருக்கும் புரியும் படி அடிப்படையிலிருந்து சொல்லிக்கொடுப்பது. அப்படி எழுதவே முயற்சி செய்தேன். மிகவும் சவாலாக இருந்தது ஞான மார்கம் குறித்து எழுதியதுதான்.

இப்படியே தொடர்ந்து ஓரளவு வெற்றியும் பெற்று விட்டேன் என்றால் அதற்கு காரணம் குருவருளும் பெரியவர்கள் ஆசீர்வாதமும்தான். ஆரம்பத்தில் ஆன்மீகம் யார் படிக்கப்போகிறார்கள் என்று நினைத்தாலும் எழுதுவதன் நோக்கம் வேறாக இருந்ததால் பிரச்சினை இருக்கவில்லை. இருந்தாலும் 1008 பதிவுகளும் 110 பாலோயர்களும் தினசரி சுமார் 100 பேஜ்ஹிட்டும் ஆன்மீகம் படிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. அது சீரியஸாக படிக்கீறார்களோ, சும்மா படிக்கிறார்களோ, தெரிந்து கொள்ள படிக்கிறார்களோ வேறு எதற்கோ! இருந்துவிட்டு போகட்டுமே! அது என்றோ ஒரு நாள் வேலை செய்யும்!

நல்ல விஷயங்கள் புரிகிறாற்போல இருந்திருந்தால் அது இறை அருள். புரியாமல், சரியாக எழுதாமல் இருந்திருந்தால் அது என் குறை.

நன்றி!

3 comments:

பொன். வாசுதேவன் said...

அருமை சார். நன்றி.

திவாண்ணா said...

நல்வரவு, வக்கீல் சார்!

sury siva said...

guror charanam ghachaami.

subbu rathinam